மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 23 அக் 2020

1985- 2020:சிலுவம்பாளையத்தில் எடப்பாடி படைத்த சரித்திரம்!

1985- 2020:சிலுவம்பாளையத்தில் எடப்பாடி படைத்த  சரித்திரம்!

தமிழக முதல்வரும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று அக்டோபர் 17 தன்னுடைய சொந்த கிராமமான சிலுவம் பாளையத்தில் அதிமுகவின் 49 ஆவது ஆண்டுவிழாவை முன்னிட்டு கட்சிக் கொடியை ஏற்றி வைத்திருக்கிறார்.

இந்த நிகழ்ச்சிக்காக சென்னையில் உள்ள அதிமுகவின் தலைமை கழகத்தில் ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வத்தோடு அவர் கட்சியின் ஆண்டு விழாவில் கலந்து கொள்வதாக தான் இருந்தது. ஆனால் கடந்த அக்டோபர் 12 ஆம் தேதி இரவு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் தவசாயி அம்மாள் காலமானதை தொடர்ந்து... அவரது மகன் என்ற முறையில் குடும்ப ரீதியான சடங்குகளுக்காக முதல்வர் எடப்பாடி தனது சொந்த கிராமத்திலேயே இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

13ஆம் தேதி பிற்பகல் துக்கம் விசாரிக்க வந்த துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமியோடு தனியாக சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது கட்சியின் ஆண்டு விழாவுக்கு தான் வரமுடியாத சூழல் இருப்பதையும் தான் இங்கிருந்தே கொடி ஏற்றுகிறேன் என்றும் சொல்லி இருக்கிறார் எடப்பாடி.

அதற்கு ஓ பன்னீர்செல்வம், "இந்த சடங்குகளை எல்லாம் தவிர்க்க கூடாது. உங்க சவுகரியம் போல வாங்க" என்று கூறியுள்ளார்.

இந்த சந்திப்புக்குப் பிறகு தான் சிலுவம்பாளையத்திலேயே அதிமுகவின் 49வது ஆண்டுவிழா கொடியேற்று நிகழ்வை உறுதிப்படுத்திக் கொண்டு அதற்கான ஏற்பாடுகளைச் செய்யச் சொன்னார் எடப்பாடி.

சேலத்திலிருந்து சிலுவம்பாளையம் கிராமம் சுமார் 55 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. எனவே பத்திரிகையாளர்களை சேலம் கலெக்டர் அலுவலக வாசலில் இருந்து இன்று அதிகாலை 5 மணிக்கு சேலம் புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் வாகனங்கள் பிக்கப் செய்து கொண்டு சுமார் 7 மணி அளவில் சிலுவம்பாளையத்திற்கு வந்தன. பத்திரிகையாளர்கள் கூட்டம் ஒருபக்கம் என்றால் சேலம் புறநகர் மாவட்ட நிர்வாகிகள் அதிமுக தொண்டர்கள் என சுமார் 1000 பேர் திரண்டு விட்டனர். ராஜ்யசபா எம்பி சந்திரசேகரும் வந்திருந்தார்.

சிறிது நேர காத்திருப்புக்குப் பின் தனது வீட்டு வாசலுக்கு அருகில் உள்ள அதிமுக கொடி கம்பம் அருகே நடந்து வந்தார் எடப்பாடி பழனிச்சாமி. அதிமுகவின் 49வது ஆண்டு விழா என்றாலும் முதல்வரின் தாயார் மறைந்து சில நாட்களே ஆன நிலையில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டங்கள் தவிர்க்கப்பட்டன. நிரந்தர முதல்வர் எடப்பாடியார் வாழ்க, மீண்டும் வேண்டும் எடப்பாடி யார் என்ற கோஷங்கள் மட்டும் அவர் வரும்போது ஒலித்தன. பச்சை வண்ண மேடை அமைக்கப்பட்டிருந்தது. மேடை முகப்பில் ஒருபக்கம் எடப்பாடி பழனிசாமி, இன்னொருபக்கம் ஓ.பன்னீர் செல்வம் என இருவரின் முழு உருவப் படங்களும் சம அளவில் பொறிக்கப்பட்டிருந்தன.

மேடையேறிய எடப்பாடி அங்கே வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் ஜெயலலிதா உருவ படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்திவிட்டு அதிமுக கொடிக் கம்பத்தில் தயாராக இருந்த கொடியை ஏற்றி, அதன் கயிறையும் பொறுமையாக தானே கட்டினார். அங்கிருந்த தொண்டர்களை நோக்கி இரட்டை விரலை காட்டி விட்டு சில நிமிடங்களில் நடந்து வீட்டுக்கு சென்றுவிட்டார்.

எடப்பாடியில் இருக்கும் அதிமுக பிரமுகர்கள் சிலரிடம் பேசினோம்.

“ எம்.ஜி.ஆரோட நேர்முக உதவியாளரா இருந்த மகாலிங்கம் சொன்னதை இன்னிக்கு பேப்பர்ல படிச்சோம். 1972 ஆவது வருஷம் இதே அக்டோபர் மாசம் 17 ஆம் தேதி காலை 10 மணிக்கு ராமாவரம் தோட்டத்துல இருந்து டென்ஷனா கிளம்பி ராயப்பேட்டை அன்னை சத்யா கல்யாண மண்டபத்துக்குப் போறாரு. அப்ப மகாலிங்கத்தையும் கார்ல கூட்டிக்கிட்டுப் போறாரு. இப்ப கட்சி ஆபீசா இருக்குற சத்யா திருமண மண்டலத்துலதான் அதிமுக கட்சி பெயரை வெளியிடுறாரு. எட்டு நாளைக்குள்ள கட்சி பெயர், கொடி முடிவு பண்ணின எம்ஜிஆர் தன்னோட சொந்த சொத்தான அன்னை சத்யா கல்யாண மண்டபத்தை கட்சி ஆபீசா மாத்தினாரு.

இப்ப அதிமுகவுக்கு இரட்டைத் தலைமை புதுசா இருக்குற மாதிரி சிலர் பேசுறாங்க. ஆனா எம்.ஜி.ஆர். காலத்துலயே எம்.ஜி.ஆர். முதல்வராவும் நாவலர் நெடுஞ்செழியன், ப.உ.சண்முகம், ராகவானந்தம் பொதுச் செயலாளராவும் இருந்திருக்காங்க. அதேபோலதான் இப்ப எடப்பாடியும், ஓ.பி.எஸ்.சும் இருக்காங்க” என்றவர்கள் தொடர்ந்து

“எம்ஜிஆர் ஆரம்பிச்ச அதிமுகவின் 49 ஆவது ஆண்டு விழா இன்னிக்கு இந்த சின்ன கிராமமான சிலுவம்பாளையத்தில முதல்வர் முன்னிலையில நடக்கறதால எங்க ஊருக்கு சரித்திரத்துல ஒரு இடம் கிடைச்சிருச்சு இதுபோன்ற அதிர்ஷ்டம் யாருக்கும் கிடைக்காது. ஒரு சாதாரண தொண்டனாக எந்த ஊரில் 1985 ஆம் ஆண்டு அதிமுக கொடி கம்பத்தை நட்டு அதில் கொடி ஏற்றினாரோ... அதே கொடிக்கம்பத்தில் அதே தொண்டன் இந்த நாட்டின் முதல்வராக இருந்து அதிமுகவின் 49 வது ஆண்டு விழாவுக்காக கொடியேத்தியிருக்கார் எடப்பாடி. முதமுதல்ல இங்க அதிமுக கொடியை ஏத்தும்போது காங்கிரஸ், திமுகவினரெல்லாம் எதிர்ப்பு தெரிவிச்சிருக்காங்க. அதையெல்லாம் தாண்டிதான் இங்க சாதாரண ஒரு தொண்டனா கொடியேத்துனாரு. இப்ப மாநிலத்துக்கே முதல்வரா இருந்து கொண்டாட்டத்தோட கொடியேத்துறாரு”என்று சிலிர்த்துக்கொண்டனர்.

-ஆரா

சனி, 17 அக் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon