வேளாண் சட்டம்: தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்!

politics

மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் மசோதாக்கள் விவசாயிகளுக்கு எதிராக இருப்பதாகக் கூறி நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் நிராகரித்து மூன்று மசோதாக்களுக்கும் நேற்று குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததன் மூலம் அவை சட்டமாகின.

இந்த நிலையில் மூன்று சட்டங்களை திரும்பப் பெறக் கோரி தமிழகம் முழுவதும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் இன்று (செப்டம்பர் 28) கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. காஞ்சிபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். இதற்காக சென்னையிலிருந்து காஞ்சிபுரத்திற்கு காரில் சென்ற ஸ்டாலின், இடையில் வயலில் களை எடுக்கும் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பெண்களை சந்தித்து உரையாடினார்.

இதன்பின்னர் காஞ்சிபுரம் மாவட்டம் கீழம்பி கிராமத்தில் இயற்கை எழில் சூழ வயல்வெளிகளுக்கு நடுவே சமூக இடைவெளியுடன் அமைக்கப்பட்டிருந்த ஆர்ப்பாட்ட மேடைக்கு சென்றார். அப்போது பச்சை நிறத் துண்டும், மாஸ்கும் அணிந்திருந்தார். குறைவானவர்களே கலந்துகொண்ட அந்த ஆர்ப்பாட்டத்தில் மேடையில் இருந்தவர்கள், எதிரே கீழே நின்றவர்கள் உள்பட அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடித்தனர்.

அப்போது பேசிய ஸ்டாலின், “விவசாயிகளின் வயிற்றில் அடிக்கிறது மத்திய அரசு என்றால்; மாநில அரசு விவசாயிகளைக் காலில் போட்டு மிதிக்கிறது. இருவரும் சேர்ந்து வஞ்சிப்பதை மக்களுக்கு எடுத்துச் சொல்லத்தான் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது” என்று ஆரம்பித்தவர்,

மத்தியில் ஒருவர் பிரதமராக இருக்கிறார். அவர் தன்னை ஏழைத் தாயின் மகன் என்று சொல்லிக் கொள்கிறார். இந்த ஏழைத்தாயின் மகன் ஆட்சிக்கு வந்த பிறகுதான் ஏராளமான இந்திய மக்கள் ஏழைகள் ஆனார்கள். புதிது புதிதாக ஏழைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் ஏழைத்தாயின் மகன்.

மாநிலத்தில் ஒருவர் முதலமைச்சராக இருக்கிறார். அவர் தன்னை விவசாயி என்று தம்பட்டம் அடித்துக்கொள்கிறார். அவர் ஆட்சிக்கு வந்த பிறகு தான் விவசாயிகளின் வாழ்க்கையே பறிபோய்க் கொண்டிருக்கிறது. ஏழைத் தாயின் மகனும், இந்த விவசாயியும் சேர்ந்து ஏழை மக்களுக்கோ, விவசாயிகளுக்கோ எந்த நன்மையும் செய்யவில்லை. தொடர்ந்து விவசாயிகளுக்கு விரோதமான செயல்களை, கெடுதல்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அதனை போட்டி போட்டுக் கொண்டு செய்கிறார்கள் என்றும் சாடினார்.

விவசாயத்தை முன்னேற்றப் போவதாக சொல்லி மூன்று சட்டங்களை மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ளது. கொஞ்சம் யோசியுங்கள். இந்தச் சட்டங்களால் விவசாயிகளுக்கு ஏதாவது நன்மையுண்டா? நன்மை இல்லை என்றாலும் பரவாயில்லை, தீங்கு விளைவிக்கக்கூடாதல்லவா?இந்தச் சட்டத்தால் விவசாயிகள் பின்தங்கி விடுவார்கள். நிலத்தில் இருந்து துரத்தப்படுவார்கள். அதனால்தான் அந்தச் சட்டங்களை எதிர்க்கிறோம் என்று சுட்டிக்காட்டிய ஸ்டாலின், ஒட்டுமொத்த இந்தியாவே இந்தச் சட்டத்துக்கு எதிராக கொந்தளித்து போராட்டத்தை நடத்தி வருகிறது. இவ்விவகாரத்தில் தமிழக அரசு நீதிமன்றம் செல்லாவிட்டால் தமிழக மக்களின் சார்பாக எதிர்க்கட்சியான நாங்கள் நீதிமன்றத்துக்குச் செல்வோம் என்றார்.

மேலும், “தன்னை விவசாயி, விவசாயி என்று சொல்லும் எடப்பாடி விவசாயி அல்ல; விவசாயி என்று சொல்லி ஏமாற்றும் விஷவாயு என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்லிக்கொள்கிறேன்.ஒருவர் விபத்தில் பலியாக கிடக்கும் போது கழுத்தில் இருந்த நகையைத் திருடுவது போலத்தான் கொடுமையான கொரோனா காலத்தில் இந்தக் கொடுமையான சட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறார்கள்

கொரோனா காலத்திலும் கொள்ளை அடிக்கும் இந்த கொடியவர்களின் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டார்கள். மிகச்சிறிய அளவில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. நம் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசித்து, அடுத்தகட்டப் போராட்டத்தை அறிவிப்போம். நிச்சயம் இந்தச் சட்டங்களைத் திரும்பப் பெறும்வரை போராடுவோம்” என்று உரையாற்றினார் ஸ்டாலின்.

சென்னை கொருக்குப்பேட்டை, பவர் ஹவுஸ், வைத்தியநாதன் பாலம் அருகில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்துகொண்டு உரையாற்றினார். கந்தன்சாவடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வைகோ எம்.பி பங்கேற்றார். அப்போது, விவசாய துரோக சட்டங்களை திரும்பப் பெற வேண்டுமென முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர் சேகர்பாபு, தாயகம் கவி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது பேசிய பாலகிருஷ்ணன், ““தி.மு.க கூட்டணி நடத்தும் ஆர்ப்பாட்டம் பா.ஜ.க அரசுக்கு மட்டும் அல்ல அ.தி.மு.க அரசுக்கும் சேர்த்து சாவு மணி அடிக்கும் ஆர்ப்பாட்டம்.பா.ஜ.க அரசு 21ஆம் தேதிதான் வேளாண் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. ஆனால் அதிமுக அரசு 16ஆம் தேதியே சட்டத்தை ஆதரித்துவிட்டது. அ.தி.மு.க ஆட்சி என சொல்வதை விட மோடி ஆட்சி என தமிழக அரசின் பெயரை மாற்றிக்கொள்ள வேண்டும்” என்று சாடினார்.

வள்ளுவர் கோட்டம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சிற்றரசு தலைமை தாங்கினார். இதில் திராவிடர் கழக துணை தலைவர் கலிபூங்குன்றன், திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கண்டன உரையாற்றினார். இதேபோல தஞ்சையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசனும், கடலூரில் விசிக தலைவர் திருமாவளவனும் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். இதுதொடர்பாக திருமாவளவன், “விவசாய உற்பத்தி, வணிகம், போன்ற யாவற்றையும் கார்ப்பரேட்’மயமாக்குவதன் மூலம் விவசாய குடிகளுக்கு இந்த சட்டங்கள் எதிராக உள்ளன.) மாநில அரசுகளின் அதிகாரங்கள் மற்றும் உரிமைகளைப் பறிக்கின்றன. நாடாளுமன்றத்தில் அடாவடித்தனமாக இவை நிறைவேற்றபட்டுள்ளன” என்று குறிப்பிட்டார்.

கோவில்பட்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக எம்.பி. கனிமொழி பங்கேற்றார். திருச்சி அண்ணா சாலையில் திருவெறும்பூர் எம்.எல்.ஏவும், மாவட்ட பொறுப்பாளருமான அன்பில் மகேஷ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்கள் சுமார் 200க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வயல்வெளியில் இறங்கி நூதன முறையில் தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

இதேபோல தமிழகத்தின் அனைத்து ஒன்றியம், நகரம், மாவட்டப் பகுதிகளில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் ,’ விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டத்தை திரும்ப பெறு’ என்ற வாசகத்துடன் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.

*எழில்*

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *