திமுக -காங்கிரஸ் கூட்டணி ஆட்சி: துண்டு போடும் குண்டு ராவ்

politics

அடுத்து வரும் ஆட்சி திமுக-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியாக இருக்கும் என்று தமிழக காங்கிரஸின் புதிய பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து அவர் விளக்கமும் அளித்துள்ளார்.

தமிழக காங்கிரஸின் புதிய மேலிடப் பொறுப்பாளராக கர்நாடகத்தைச் சேர்ந்த குண்டுராவ் நியமிக்கப்பட்டார். இதையடுத்து கடந்த 21 ஆம் தேதி பெங்களூரு சென்ற தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, தமிழக பொறுப்பாளரான குண்டுராவை சந்தித்தார்.

ராகுல் காந்திக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்படும் தினேஷ் குண்டுராவுடன் அழகிரி நடத்திய முதல் சந்திப்பில், தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் பெற இருக்கும் இடங்கள் பற்றி முதல்கட்ட ஆலோசனை நடத்தப்படலாம் என்று மின்னம்பலம் வெளியிட்ட [குண்டுராவ்-அழகிரி முதல் சந்திப்பு: திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு எத்தனை இடங்கள்?]( https://www.minnambalam.com/politics/2020/09/22/18/dinesh-gundurao-ks-azhagiri-meeting-congress-seats-mumber-in-dmk-allaiance) என்ற தலைப்பிலான செய்தியில் குறிப்பிட்டிருந்தோம்.

இந்த அரசியல் பின்னணியில் இன்று (செப்டம்பர் 24) சென்னை வந்த தினேஷ் குண்டுராவ் காமராஜர் அரங்கத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, “தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெறும். மொத்த இடங்களையும் திமுக காங்கிரஸ் கூட்டணியே கைப்பற்றும். தமிழகத்தில் திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமையும்” என்று தெளிவான ஆங்கிலத்தில் கூறினார். அவர் coalition government என்று கூறாமல் allaince government என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்.

ஏற்கனவே திமுக 200 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் வேட்பாளர்களை நிறுத்த திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வரும் நேரத்தில், தமிழக காங்கிரஸ் புதிய பொறுப்பாளரான குண்டுராவின் இந்தப் பேச்சு கூட்டணிக்குள் சலசலப்பைக் கிளப்பியது,

இதை உணர்ந்த குண்டுராவ் அடுத்த சில மணித்துளிகளில் எழுத்துபூர்வமான ஓர் அறிக்கையை வெளியிட்டார், அதில், “2021 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்று ஆட்சியமைக்க தமிழக காங்கிரஸ் கட்சி பாடுபடும். கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட எங்கள் தலைவர் ராகுல்காந்தி, தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் வரவேண்டும் என்ற தமது விருப்பத்தை தெரிவித்திருந்தார்.

மக்களவைத் தேர்தலுக்கு முன்பே, ராகுல் காந்தியை அடுத்த பிரதமர் என முதன்முதலாக மு.க.ஸ்டாலின் அறிவித்ததை, நாங்கள் நன்றியுணர்வுடன் நினைவில் கொண்டுள்ளோம்.

இத்தகைய அறிவிப்பால் கவரப்பட்ட தமிழக மக்கள், மொத்தமுள்ள 40 மக்களவை தொகுதிகளில், 39 தொகுதிகளில் திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியை அமோக வெற்றி பெறச் செய்தனர்.

அதேபோன்று, மு.க.ஸ்டாலின் அடுத்த முதலமைச்சராக வேண்டும் என்ற ராகுல்காந்தியின் கனவை நிஜமாக்கும் வகையில், வரும் தேர்தலை தி.மு.க.வுடன் காங்கிரஸ் இணைந்து சந்திக்கும்.

2021 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் நிலை இதுதான் என்பதை நான் வலியுறுத்திக் கூறுகின்றேன். வியாழக்கிழமை காலை சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், நான் தெரிவித்த கருத்துகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதால், இந்த விளக்கத்தை அளிக்கின்றேன்”என்று கூறியுள்ளார்.

தமிழகத்தில் கலைஞர் காலத்தில் இருந்தே திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சி முழக்கம் அவ்வப்போது எழுந்து அடங்குவது வழக்கமாக இருக்கிறது. இந்த முறையும் அப்படித்தானா அல்லது தினேஷ் குண்டுராவின் முதல் பேச்சே திட்டமிட்டு அமைந்திருக்கிறதா என்ற கேள்வி திமுக வட்டாரத்தில் உலவுகிறது

**-வேந்தன்**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *