வேளாண் மசோதாக்களை எதிர்த்தது ஏன்? எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன்

politics

வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தது குறித்து எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

விவசாயம் சம்பந்தப்பட்ட இரண்டு மசோதாக்களை மாநிலங்களவையில் வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நேற்று அறிமுகப்படுத்தினார். மக்களவையில் இதனை அதிமுக எம்.பி ரவீந்திரநாத் ஆதரித்ததோடு, இதன் மூலம் தமிழகத்தின் பொருளாதாரம் உயரும் எனவும் நம்பிக்கை தெரிவித்திருந்தார். முதல்வரும், தமிழக விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் வகையில் வேளாண் திட்டங்கள் உள்ளன என ஆதரவு தெரிவித்திருந்தார்.

ஆனால், மாநிலங்களவையில் இம்மசோதாக்களை அதிமுக எம்.பி எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் கடுமையாக எதிர்த்தார். மசோதா மாநிலங்களின் உரிமையை பறிக்கிறது எனவும், கார்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக இருக்கிறது என்றும் சாடினார். மக்களவையில் ஆதரித்து, மாநிலங்களவையில் எதிர்த்த அதிமுகவின் நிலைப்பாடு விமர்சனங்களை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தனது எதிர்ப்பு தொடர்பாக விளக்கம் அளித்த எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், “குறைகளைச் சுட்டிக்காட்டுவது என்பது நம்முடைய கடமை, உரிமையும் கூட. குறைகளை சுட்டிக்காட்டுவதற்கு நான் பயப்படமாட்டேன். ஆனால், மேலிடத்திலிருந்து மசோதாவை ஆதரித்து வாக்களியுங்கள் எனத் தெரிவித்தார்கள். அதனால் மசோதாவை ஆதரித்து வாக்களித்தேன். ஆனால், இந்த விவகாரத்தில் நான் நினைத்தது வேறு” என்று தெரிவித்துள்ளார்.

ரவீந்திரநாத் புதிய உறுப்பினர் என்பதால் வேளாண் மசோதாக்களை ஆதரித்தார். ரவீந்திரநாத் ஆதரித்ததால் நானும் ஆதரிக்க வேண்டும் என்பது இல்லை. தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் கிடைக்காத போது விமர்சிக்க வேண்டும் என்றும் பாலசுப்பிரமணியன் கூறினார்.

எனினும், “மாநிலங்களவை விவாதத்தில் உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களை முன்வைக்கலாம். ஆனால், வேளாண் மசோதா தொடர்பான அதிமுகவின் நிலைப்பாடு என்பது முதல்வர் வெளியிட்ட அறிக்கையில் உள்ளதுதான்” என்று விளக்கம் அளித்தார் அமைச்சர் ஜெயக்குமார்.

**எழில்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *