மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 28 அக் 2020

திமுகவில் இணைந்தார் அமைச்சரின் அண்ணன் மகன்!

திமுகவில் இணைந்தார் அமைச்சரின் அண்ணன் மகன்!

அமைச்சர் செங்கோட்டையனின் அண்ணன் மகன் செல்வன் திமுகவில் இணைந்தார்.

அதிமுகவில் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருக்கும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனின் அண்ணன் காளியப்பன் மகன் செல்வன். இவர் தமிழ்நாடு மருந்து வணிகர் சங்கத்தின் மாநிலச் செயலாளர், அகில இந்திய மருந்து வணிகர் சங்கத்தின் பொருளாளர் உள்ளிட்ட பதவிகளை வகிக்கிறார். அத்துடன் செங்கோட்டையனுக்கு அரசியல் ரீதியாக உறுதுணையாகவும் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் செல்வன் திமுகவில் இணையப்போகும் தலைவர் செங்கோட்டையனுக்கு கிடைக்க, அவர் செல்வத்துடன் பேசிப்பார்த்துள்ளார். செல்வன் அண்ணன் மற்றும் மாமனார் மூலமாகவும் பேசியுள்ளார். ஆனால், தான் திமுகவில் இணையும் முடிவில் செல்வன் உறுதியாக இருந்தார். இதுதொடர்பாக திமுகவுக்குச் செல்லும் செங்கோட்டையன் அண்ணன் மகன்? என்ற தலைப்பில் விரிவாக செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்த நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (செப்டம்பர் 16) திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்த செல்வன், திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். இதுதொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில், ஈரோடு வடக்கு மாவட்டத்தை சேர்ந்த அதிமுக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் அண்ணன் மகன் குள்ளம்பாளையம் கே.கே.செல்வன் மற்றும் கோபி கே.ஈ.கதிர்பிரகாஷ், திரு. கோபி ஆர்.துரைசாமி ஆகியோர் திமுகவில் இணைந்தனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக முக்கிய அமைச்சரின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரே திமுகவில் இணைந்துள்ளது அக்கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கொங்கு பகுதியில் திமுகவின் செல்வாக்கு வளர்ந்து வருவதையே இத்தகைய இணைவுகள் காட்டுவதாகக் கூறுகிறார்கள் திமுகவினர்.

எழில்

புதன், 16 செப் 2020

அடுத்ததுchevronRight icon