மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 28 அக் 2020

போயஸ் வீடு, அண்ணா பல்கலை: நிறைவேறிய முக்கிய மசோதாக்கள்!

போயஸ் வீடு, அண்ணா பல்கலை: நிறைவேறிய முக்கிய மசோதாக்கள்!

போயஸ் இல்லத்தை அரசுடமையாக்குவது உள்ளிட்ட மசோதாக்கள் சட்டமன்றத்தில் நிறைவேறியது.

தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று முன் தினம் தொடங்கி நடைபெற்று வந்தது. இறுதி நாளான இன்று (செப்டம்பர் 16) முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டதோடு, மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன.

உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2016 டிசம்பர் மாதம் உயிரிழந்தார். அவர் வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா நிலைய இல்லத்தை அரசுடமையாக்குவதற்கு தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பித்து, அரசாணை வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில் போயஸ் இல்லத்தை அரசுடைமையாக்கும் மசோதா சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அத்துடன் ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை அமைப்பதற்கான மசோதாவையும் செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தாக்கல் செய்தார். இந்த இரண்டு மசோதாக்களும் எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் நிறைவேறின. இதனைத் தொடர்ந்து சட்டமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார்.

முன்னதாக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதகாலம் நீட்டிக்கும் மசோதாவை அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்தார். இந்த மசோதா மூலமாக தனி அலுவலர்களின் பதவிக்காலம் 2020 டிசம்பர் 31 வரை நீடிக்கப்பட உள்ளது. இதனால் அதுவரை நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறாது என்பது தெளிவாகியுள்ளது.

இதுபோலவே, அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிக்கும் சட்ட மசோதாவைத் தாக்கல் செய்தார் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன். மாநிலம் முழுவதும் உள்ள இணைப்புக் கல்லூரிகளை நிர்வாகம் செய்ய வசதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

விவாதத்தில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்முடி, “திமுக ஆட்சியில் அண்ணா பல்கலைக் கழகத்தை நான்காக பிரித்ததை நீங்கள் ஏன் ஏற்கவில்லை” என்று கேள்வி எழுப்பினார். மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட 4 இடங்களில் அண்ணா பல்கலைக் கழகம் ஏற்படுத்தப்பட்டது. ஆனால், அதனை அதிமுக ஆட்சியில் ரத்து செய்துவிட்டார்கள் என்று குற்றம்சாட்டினார். இதனைத் தொடர்ந்து இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

இவை உள்பட 18 மசோதாக்கள் இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

எழில்

புதன், 16 செப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon