மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 28 அக் 2020

எ.வ.வேலுவும் மெடிக்கல் காலேஜும்- சட்டமன்றத்தில் நடந்த சைடு விவாதம்!

எ.வ.வேலுவும்  மெடிக்கல் காலேஜும்- சட்டமன்றத்தில் நடந்த சைடு விவாதம்!

தமிழ்நாடு சட்டமன்றம் கலைவாணர் அரங்கத்தில் 14ஆம் தேதி தொடங்கி இன்றோடு முடிவடைகிறது.

இன்று (செப்டம்பர் 16) பகல் பொழுதில் சட்டமன்ற வளாகத்துக்குட்பட்ட உணவு சிற்றுண்டி அருந்தும் பகுதியில் சில அதிமுக எம்எல்ஏக்களும் திமுக எம்எல்ஏக்களும் பேசிக் கொண்டிருந்தனர்.

வாய்யா...போய்யா...என உரிமையோடு அழைத்துக் கொள்ளக் கூடிய அளவுக்கு நெருங்கிப் பழகும் இந்த எம்எல்ஏக்கள் பல விஷயங்களைப் பற்றியும் தங்கள் சாப்பாட்டு டேபிளில் பரிமாறிக் கொண்டனர்.

அப்போது அதிமுக எம்எல்ஏக்கள், "என்னய்யா... அடுத்த ஆட்சியும் எங்க ஆட்சி தான் வரும் போலருக்கே..." என்றார்கள் சிரித்துக்கொண்டே . உடனே எதிரில் அமர்ந்திருந்த திமுக எம்.எல்.ஏ.வோ, “உங்களுக்கு இன்னும் ஆறு மாசம் தான்யா. அடுத்து அமையப் போறது எங்க ஆட்சிதான். வேணும்னா நீங்க மட்டும் எம்எல்ஏவா ஜெயிச்சு வாங்க. இப்ப நீங்க எங்களுக்கு உதவி பண்ற மாதிரி நாங்க உங்களுக்கு உதவி பண்றோம் " என்று வாய் விட்டு சிரித்தார்.

விடாத அதிமுக எம்எல்ஏக்களோ, “அட உங்க தலைவருக்கு நெருக்கமான எ.வ.வேலுவுக்கே இந்த டவுட் இருக்கு. அதனால தான் ஆட்சி முடியறதுக்கு ஆறு மாசமே இருக்கும்போது, அவரோட மெடிக்கல் காலேஜுக்காக அவசரமா சிஎம்மை பாத்திருக்காரு, விஜயபாஸ்கரை பாத்திருக்காரு. பாத்து பேசி முடிச்சு மெடிக்கல் காலேஜை திறந்துட்டாரு. ஏன் திமுக ஆட்சிக்கு வரும்னு நம்பிக்கை இருந்தா ஆறு மாசம் வெயிட் பண்ணி உங்க ஆட்சியிலேயே அனுமதி வாங்கி இருக்க வேண்டியதுதானே.? இவ்வளவு அவசரமா ஏன் முதல்வரை பார்த்து அனுமதி வாங்கணும்?” என்று கேட்டார்கள்.

அதற்கு திமுக எம்எல்ஏக்கள், “ஏன்ய்யா... அவரு இங்க வர்றதுக்கு முன்னாடியே ஸ்கூல் காலேஜ் நடத்திக்கிட்டிருந்தவருதான். தொழில் வேற அரசியல் வேற. இந்த வருஷம் மெடிக்கல் கோர்ஸ் இனிமேதான் ஆரம்பிக்கப் போகுது. அப்புறம் எதுக்கு ஒரு வருஷம் வேஸ்ட் பண்ணனும்னு கூட நினைச்சிருக்கலாம். சும்மாவா கொடுத்தீங்க நீங்க?”என்று கிடுக்கிப் பிடி போட்டனர்.

இப்படியே குறிப்பிட்ட அந்த அதிமுக எம்எல்ஏ க்களும் திமுக எம்எல்ஏ க்களும் சுவாரசியமாக பேசிக்கொண்டே இருக்க , சற்று தள்ளி அருகே அமர்ந்து இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்தனர் சில சீனியர் திமுக எம்எல்ஏக்கள். அவர்களுக்குள்ளும் ஒரு உரையாடல் ஓடியது.

“ஏம்ப்பா போன வருசம் டிசம்பர் மாசம் அக்கார்டு ஹோட்டல்ல நடந்துச்சே அந்த மாவட்டச் செயலாளர் கூட்டத்துல தலைவர் பேசினது உனக்கு ஞாபகம் இருக்கா?”

”என்னண்ணே... சொல்லுங்க?”

“நம்ம கட்சியில சில பேரு அதிமுக அமைச்சர்களோடையும் எடப்பாடியோடயும் தொடர்புல இருக்கறதா எனக்கு தகவல் வருது, அதையெல்லாம் இத்தோடு நிறுத்திக்கங்க. இல்லேன்னா கடுமையா நடவடிக்கை எடுப்பேன்னு சொன்னாரு தலைவரு. . ஆனா இங்க பாரு எப்படி பேசிக்கிட்டிருக்காங்கனு. இதெல்லாம் எங்க போய் முடியப் போகுதோ?” என்று வடையைப் பிய்த்து வாயில் போட்டுக் கொண்டு புறப்பட்டார்கள்.

வேந்தன்

புதன், 16 செப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon