மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 28 அக் 2020

தேசிய கல்விக் கொள்கை: திமுக வெளிநடப்பு!

தேசிய கல்விக் கொள்கை:  திமுக வெளிநடப்பு!

தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக தீர்மானம் இயற்ற முடியாது என சட்டமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கலைவாணர் அரங்கில் நடைபெறும் சட்டமன்றக் கூட்டத் தொடரின் மூன்றாவது நாளான இன்று (செப்டம்பர் 16) புதிய கல்விக் கொள்கை குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்துபேசினார்.

தேசிய கல்விக் கொள்கை-2020, மாநிலங்களின் கல்வி உரிமைக்கு எதிரானது. மும்மொழித் திட்டம்" என்று திணிக்க முயலுவது, அண்ணாவால் அறிமுகம் செய்யப்பட்டு, கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாகத் தொடர்ந்து நடைமுறையில் இருந்துவரும் இருமொழிக் கொள்கைக்கு முற்றிலும் விரோதமானது என்று சாடிய ஸ்டாலின், “சம்ஸ்கிருத மொழிக்கு மட்டும் கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவம், தமிழ் மொழிக்கும் - ஏனைய இந்திய மொழிகளுக்கும் இல்லை.

3, 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு; ‘பிளஸ் 2’ கல்விமுறையில் மாற்றம் எல்லாம், நம் மாநிலத்தில் வெற்றிகரமாகச் செயல்படும் கல்விமுறையைச் சீர்குலைப்பது ஆகும். ‘குலக்கல்வி’த் திட்டத்தின் மறுவடிவமாக வரும் தொழிற்கல்வி, ஆசிரியர் தேர்வு, ஆசிரியர் பணி குறித்த தர நிர்ணயம் ஆகியன ஏற்றுக்கொள்ள முடியாதவையாக இருக்கின்றன” என்றார்.

மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பாக சட்டப்பேரவையின் அனைத்து உறுப்பினர்களின் மேஜைகள் மீதும் ஒரு புத்தகம் வைக்கப்பட்டிருக்கிறது. அதில் இடம்பெற்றுள்ள பெயர்கள் தமிழில் போடப்பட்டிருக்கிறது. ஆங்கிலத்திலும், இந்தியிலும் பெயர் போடப்பட்டிருக்கிறது. நான் கேட்கிற கேள்வி என்னவென்றால், இது மும்மொழித் திட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக அமைந்திருக்கிறதா - இல்லையா? என்று கேள்வி எழுப்பிய ஸ்டாலின், முதல்வர் அழுத்தம் திருத்தமாக நாங்கள் இருமொழிக் கொள்கையைத்தான் நடைமுறைப்படுத்துவோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று கூறியிருக்கிறார். எனவே இதையும் இந்த அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், “தமிழும் - ஆங்கிலமும் என்ற இருமொழிக் கொள்கை தமிழகத்தின் உயிர் மூச்சாக - உயிர் நாடியாக விளங்கிக் கொண்டிருக்கிறது. ஆகவே இதுகுறித்து உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி முதல்வர் விவாதிக்க வேண்டும் என்று நான் இந்த நேரத்தில் அழுத்தம் திருத்தமாகக் கேட்டுக்கொண்டு, சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தை கூட்டி ஒரு தீர்மானத்தையும் நிறைவேற்றித் தரவேண்டும். சமூக நீதி, கூட்டாட்சித் தத்துவம், சமத்துவம் ஆகியவற்றிற்கும் - தமிழ்மொழிக்கும் விரோதமான, 'தேசிய கல்விக் கொள்கை 2020'-ஐ முழுமையாக எதிர்க்க வேண்டும்'” என்று கோரிக்கை வைத்து உரையை நிறைவு செய்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், “புதிய தேசிய கல்விக் கொள்கையில் உள்ள அம்சங்கள் குறித்து விரிவாக பரிசீலித்து அரசுக்கு பரிந்துரை செய்ய கல்வியாளர்களை கொண்ட இரண்டு வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. உயர்கல்வித்துறை சார்பில் ஒரு வல்லுநர் குழுவும், பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஒரு வல்லுநர் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த குழுவின் அறிக்கை அரசுக்கு வந்ததும் புதிய கொள்கையில் உள்ள ஏனைய அம்சங்கள் குறித்தும் பரிசீலித்து முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார்.

69 சதவீத இடஒதுக்கீட்டை பெற்றுத் தந்த சமூகநீதி காத்த வீராங்கனை ஜெயலலிதா. அவர் வழியில் நடக்கும் தமிழக அரசு சமூக நீதியை விட்டுக் கொடுக்காது. கூட்டாட்சி தத்துவத்திற்கு பங்கம் ஏற்பட்டால் அதனை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்” என்றார்.

இதனைத் தொடர்ந்து பேசிய ஸ்டாலின், “நான் பேசியதற்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் விளக்கமளித்துப் பேசினார். அவரது விளக்கத்தைத் தீர்மானமாக நிறைவேற்றித்தரக் கோரினோம். அரசின் விளக்கத்தைவிடத் தீர்மானம் தான் ஒட்டுமொத்த சட்ட ப்பேரவையின் எண்ணவோட்டத்தை வெளிப்படுத்தும்.ஆனால், எங்களது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. எனவே, இதனைக் கண்டித்துத் திமுக சார்பில் வெளிநடப்புச் செய்கிறோம்” என்று தெரிவித்தார். பின்னர் திமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். சிறிது நேரத்திற்குப் பிறகு மீண்டும் அவை நடவடிக்கைகளில் கலந்துகொண்டனர்.

எழில்

புதன், 16 செப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon