மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 28 அக் 2020

எல்லையில் சீனா ஆக்கிரமித்துள்ளது: ஒப்புக்கொண்ட மத்திய அரசு!

எல்லையில் சீனா ஆக்கிரமித்துள்ளது: ஒப்புக்கொண்ட மத்திய அரசு!

இந்திய எல்லைப் பகுதியைச் சீனா ஆக்கிரமித்துள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 16ஆம் தேதி இந்தியச் சீன படைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில் சீன தரப்பில் 35க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவித்தன.

இந்திய பகுதிகளை சீனா ஆக்கிரமித்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்ட, “ இந்திய எல்லைக்குள் யாரும் ஊடுருவவில்லை. . நம் மண்ணில் ஒரு அங்குல இடத்தைக் கூட யாரும் ஆக்கிரமிக்க முடியாத அளவுக்கு நமது படைகள் பலம் வாய்ந்தவை” என கடந்த ஜூன் 19ஆம் தேதி நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

இந்த நிலையில் லடாக்கில் சீன படையினரின் அத்துமீறல் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என்று மக்களவையில் நேற்று (செப்டம்பர் 15) காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் பிரதமர் பதில் அளிக்க வேண்டும் என்ற காங்கிரஸ் எம்.பி.க்களின் கோரிக்கையை ஏற்க மக்களவை சபாநாயகர் மறுத்தார். இதனையடுத்து அவையிலிருந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, எல்லை விவகாரம் குறித்து பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “சீனாவுடனான எல்லைப் பிரச்சினை தீர்க்கப்படாமல் உள்ளது. இப்போது வரை, பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு எதுவும் இல்லை. எல்லை தொடர்பான ஒப்பந்தங்களை சீனா மதிப்பதில்லை. யூனியன் பிரதேசமான லடாக்கில் 38,000 சதுர கி.மீ பரப்பளவை சீனா சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது.

அதேபோல 1963ஆம் ஆண்டு சீனா, பாகிஸ்தான் எல்லை ஒப்பந்தத்தின்படி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் 5,180 சதுர கி.மீ. பரப்பளவையும் சீனா ஆக்கிரமித்துள்ளது. 1993 மற்றும் 1996-ம் ஆண்டுகளில் சீனாவுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களின்படி எல்லையில் வீரர்களை குவிக்கக் கூடாது. இருந்தாலும், ஒப்பந்தத்தை மீறி சீனா செயல்படுகிறது” என்று குற்றம்சாட்டினார்

எல்லை தொடர்பான இரு நாடுகளின் கருத்தும் வேறு வேறாக உள்ளது என்று குறிப்பிட்ட ராஜ்நாத் சிங், “சீனாவின் ஊருடுவல் முயற்சிகளை இந்திய ராணுவம் தொடர்ந்து தடுத்து நிறுத்தி வருகிறது. எல்லையில் சீன ராணுவத்தின் செயல்பாட்டை பொறுத்தே இருநாடுகளின் உறவு அமையும்” என்றும் கூறினார்.

இதுதொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “சீன ஆக்கிரமிப்பு விவகாரத்தில் மோடி பொய் சொல்லி இருக்கிறார் என்பது, பாதுகாப்பு துறை அமைச்சரின் அறிக்கையில் இருந்து தெளிவாக தெரிகிறது. நம் நாடு எப்போதும் ராணுவத்திற்கு ஆதரவாக இருந்திருக்கறது, இனியும் இருக்கும். மோடி அவர்களே சீனாவின் பெயரை சொல்லக் கூட அஞ்சி நடுங்காதீர்கள்” என்று சாடியுள்ளார்.

எழில்

புதன், 16 செப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon