மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 21 ஜன 2021

பாமகவுடன் கூட்டணி அமையுமா? திருமாவளவன் பதில்!

பாமகவுடன் கூட்டணி அமையுமா? திருமாவளவன் பதில்!வெற்றிநடை போடும் தமிழகம்

2021 சட்டமன்றத் தேர்தலில் பாமகவுடன் கூட்டணி வைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என திருமாவளவன் தெளிவுபடுத்தியுள்ளார்.

அண்மையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த பாமக நிறுவனர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் எங்களுக்கு எந்த பகையும் இல்லை என கூறியிருந்தது அரசியல் அரங்கில் விவாதத்தை உண்டாக்கியது. இதனால் பாமக, விசிக கட்சிகள் ஒரே கூட்டணிக்குள் இடம்பெறுமா என்றெல்லாம் பேச்சுக்கள் எழுந்தன.

இந்த நிலையில் தி இந்துவுக்கு இன்று (செப்டம்பர் 16) பேட்டியளித்துள்ள விசிக தலைவர் திருமாவளவன், “பாமகவுடன் கூட்டணி அமைப்பது மிகப்பெரிய சமரசமாகவும், சந்தப்பவாதமாகவும் அதே சமயம் முட்டாள்தனமாகவும் இருக்கும். சாதக, பாதக அம்சங்களை அமைதியாகவும் தீவிரமாகவும் ஆராய்ந்த பின்னரே பாமகவுடன் கூட்டணி அமைக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டை எடுத்தோம்” என்று தெரிவித்தார். ராமதாஸுடன் தனக்கு தனிப்பட்ட விரோதம் இல்லை எனவும், ஐந்து ஆண்டுகள் தமிழ் பாதுகாப்பு இயக்கம் என்ற பெயரில் தாங்கள் இருவரும் நெருங்கி பணியாற்றியதாகவும் திருமாவளவன் விளக்கினார்.

விசிக அல்லது வேறு எந்த கட்சியுடனும் தங்களுக்கு பகையில்லை என ராமதாஸ் தெரிவித்தது குறித்த கேள்விக்கு, அதனை அர்த்தமற்றதாக உணர்ந்ததாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். “ராமதாஸ் ஆரம்பத்தில் புரட்சிகர சக்தியாக வலம்வந்தார். தமிழ் கலாச்சாரம், மக்கள், சமூக நீதிக்கு ஆதரவாக போராட்டங்களை முன்னெடுத்தார். தன்னை அம்பேக்கரியவாதியாக, பெரியாரியவாதியாக, மார்க்சியவாதியாக அடையாளப்படுத்தினார். அதன் அடிப்படையில் அவருடன் அரசியலில் இணைந்து பணியாற்ற விரும்பினோம். ஆனால், மீண்டும் அவர் சாதிய சக்தியாக மாறிவிட்டார்” என்று சாடினார்.

மேலும், அரசியல் லாபத்துக்காக சாதியை துருப்புச்சீட்டாக பயன்படுத்துவதாக ராமதாஸ் மீது திருமாவளவன் குற்றம்சாட்டினார். “ராமதாஸ் அரசியல் செல்வாக்கை இழக்கும்போதெல்லாம், அவர் மீண்டும் சாதி அரசியலுக்கு செல்கிறார். தொழிலாளர் வர்க்கங்களான தலித் அல்லாதவர்கள் மற்றும் தலித்துகள் இடையிலான வேறுபாடுகளை கூர்மைப்படுத்துகிறார். அவர் தலித்துகளுக்கும் தலித் அல்லாதவர்களுக்கும் இடையிலான பிளவுகளை உருவாக்குகிறார் என்று நான் கூறவில்லை - சாதி காரணமாக சமூகத்தில் பிளவு ஏற்கனவே உள்ளது. ஆனால், அவர் சாதி மோதலை அரசியல் லாபத்திற்காக பயன்படுத்துகிறார். இது ஆபத்தானது - மக்களிடையே உள்ள வேறுபாடுகளை அகற்ற நாம் பணியாற்ற வேண்டும்” என்று தனது பேட்டியில் வலியுறுத்தினார்.

எழில்

புதன், 16 செப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon