மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 28 அக் 2020

ப.சிதம்பரத்துக்கு ராகுல் தந்த பிறந்தநாள் பரிசு!

ப.சிதம்பரத்துக்கு ராகுல் தந்த பிறந்தநாள் பரிசு!

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி மற்றும் உள்துறை அமைச்சருமான ப.சிதம்பரம் இன்று (செப்டம்பர் 16) தனது 75 வயதை பூர்த்தி செய்து பிறந்தநாள் கொண்டாடுகிறார். கடந்த ஆண்டு ப.சிதம்பரத்தின் பிறந்தநாளில் அவர் ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த வருட பிறந்தநாளை ஒட்டி காங்கிரஸ் தலைவர் சோனியாவும், ராகுலும் ப.சிதம்பரத்துக்கு கௌரவமான ஒரு பிறந்தநாள் பரிசை அளித்துள்ளனர்.

கடந்த செப்டம்பர் 11 ஆம் தேதி காங்கிரசில் நடந்த மிகப்பெரிய நிர்வாகிகள் மாற்றம் கட்சிக்கு புதிய வெளிச்சத்தையும் நம்பிக்கையையும் அளித்திருக்கிறது. இன்னும் நான்கு வருடத்துக்கு இந்தியாவில் எம்பி தேர்தல் கிடையாது. இந்த நான்கு வருடங்களில் ராகுல் காந்தியை இந்திரா காந்தியைப் போல கட்சிக்குள் இரும்புத் தலைவராகக் கொண்டு வரும் நடவடிக்கைதான் இந்த நிர்வாகிகள் மாற்றம் என்கிறார்கள் சில நிர்வாகிகள்.

அவர்களிடம் இதுகுறித்து பேசினோம்.

“ராகுல் காந்தியை எதிர்க்கட்சியினர் பப்பு என்று கேலி செய்தபோது அதற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்ற கடமையுணர்வை மனதில் கொள்ளாமால் பல மூத்த தலைவர்கள், அதை ரசித்து நமுட்டு சிரிப்பு சிரித்தார்கள். ராகுலை தனியாக விட்டுவிட்டார்கள். அந்த ஆதங்கத்தில்தான் தன் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் எங்கள் இளந்தலைவர்.

இப்போது மீண்டும் அவரை தலைவராக பதவியேற்க சொல்லும்போது நான் எந்தக் காரணத்துக்காக ராஜினாமா செய்தேனோ அந்த காரணம் அப்படியே இருக்கிறது என்று பதிலாக சொன்னார்.

இந்த நிலையில்தான் 23 பேரின் கடிதம், அவர்கள் திரும்பத் திரும்ப பத்திரிகையாளர்களிடம் பேசியது, குறிப்பாக ராகுல் காந்தி பற்றி பேசியபோது அவர்களின் உடல்மொழி இதெல்லாம் அவரை துணிச்சலாக முடிவெடுக்கத் தூண்டியது.

எந்த மாநிலத்திலும் தொண்டர்கள் சோர்ந்துபோகவில்லை. எந்த மாநிலத்திலும் ராகுல் காந்தியை தொண்டர்கள் வெறுக்கவில்லை. ஆனால் இருபது முப்பது ஆண்டுகளாக பதவியில் இருக்கும் தலைவர்கள் அணிக்கு விளையாடும் வீரர்களாக இல்லாமல் தனக்கு மட்டுமே விளையாடிக்கொண்டிருந்தார்கள். இதெல்லாம் சீர்தூக்கிப் பார்த்துதான் துணிச்சலான ஒரு முடிவெடுத்துள்ளார்கள் சோனியாவும், ராகுலும்.

ராகுலுக்கு மிகவும் நம்பிக்கைக்குரிய மதுசூதனன் மிஸ்திரி காங்கிரஸ் கட்சியின் தேர்தல் ஆணைய தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அவரை ராகுல் காந்தியின் மனசாட்சி என்றே சொல்லலாம்.

2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி குஜராத் மாநிலம் வதோத்ரா தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் நிறுத்திய நரேந்திர ரவாத் மோடியை எதிர்த்து போட்டியிட தயங்கிய நிலையில் உடனடியாக மதுசூதனன் மிஸ்திரியை மோடிக்கு எதிராக வேட்பாளராக நிறுத்தினார் ராகுல். அந்த அளவுக்கு ராகுல் என்ன சொன்னாலும் கேட்க கூடிய ராகுலின் தீவிர விசுவாசியான மதுசூதனன் மிஸ்திரிதான் இப்போது காங்கிரஸ் கட்சியின் தேர்தல் ஆணையத் தலைவர். இந்த குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த சகோதரி ஜோதிமணியும் இருக்கிறார்.

கட்சியில் நடக்கப் போகும் அடுத்த அமைப்புத் தேர்தல் ராகுலின் விசுவாசிகளையே முற்றிலும் கொண்டிருப்பதாக இருக்கும் என்பதற்கான அறிகுறியே தேர்தல் ஆணைய நியமனம். இதுமட்டுமல்ல முழுக்க முழுக்க பொதுச் செயலாளர்கள் எல்லாம் ராகுல் காந்தியின் தீவிர விசுவாசிகள்தான்”என்கிறார்கள்.

இந்த நிர்வாகிகள் மாற்றத்தில்தான் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்துக்கு சோனியாவும், ராகுலும் அளித்துள்ள பரிசும் அடங்கியிருக்கிறது.

இது தொடர்பாக காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினரும், சமூக தளங்களில் காங்கிரஸுக்காக தீவிரமாக செயல்பட்டு வருபவருமான திருச்சி ஜி.கே. முரளிதரன் மின்னம்பலத்திடம் பிரத்யேகமாக பேசினார்.

“காங்கிரஸ் கட்சியின் இதயம் போன்றது காங்கிரஸ் வொர்க்கிங் கமிட்டி, காரிய கமிட்டி என்றெல்லாம் சொல்லப்படும் மத்திய செயற்குழு. மகாத்மா காந்தி காங்கிரஸ் காரிய கமிட்டியில் கலந்துகொண்டிருக்கிறார். தேசத்தின் பற்பல தியாகத் தலைவர்கள் காங்கிரஸ் காரிய கமிட்டியில் பங்குபெற்றிருக்கிறார்கள்.

தமிழகத்தில் இருந்து இதுவரை காங்கிரஸ் காரிய கமிட்டிக்கு நேரு- இந்திரா காலத்தில் மரகதம் சந்திரசேகர் உறுப்பினராக இருந்தார். அதன் பின் இந்திரா- ராஜீவ் காலத்தில் மூப்பனார் காரிய கமிட்டி உறுப்பினராக இருந்தார். இப்போது சோனியா- ராகுல் காலத்தில் ப.சிதம்பரம் காரிய கமிட்டி உறுப்பினராக ஆக்கப்பட்டுள்ளார். இதுவரையிலான வரலாற்றில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டியில் உறுப்பினராகியிருக்கும் மூன்றாவது தமிழர் ப.சிதம்பரம். இது தமிழகத்துக்கும் தமிழக காங்கிரஸுக்கும் பெரிய கௌரவ கிரீடம்.

காரிய கமிட்டியில் சிறப்பு அழைப்பாளர்கள், நிரந்தர அழைப்பாளர்கள், பொதுச் செயலாளர்கள் என்ற வகையில் பல தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள். தற்போது தமிழகத்தில் இருந்து மூன்றாவது உறுப்பினராக ப.சிதம்பரமும், நிரந்தர அழைப்பாளர்களாக டாக்டர் செல்லகுமார் எம்பியும்,மாணிக் தாகூர் எம்பியும் இருக்கிறார்கள். தமிழக காங்கிரஸ் வரலாற்றில் காங்கிரஸ் காரிய கமிட்டியின் மூன்றாவது உறுப்பினர் என்பது தமிழகத்தின் மூத்த தலைவர் ப.சிதம்பரத்துக்கு சோனியாவும் ராகுலும் கொடுத்த பிறந்தநாள் பரிசுதான்” என்று முடித்தார் ஜி.கே. முரளிதரன்.

-ஆரா

புதன், 16 செப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon