மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 28 அக் 2020

ஜிஎஸ்டி இழப்பீடு: தமிழகத்துக்கு ரூ.11,269 கோடி வராதா?

ஜிஎஸ்டி இழப்பீடு: தமிழகத்துக்கு ரூ.11,269 கோடி வராதா?

மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு அளிக்க தங்களிடம் நிதி இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஊரடங்கின் காரணமாக தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டதாலும், கொரோனா தடுப்புப் பணிகளுக்கு அதிக அளவில் செலவாகி வருவதாலும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையான நிதிச் சிக்கலை எதிர்கொண்டுள்ளன. வருவாய் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் விதமாக தங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டு நிலுவைத் தொகையை விரைவில் விடுவிக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றன.

நடப்பாண்டின் ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான காலாண்டில் மத்திய அரசு மாநிலங்களுக்கு ரூ.1.51 லட்சம் கோடி ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டியுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்துக்கு ரூ.22,485 கோடியும், கர்நாடகாவுக்கு ரூ.13,763 கோடியும், உத்தரப்பிரதேசத்துக்கு ரூ.11,742 கோடி, குஜராத்துக்கு ரூ.11,563 கோடி, தமிழகத்திற்கு ரூ.11,269 கோடியும் மத்திய அரசு ஜிஎஸ்டி இழப்பீடாகத் தர வேண்டியுள்ளது.

இந்த நிலையில் ஜிஎஸ்டி இழப்பீடு தொடர்பாக மாநிலங்களவையில் கேரளாவைச் சேர்ந்த எம்.பி இளமாறன் கரீம் கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய நிதி அமைச்சகம் நேற்று (செப்டம்பர் 15) எழுத்துபூர்வமாக பதிலளித்துள்ளது.

அதில், “கொரோனாவைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் காரணமாக நடப்பாண்டின் ஏப்ரல் - ஆகஸ்ட் வரையிலான மாதங்களில் ஜிஎஸ்டி வசூல் குறைந்துவிட்டது. மாநிலங்களுக்கு வழங்கவேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை வழங்க தற்போது போதுமான நிதியில்லை. ஆகவே, தற்போது மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை வழங்க முடியாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஜிஎஸ்டி இழப்பீட்டுக்குப் பதிலாக 97,000 கோடி கடனாகப் பெற்றுக்கொள்ளலாம் அல்லது 2.35 லட்சம் கோடியையும் திறந்த சந்தையில் கடனாக பெற்றுக்கொள்ளலாம் என இரண்டு வாய்ப்புகளை மத்திய அரசு முன்மொழிந்திருந்தது. எனினும், தமிழகம் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்கள் இரண்டு வாய்ப்புகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்தன.

மத்திய அரசின் பதில் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், “மாநிலங்கள் நிதியைத் திரட்டுவதற்கு குறைவான வாய்ப்புகளே உள்ளன. மத்திய அரசுக்கு கடன் வாங்குவதற்கு ரிசர்வ் வங்கி உள்ளிட்ட பல்வேறு வழிகள் உள்ளன. எங்களால் திறந்த சந்தையில் அதிக வட்டிக்குக் கடன் பெற முடியாது. நீங்கள் கடன் வாங்கித் தாருங்கள் என்று தெரிவித்துவிட்டோம். ஆனால், இது ஏற்கப்படவில்லை. ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையான 12,000 கோடி என்பது எங்களது உரிமை. மத்திய அரசு இந்த நிலையை எடுத்துள்ளது வேதனைக்குரிய விஷயம்” என்று தெரிவித்துள்ளார்.

எழில்

புதன், 16 செப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon