மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 28 நவ 2020

தலைநகர் விவாதம்: 1981 முதல் இன்று வரை!

தலைநகர் விவாதம்: 1981 முதல் இன்று வரை!

தமிழகத்தில் இரண்டாவது தலைநகர் என்கிற கோரிக்கை அவ்வப்போது எழுவதும் அடங்குவதுமாக இருந்து கொண்டிருக்கிறது. 1981 ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் தேதி அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர், மாநிலத்தின் தலைநகர் சென்னையிலிருந்து திருச்சிக்கு மாற்றப்பட வேண்டும் என்று கூறியதை ஒட்டுமொத்த தமிழகமே திரும்பிப் பார்த்தது. கோரிக்கைகளுக்காக பொதுமக்கள் நீண்ட தூரம் அலைச்சலுடன் பயணித்து சென்னையிலுள்ள அலுவலகங்களில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை சந்திக்க வேண்டியிருக்கிறது என்பதை சுட்டிக்காட்டி, தலைநகர் மாநிலத்தின் மையப் பகுதியில் இருக்க வேண்டும் என்று கூறினார். அவரைப் பொறுத்தவரை அது திருச்சியாக இருந்தது.

அந்த சமயத்தில் தலைநகரை மாற்றும் முடிவுக்கு பல பகுதிகளில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரான ராம்ஜெத்மலானி, ‘மனித உடலின் மிக முக்கிய பகுதியான மூளை மையப் பகுதியில் இல்லை. அது தலையின் உச்சியில் இருக்கிறது’ என்று கூறி எம்.ஜி.ஆரின் முடிவை எதிர்த்தார்.

1981-82 காலகட்டத்தில் சென்னையில் கடுமையான குடிநீர் நெருக்கடியை ஏற்படுத்திய வறட்சி நிலைமையை காரணம் காட்டி திருச்சியை தலைநகராக மாற்றுவதற்கான திட்டத்தினை முன்னெடுத்தார் எம்.ஜி.ஆர். தலைநகர் விவகாரம் தொடர்பாக அப்போதைய திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி மற்றும் எம்.ஜி.ஆர் இடையே கடும் வார்த்தைப் போர் மூண்டது. சென்னையில் வறட்சி நிவாரணம் மற்றும் நீர் வழங்கல் நடவடிக்கைகளுக்காக கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய் செலவிடுவதற்கு பதிலாக, அந்த பணத்தை வைத்து திருச்சியை தலைநகராக்கிவிடலாம் என எம்.ஜி.ஆர் பரிந்துரைத்தார்.

ஆனால் திருச்சியை தலைநகராக்க குறைந்தது 1,000 கோடி ரூபாய் செலவாகும் என்று குறிப்பிட்ட கருணாநிதி, “வறட்சி நிவாரணத்திற்காக 50 கோடி செலவிட முடியாத அரசு, புதிய தலைநகருக்காக 1,000 கோடி ரூபாயை எப்படி செலவிடும்” என்று கேள்வி எழுப்பினார். மேலும், எம்.ஜி.ஆர் இந்த திட்டத்தில் தீவிரமாக இல்லை, அந்த நேரத்தில் அரசாங்கத்திற்கு எதிரான பிரச்சினைகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து கவனத்தை திசை திருப்ப விரும்புகிறார் என்றும் குற்றம்சாட்டினார்.

துறைமுக வசதிகளைப் பெற கடற்கரைக்கு அருகில்தான் தலைநகரம் இருக்க வேண்டும் என்று சிலர் வாதிட்டபோது “அமெரிக்க தலைநகர் வாஷிங்டன், இந்திய தலைநகர் டெல்லி ஆகிய இடங்களில் துறைமுகங்கள் இல்லை” என்று விளக்கினார் எம்.ஜி.ஆர். தலைநகர் சென்னையில் ஆளும் கட்சியான அதிமுகவிற்கு ஏற்பட்ட தொடர் தோல்விகளும், திமுகவின் வெற்றியும்தான் சென்னையிலிருந்து தலைநகரை மாற்றுவதற்கான எம்.ஜி.ஆரின் உண்மையான காரணம் என்றும் ஒருபக்கம் பேசப்பட்டது.

எனினும், எம்.ஜி.ஆர் தனது திட்டத்தில் விடாப்பிடியாக முன்னேறிச் சென்றார். திருச்சியின் புறநகர் பகுதியான நவல்பட்டில் அரசாங்கத்திற்கு நிலம் உறுதி செய்யப்பட்டதால் தலைநகருக்கு அப்பகுதி அடையாளம் காணப்பட்டது. திருச்சி வந்தால் எம்.ஜி.ஆர் தங்குவதற்கு, உறையூர் கோணக்கரையில் பங்களாவும் கட்டப்பட்டது. ஆனால், இறுதியில் அரசிற்கு வேறு சில பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்ததால் இந்த யோசனை கைவிடப்பட்டது. 1984 ஆவது வருடம் எம்.ஜி.ஆருக்கு உடல்நலமில்லாமல் போனது, பிரதமர் இந்திரா காந்தியின் இறப்பு, தேர்தல் போன்ற காரணங்களால் தலைநகர் திட்டத்தினை நிறைவேற்ற முடியவில்லை.

இதுபோல முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைநகரை சென்னையிலிருந்து செங்கல்பட்டு மாவட்டத்திற்கு மாற்ற முடிவு செய்தார். இதற்காக கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள திருவிடந்தை பகுதியில் நிலங்கள் அடையாளம் காணப்பட்டது. ஆனால், சில மாதங்களிலேயே அத்திட்டம் கைவிடப்பட்டது. 2015ஆம் ஆண்டு பெருமழை, வெள்ளத்தால் சென்னை முழுவதும் மிகவும் பாதிக்கப்பட்ட நேரம், மீண்டும் இரண்டாவது தலைநகரம் அமைக்க வேண்டும் என்ற விவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது இரண்டாவது தலைநகர் கோரிக்கை மீண்டும் உயிர்பெற்றுள்ளது.

தென் மாவட்ட மக்களின் நலன் கருதி மதுரையை தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக அறிவிக்க வேண்டுமென அமைச்சர் உதயகுமார் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எம்.ஜி.ஆரும் மதுரையை தலைநகராக்க விரும்பியதாக கூறி அமைச்சர் செல்லூர் ராஜு இதனை வழிமொழிந்தார்.

இரண்டாவது தலைநகரமாக திருச்சியை ஆக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை எழுப்பி வரும் திருச்சி மக்களுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திருச்சி மாவட்ட அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ப.குமார், மு.பரஞ்சோதி ஆகியோர் திருச்சியையே இரண்டாவது தலைநகராக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் திருச்சியை தலைநகராக்க வேண்டும் என அப்போதே இயக்கங்களை நடத்தியவரும், திருச்சியை தன்னுடைய பெயரிலேயே சுமந்துகொண்டிருப்பவருமான காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமியிடம் மின்னம்பலம் சார்பாக சில கேள்விகளை முன்வைத்தோம்.

“இரண்டாவது தலைநகர் திருச்சியா அல்லது மதுரையா என முடிவு செய்ய வேண்டியது அரசாங்கம்தான். அதிமுகவின் நிறுவனர் எம்.ஜி.ஆர் திருச்சிதான் தலைநகருக்கு சரியான இடம் என முடிவு செய்து அந்த காலத்திலேயே கூறினார். எம்.ஜி.ஆர் சொன்னதை அவருடைய வழித் தோன்றலான இப்போது இருக்கும் அதிமுக அமைச்சரவை ஏற்றுக்கொள்கிறதா அல்லது எம்.ஜி.ஆர் திருச்சியை தவறாகச் சொல்லிவிட்டார் என்று கூறுகிறார்களா” என்று ஆரம்பத்திலேயே கேள்விகளால் நம்மை எதிர்கொண்டார்.

எம்.ஜி.ஆருடைய விருப்பம் மதுரையை இரண்டாவது தலைநகராக்க வேண்டும் என்பதுதான் என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தித்திருக்கிறாரே?

“அமைச்சர் செல்லூர் ராஜு மிகப்பெரிய பச்சை பொய்யை சொல்லியிருக்கிறார். தெர்மாக்கோலைக் கொண்டு தண்ணீர் ஆவியாதலை தடுத்து நிறுத்த முடியும் என்ற அசகாய சூரனிடம் இதைத் தவிர வேறு எந்த உண்மையையும் எதிர்பார்க்க முடியாது. திருச்சியைத்தான் தலைநகர் ஆக்க வேண்டும் என எம்.ஜி.ஆர் சொன்னது உலகத்துக்கே தெரிந்த உண்மை. அது மிகப்பெரிய விவாதமாக மாறியிருந்தது. அந்த சமயத்தில் செல்லூர் ராஜு அரசியலுக்கு வராமல் சினிமா கொட்டகைகளில் சீட்டு கிழித்துக் கொண்டிருந்திருப்பார்.”

கிட்டத்தட்ட ஆட்சி முடிய இன்னும் 9 மாதங்களே இருக்கும் சூழலில் 10 வருடங்களாக ஆட்சியில் இருந்தவர்கள், இப்போது ஏன் இந்த கோரிக்கையை முன்வைக்கிறார்கள்?

“இது பிரச்சினைகளை திசைதிருப்பும் ஒரு யுக்தியாகவே தெரிகிறது. காரணம், இன்றைக்கு தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களும் மிகக் கடுமையான சோதனையை எதிர்கொண்டுள்ளனர். தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் குறைந்தபட்சம் இரண்டரை கோடி பேர் அன்றாட உணவுக்கே கஷ்டப்படும் சூழலுக்கு வந்துவிட்டனர். ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல முடியாத தர்மசங்கடமான நிலைமை இருக்கிறது. இந்த பாதிப்புகளில் இருந்து மீள இன்னும் எத்தனை நாட்கள் ஆகும் எனத் தெரியவில்லை. உணவுக்கு வழிசெய்யாத அரசு, இதுபோன்ற பிரச்சினைகளில் இருந்து திசைதிருப்புவதற்கு எடுத்துள்ள முயற்சி என்று நான் கருதுகிறேன். இவர்களின் நோக்கம் மதுரையை தலைநகராக்க வேண்டும் என்பதல்ல”

எந்த ஊரை தலைநகராக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?

“ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழ் இலக்கியங்களில் ஊர் எனப்படுவது உறையூர்தான் என்று எழுதிவைத்திருக்கிறார்கள். அதுகூட வேண்டாம். பூகோள அடிப்படையில் தமிழகத்தின் மையப்பகுதி என்பது திருச்சிதான். மாநிலத்தின் அனைத்து பகுதியிலிருந்து இருந்து வருபவர்களுக்கு திருச்சிதான் மையப்பகுதி. மதுரை எனக்கு வேண்டாத ஊர் என்று சொல்லவரவில்லை, அது முக்கியமான நகரம்தான். ஆனால், தலைநகர் என்ற வசதியைப் பொறுத்து பார்த்தோமேயானால் மதுரையை விட திருச்சிதான் பொருத்தமான இடம்”

மதுரையில் எய்ம்ஸ் வரப்போகிறது, உயர் நீதிமன்றக் கிளை உள்ளது, 150 கி.மீட்டரில் துறைமுகம் உள்ளது என தலைநகராக்குவதற்கான காரணங்களை கூறுகிறார்களே?

“இதுபோன்ற அனைத்தும் சென்னையில் மட்டுமே இருப்பதால்தானே அங்கு பிரச்சினைகள் அதிகமானது. அதனால்தானே தலைநகரை மாற்ற வேண்டும் எனக் கூறுகிறார்கள். தண்ணீர் வசதியைப் பொறுத்தவரை வைகையை விட காவிரிதான் அதிக நீர்பிடிப்புள்ள பகுதி. ரயில்வே, விமான நிலையம் என அனைத்துமே திருச்சியை மையப்படுத்தி உள்ளதே. துறைமுகம் என்று எடுத்துக்கொண்டால் கூட மதுரையிலிருந்து தூத்துக்குடியை விட, திருச்சியிலிருந்து நாகைதான் அருகில் உள்ளது. தலைநகருக்கு அனைத்து வசதிகளும் உள்ள இடம் திருச்சிதான்” என்று திருச்சியை தலைநகராக்க வேண்டும் என்ற வாதங்களை முன்வைத்துள்ளார்.

சென்னையில் அதிகரிக்கும் மக்கள் தொகை நெருக்கம், குடிநீர் பிரச்சினைகள், போக்குவரத்து நெரிசல் ஆகிவற்றை குறைக்க இரண்டாவது தலைநகரம் அவசியமான ஒன்றுதான் என்கிறார்கள் பொதுமக்கள்.

த. எழிலரசன்

தகவல் ஆதாரம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா

புதன், 19 ஆக 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon