bபிரதமரிடம் ரூ. 9,000 கோடி கேட்ட முதல்வர்

politics

தமிழகத்திற்கு 9,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மார்ச் 25ஆம் தேதியிலிருந்து ஊரடங்கு அமலில் இருந்து வந்தாலும், பாதிப்பு அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 53,601 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது, 871 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக 22,68,676 பேர் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45,257 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஆகஸ்ட் 11) காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து எடப்பாடி பழனிசாமி இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

இதுபோலவே உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மேற்கு வங்கம் மம்தா பானர்ஜி, பஞ்சாப் அமரீந்தர் சிங், தெலங்கானா சந்திரசேகர ராவ், மகாராஷ்டிரா உத்தவ் தாக்கரே, குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, பிகார் முதல்வர் நிதீஷ் குமாருடனும் பிரதமர் ஆலோசனை மேற்கொண்டார். அதில், கொரோனா பரவல் மற்றும் தடுப்புப் பணிகள் தொடர்பான தற்போதைய நிலவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.

முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் இருந்து இதுவரை 7 முறை மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தியுள்ளார். அன்லாக்-3 ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு தற்போதுதான் முதல்முறையாக முதல்வர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

அப்போது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “நிலுவையில் உள்ள ஏப்ரல் – ஜுன் மாத ஜிஎஸ்டி தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும். ஜிஎஸ்டி வருவாய் குறைந்த காரணத்தால் மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு சிறப்பு நிதியாக 9,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும். கொரோனா தடுப்புப் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாட்டிற்கு உடனடியாக 3000 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

நெல்கொள்முதல் செய்ய வேண்டி 1321 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் என்றும், தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 1000 கோடி ரூபாய் அளிக்க வேண்டுமெனவும், சிறு, குறு நிறுவனங்கள் மேம்பாட்டிற்காக 1000 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்க வேண்டும் எனவும் கோரிய முதல்வர்,

“உயர்தர வெண்டிலேட்டர்களை கொள்முதல் செய்ய மத்திய அரசு நிதியளிக்க வேண்டும். தமிழ்நாட்டில் பிசிஆர் சோதனைக்கான செலவின் 50 சதவீதத்தை பிஎம் கேர்ஸ் நிதியில் இருந்து வழங்க வேண்டும். நவம்பர் வரை ரேசன் கடைகளில் வழங்க 55, 637 மெட்ரிக் டன் பருப்பு தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.

தமிழ்நாட்டில் முன்னெடுக்கப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்த அவர், தமிழ்நாட்டில் 139 கொரோனா பரிசோதனை மையங்கள் இருப்பதாகவும் நாட்டிலேயே அதிக கொரோனா சோதனைகள் தமிழ்நாட்டில்தான் நடைபெறுகிறது என்றும் பெருமிதம் தெரிவித்தார்.

9,000 கோடி ரூபாய் நிதி வழங்க வேண்டுமென ஏற்கனவே பலமுறை பிரதமரிடம் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த முறை முதல்வருடன் கலந்துரையாடிய பிரதமர், தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும், கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் மற்றும் மருத்துவ சிகிச்சை விவரங்கள் குறித்து கேட்டறிந்தார். கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு, தமிழ்நாடு அரசு முழுவீச்சில் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும், விரைவில் தமிழ்நாட்டில் இயல்பு நிலை திரும்ப அனைத்து முயற்சிகளையும் அரசு எடுத்து வருவதாகவும் அப்போது முதல்வர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

**எழில்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *