நட்டா வீட்டில் நங்கூரம்: கு.க. செல்வத்தை வைத்து பாஜக போடும் திட்டம்!

politics

திமுக எம்.எல்.ஏ.வும், தலைமை நிலையச் செயலாளருமான கு.க. செல்வம் நேற்று (ஆகஸ்டு 4) டெல்லி சென்று பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவை சந்தித்தார். அதற்குப் பின் அவர் அளித்த பேட்டியில் இப்போது தான் பாஜகவில் இணையவில்லை என்று கருத்து தெரிவித்துள்ளார்.

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கு.க. செல்வம், “எனது தொகுதிக்குள் வரும் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இரு லிப்ட் வசதி கேட்டு, ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்தேன். அப்படியே பாஜக தலைவர் ஜேபி நட்டாவையும் பார்க்க வந்திருக்கிறேன்” என்று சொல்லிவிட்டு, “திமுக தலைவர் ஸ்டாலின் கந்த சஷ்டி கவசம் இழிவுபடுத்தப்பட்டதைக் கண்டிக்க வேண்டும். கட்சிக்குள் உள்கட்சித் தேர்தலை நடத்த வேண்டும். எப்போதும் மோடியை குற்றம் சாட்டும் ராகுல் காந்தியின் காங்கிரசை கூட்டணியில் இருந்து விலக்க வேண்டும்” என்ற ரீதியில் பாஜகவின் குரலையே டெல்லியில் எதிரொலித்தார்.

**இவ்வளவு நடந்தும் ஏன் கு.க. செல்வம் பாஜகவில் சேரவில்லை?**

இதுகுறித்து திமுக, பாஜக வட்டாரங்களில் விசாரித்தோம்,

“கு.க. செல்வம் அதிருப்தியில் இருப்பதையும் அவர் பாஜகவோடு பேசிக் கொண்டிருப்பதையும் அறிந்த திமுக தலைவர் ஸ்டாலின் இரு நாட்களுக்கு முன்பே அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதியிடம் சொல்லி, செல்வத்திடம் பேசச் சொல்லியிருக்கிறார். இதுகுறித்து செல்வத்திடம் பாரதி பேசியிருக்கிறார். ‘பாஜகவா… அப்படியெல்லாம் ஒரு ஐடியாவும் இல்ல. தவறான தகவல்ங்க’ என்று ஆர்.எஸ்.பாரதியிடம் செல்வம் கூறியிருக்கிறார். இதை அப்படியே ஸ்டாலினுடம் பாரதி தெரிவித்துவிட்டார். ஆனால் ஸ்டாலினுக்கு மேலும் சில இடங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துக் கொண்டே இருக்க மீண்டும் பாரதியிடம், ‘செல்வத்துடன் பேசுங்கள்’ என்று கூறியிருக்கிறார். ஆனால் நேற்று முன் தினத்தில் இருந்து செல்வம் யார் போனையும் எடுக்கவில்லை. பின் ஸ்விட்ச் ஆஃப் ஆகிவிட்டது. இந்த நிலையில் செல்வம் டெல்லி செல்ல இருக்கும் பிளைட் டிக்கெட் பற்றிய தகவல்கள் ஸ்டாலினுக்கு சென்றிருக்கின்றது. அப்போதும் செல்வத்தை சமாதானப்படுத்த சிலரை டெல்லி ஏர்போர்ட்டுக்கு அனுப்பிவைக்கிறார் ஸ்டாலின். ஆனால் டெல்லி ஏர்போர்ட்டில் கு.க. செல்வம் இறங்கியதும் அவரை பாஜகவினர் சிலர் தங்கள் காரில் ஏற்றிக் கொண்டு சென்றுவிட்டனர். இந்தத் தகவல்கள் உடனடியாக ஸ்டாலினுக்கு தெரிவிக்கப்பட்டன.

இதன் பிறகே தகவல்கள் அலையடித்து வெளியே பரவ ஆரம்பித்தன. நேற்று மாலை ஜேபி நட்டாவை செல்வம் சந்தித்தபோது தமிழக பாஜக தலைவர் முருகன், அண்மையில் திமுகவிலிருந்து பாஜகவில் இணைந்த வி.பி. துரைசாமி, பாஜக துணைத் தலைவர் எம்.என்.ராஜா ஆகியோர் இருந்தனர். அப்போது சந்திப்பு முடிந்து வெளியே செல்லும்போது, பாஜகவினர் யாரும் செல்வத்துடன் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். கு.க. செல்வம் தற்போது எம்.எல்.ஏ.வாக இருப்பதால் அவர் பாஜகவில் இணைவதாக அறிவித்தால் அவரது பதவிக்கு சட்ட சிக்கல் ஏற்படும். இதனால் அவர் எம்.எல்.ஏ. பதவி பறிபோகவும் கூடும்.

கு.க. செல்வம் திமுகவின் அதிருப்தி எம்.எல்.ஏ.வாகவே இருக்கட்டும். அங்கிருந்தே திமுகவுக்கு குடைச்சல் கொடுக்க வேண்டும். செல்வத்துடன் மேலும் சில எம்.எல்.ஏ.க்களை கொண்டுவர முயற்சிப்போம் என்று திட்டமிட்டிருக்கிறார்கள். **தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, தொகுதிப் பிரச்சினைக்காக சந்தித்தோம் என்று சொல்லி அதிமுக பக்கம் சாய்ந்தது போல இப்போது திமுக எம்.எல்.ஏ.க்கள் இன்னும் சில பேரை இழுக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் திட்டம்** திமுகவின் உட்கட்சித் தேர்தல், முரசொலி டிரஸ்ட், அறிவாலய விவகாரங்கள் என்று கு.க.செல்வம் மூலம் பல விவகாரங்களை பாஜக கிளப்பும்” என்கிறார்கள்.

**-வேந்தன்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *