கந்த சஷ்டி கருத்து: ஆ.ராசாவைப் பாராட்டிய ஸ்டாலின்

politics

திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளரும், மக்களவை உறுப்பினருமான ஆ.ராசா, நியூஸ் 7 தொலைக்காட்சி வியூகம் நிகழ்ச்சியில் நெறியாளர் விஜயன் எழுப்பிய கேள்விகளுக்கு அளி்த்த பதில்கள் தமிழ்நாடு முழுவதும் பரவலாக ஒரு கருத்துருவாக்கத்தை உண்டாக்கி இருக்கிறது. அதில் பல்வேறு கேள்விகளை லாவகமாக எதிர்கொண்டு ஆ.ராசா பதில் சொன்ன விதம் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

நெறியாளரும், ஆ.ராசாவும் நிகழ்த்திய உரையாடல் பின்வருமாறு…

**கந்த சஷ்டி கவசம் விவகாரத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?**

நாட்டில் ஏகப்பட்ட பிரச்சனைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அந்த பிரச்சனைகளுக்கு மத்தியில் கந்த சஷ்டி கவசம் போன்றவை ஒரு திசைதிருப்பும் வேலை என்றுதான் கருதுகிறேன். திமுக எந்த மதத்திற்கும் எதிரானது இல்லை. ஆனால், எந்த மதத்தில் மூட நம்பிக்கைகள், ஏற்றத்தாழ்வுகள் அதிகமாக இருக்கிறதோ அதனை எதிர்க்கும் வகையில் பெரியார் காலத்திலிருந்து திமுக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

இப்போதைய சூழ்நிலையில் கந்த சஷ்டி கவசத்தை யாரோ 2 பேர் விமர்சித்தார்கள் என்பதற்காக வேலைவாய்ப்பின்மை, பொருளாதார சரிவு, கொரோனா பிரச்சனை ஆகியவற்றில் இருந்து மத்திய மாநில அரசுகளை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக ஒரு சதி நடக்கிறதோ என்று எண்ணுகிற அளவுக்கு சிறிய சிறிய பிரச்சனைகளை எல்லாம் திசை திருப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

**பெரியார் சிலை அவமதிக்கப்பட்டால் உடனே குரல் எழுப்பும் நிலையில், கந்த சஷ்டி கவசம் விவகாரத்தை மட்டும் திசை திருப்பும் அரசியல் என பார்ப்பது சரியா?**

பெரியார் சிலைக்கு சாயம் பூசுவதால் அவரை மறைத்துவிட முடியாது. பெரியார் வாழ்ந்து கொண்டிருப்பது சிலைகளில் அல்ல. பெரியார் கொள்கைகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் சிந்தனைகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். எதுவரை ஏற்றத்தாழ்வுகள், பெண்ணடிமைத் தனம், வர்க முரண்பாடுகள் இருக்கிறதோ அதுவரை பெரியார் தேவைப்படுவார். இப்போது இருக்கும் பிரச்சனையை திசை திருப்பவே கந்த சஷ்டி கவசப் பிரச்சனை, பெரியார் சிலை மீது காவி பூசுவது போன்றவை நடைபெறுகின்றன.

**கந்த சஷ்டி விவகாரத்தில் ஸ்டாலின் ஏன் மவுனமாக இருக்கிறார்?**

கந்த சஷ்டி கவசத்தில் திமுகவின் நிலைப்பாடு என்ன என்ற கேள்விக்கு ஆர்.எஸ்.பாரதி பதில் சொல்லிவிட்டார். ஆனால், தந்தை பெரியார் எங்களது தத்துவத்தின் முழு அடையாளம். அந்த முழு அடையாளத்தை சிதைக்கும்போது எங்களது தலைவர்தான் பதில் சொல்வார். ஏன் ஆர்.எஸ்.பாரதியின் குரலை திமுகவின் குரலாக எடுத்துக்கொள்ள மறுக்கிறீர்கள்? அப்படியென்றால் பெரியாரும் கந்த சஷ்டி கவசமும் ஒன்று என சொல்ல வருகிறீர்களா? வெளிப்படையாக சொல்கிறேன். பெரியாரும், கந்த சஷ்டி கவசமும் எங்களுக்கு ஒன்று அல்ல. யாருடைய உணர்வுகளும் புண்படக்கூடாது என்றுதான் ஆர்.எஸ்.பாரதி சொல்கிறார்.

**இந்துக்களுடைய மனம் புண்பட்டுவிட்டதாக கூறுகிறார்களே?**

யார் இந்து….நான் இந்து மதம்தானே. எனது அப்பாவை, தாத்தாவை ஏன் படிக்கவிடவில்லை. என்னை ஏன் பஞ்சமன் என்று சொன்னீர்கள். ஏன் தெருவுக்கு வெளியே நிறுத்தினீர்கள்? ஏன் பிற்படுத்தப்பட்டவர்களை சூத்திரன் என்று சொன்னீர்கள்..படித்தால் நாக்கை வெட்ட வேண்டும் என்று கூறினீர்கள். இதெல்லாம் எங்களை புண்படுத்தவில்லையா?

இந்து என்று சொல்கிறார்களே ஏன் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டுக்காக பாஜக, ஆர்.எஸ்.எஸ், சங் பரிவார் அமைப்புகள் ஏன் நீதிமன்றம் செல்லவில்லை. அப்போது அவர்களை இந்துக்களுக்கு எதிரி என்று நான் சொல்லவா? என்று கேள்வி எழுப்பினார். இவ்வாறாக இந்த நேர்காணல் 43 நிமிடங்கள் வரை நீண்டு செல்கிறது.

சமூக வலைதளங்களில் இந்த பேட்டி பெரிய அளவில் பேசப்பட்டு வரும் அதே வேளையில், ஏன் ஆ.ராசாவை தலைமை தொடர்ந்து இதுபோல பேசவைக்க தடைபோடுகிறது என்ற கேள்விகளும் சுற்றிக்கொண்டிருந்தன. ஆனால், ஆ.ராசா தலைமையின் அனுமதி பெற்றுதான் ஊடகங்களுக்கு பேட்டியளிக்கிறார். அதனால்தான் அவரால் தொடர்ந்து பேச முடிவதில்லை என்ற தகவலும் வெளிவந்தது.

இதுதொடர்பாக நாம் விசாரித்தோம்…

ஆ.ராசாவின் பேட்டி வெளியான உடனேயே அதனை பார்த்த திமுக தலைவர் ஸ்டாலின் வெகுவாக ரசித்திருக்கிறார். அந்த நேரத்தில் தன்னுடன் போனில் பேசியவர்களிடம் எல்லாம், ‘ராசாவோட பேட்டியப் பார்த்தேன்…ரொம்ப ரொம்ப நல்லா பேசியிருக்காரு..” என்று கூறியுள்ளார். இதிலிருந்தே ஆ.ராசா ஊடகங்களில் பேசுவதற்கு தலைமை எந்த தடையும் விதிக்கவில்லை என்பதும், சமூக வலைதளங்களில் வெளியான அந்தத் தகவல் பொய் என்பதும் வெளிப்பட்டுள்ளது என்கிறார்கள் திமுக வட்டாரங்களில்.

**எழில்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *