மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 9 ஆக 2020

மாரிதாஸ் வீட்டில் விசாரணை! அடுத்து என்ன?

மாரிதாஸ் வீட்டில் விசாரணை! அடுத்து என்ன?

யுடியூப் சேனல் நடத்திவரும் மதுரை மாரிதாஸின் வீட்டில் நேற்று (ஆகஸ்ட் 1) போலீஸார் நான்கு மணி நேரம் விசாரணை நடத்தியிருக்கிறார்கள்.

மாரிதாஸ் தனது யுடியூப் வீடியோவில் நியூஸ் 18 தமிழ்நாடு சேனலைப் பற்றி பல புகார்களைத் தெரிவித்திருந்தார். இந்தப் புகார்கள் குறித்து நியூஸ் 18 மேலிடத்தில் இருந்து தனக்கு மின்னஞ்சல் வந்ததாகவும், இதுவே தான் அனுப்பிய புகார்களுக்கு முதல்கட்ட வெற்றி என்றும் புகார் கொடுத்திருந்தார். ஆனால், நியூஸ் 18 செய்தி ஆசிரியர் வினய் சர்வாகி அதுபோன்ற மின்னஞ்சலை தாங்கள் அனுப்பவில்லை என்றும் இதுகுறித்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் அறிவித்தார். அதன்படியே ஜூலை 13ஆம் தேதி இதுகுறித்து சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தது நியூஸ் 18 நிர்வாகம். இதன்பின் சில நாட்கள் கழித்து அந்த மெயிலை தனக்கு யார் அனுப்பினார்கள் என்பது குறித்து விசாரிக்குமாறு மாரிதாஸும் ஜூலை 14ஆம் தேதி புகார் அளித்திருந்ததாக பின்னர் தெரிவித்தார்.

இந்த நிலையில் நியூஸ் 18 அளித்த புகாரின் அடிப்படையில் மதுரை சூர்யா நகர் பகுதியில் உள்ள மாரிதாஸின் வீட்டில் சென்னை மாநகர் தொழில்நுட்பப் பிரிவு காவல் துறை கூடுதல் துணை ஆணையர் சரவணகுமார் தலைமையில் நான்கு காவல் துறை அதிகாரிகள் நேற்று பிற்பகல் நேரில் சென்றனர். விசாரணை நடத்துவதற்கான ஆவணங்கள் இருக்கிறதா என்று கேட்டு மாரிதாஸ் போலீஸாருடன் வாக்குவாதம் செய்தார். போலீஸ் உரிய விளக்கமளித்ததை தொடர்ந்து காவல் துறையினர் வீட்டுக்குள் சென்று மாரிதாஸ் பயன்படுத்திய லேப்டாப், மொபைல், பென்டிரைவ் உள்ளிட்டவற்றை சோதனை நடத்தினர். சோதனை நடந்துகொண்டிருக்கும்போதே தகவல் பாஜகவுக்குச் சென்றது. பாஜகவின் பொதுச் செயலாளர் மதுரை சீனிவாசன் உள்ளிட்டோர் மாரிதாஸின் வீடு இருக்கும் பகுதிக்கு விரைந்து வந்தனர்.

அப்போது வழக்கு தொடர்பான ஆவணங்களை மட்டும் நகல் எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும், தனது சொந்த ஆவணங்களை எடுக்கக் கூடாது எனவும் மாரிதாஸ் எதிர்ப்பு தெரிவித்தார். அதனால், லேப்டாப்பில் உள்ள ஆவணங்களை போலீஸார் பென்டிரைவில் எடுத்துகொண்டனர். தொடர்ந்து மாரிதாஸ் பயன்படுத்திய மேலும் ஒரு லேப்டாப் தொடர்பான விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. தேவைப்பட்டால் மாரிதாஸை மீண்டும் சில மணி நேர விசாரணைக்கு உட்படுத்துவோம் என்று போலீஸார் தரப்பில் தெரிவித்தனர்.

அரசு மருத்துவர்கள், விவசாயிகள் என்று பல தரப்பினரும் மாரிதாஸ் மீது புகார் தெரிவித்து வரும் நிலையில் அவற்றையும் உரிய முறையில் போலீஸிடம் புகாராக தெரிவிக்க ஏற்பாடுகள் நடப்பதாக தெரிகிறது. பாஜகவுக்கு ஆதரவான போக்குள்ள மாரிதாஸ் வீடு வரை போலீஸ் சென்றிருப்பது அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

-வேந்தன்

ஞாயிறு, 2 ஆக 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon