மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 9 ஆக 2020

சிறப்புத் தொடர்: சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை - 2020: ஓர் முழுப் பார்வை - 3

சிறப்புத் தொடர்: சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை - 2020:  ஓர் முழுப் பார்வை - 3

பேராசிரியர் நா.மணி

2020 சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை மார்ச் மாதம் 12ஆம் தேதி பொது வெளிக்கு வந்தது. பொது கருத்துக் கேட்புக்கு மிகக் குறைந்த காலம் வழங்கப்பட்டிருந்தது. மார்ச் 24ஆம் தேதி பொது முடக்கம் எல்லாவற்றையும் முடங்கிப் போட்டது. பொது முடக்கம் முடிந்து கருத்துக் கேட்பு நடத்தலாம் அல்லது இதே காலகட்டத்தில் பொதுக் கருத்துக் கேட்டே ஆக வேண்டும் என்ற நிலை இருந்தால் ஏன் அந்த நிலைக்கு மத்திய அரசு தள்ளப்பட்டிருக்கிறது என்று எடுத்துக் கூற மத்திய அரசு கடமைப்பட்டுள்ளது. இந்த இரண்டையும் மத்திய அரசு செய்யவில்லை.

மக்களின் மொழிகளில் ஏன் வெளியிடப்படவில்லை?

நாடு முழுவதும் உள்ள மக்கள் சுற்றுச்சூழல் தாக்கல் அறிக்கையின் மீது கருத்துகளை கூறக் தொடங்கினார்கள். அதன் ஆபத்துகளை உணர்ந்த சிலர் நீதிமன்றங்களை நாடினர். இந்த நேரத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இரண்டு பிரதான உடனடி கோரிக்கைகளை முன்வைத்தனர். ஒன்று, இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் அங்கீகரித்துள்ள 22 இந்திய மொழிகளில் இந்த ஆவணம் மொழிபெயர்ப்பு செய்து தரப்பட வேண்டும். இரண்டு, அது வரையிலும், கொரோனா காலகட்டம் முடியும் வரையும் இதனைத் தள்ளி வைக்க வேண்டும். இந்த இரண்டுமே மிகவும் நியாயமான கோரிக்கைகள் என்று இதைப் படிப்போர் கூட நன்கு உணர்வர். இந்த எளிய உண்மைகளை ஏற்றுக்கொள்ள மத்திய அரசு தயாராக இல்லை. டெல்லி உயர் நீதிமன்றமும் கர்நாடக உயர் நீதிமன்றமும் "தாய்மொழி மட்டுமே அறிந்த மக்களிடம் அந்த அறிக்கையில் என்ன புரிந்து கொள்ள இயலும், எப்படி கருத்து கூற இயலும். மொழிபெயர்ப்பு தாமதமானால் அறிக்கையின் மீதான கருத்துக் கேட்பு கால எல்லைக்கு இடைக்கால தடை கொடுக்க வேண்டியிருக்கும்" என்று சொல்லிப் பார்த்தது.

டெல்லி உயர் நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பு செய்து தருகிறோம் என்று ஏற்றுக்கொண்ட மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் கர்நாடக மாநிலத்தில் தனது நிலையை மாற்றிக்கொண்டு பிரமாண வாக்குமூலப் பத்திரம் தாக்கல் செய்தது. மொழிபெயர்ப்பு செய்து தர வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியது. அரசியல் சாசனத்தின்படி ஆங்கிலமும் இந்தியும்தான் அலுவல் மொழி. எனவே, அந்த அலுவல் மொழியில்தான் அறிக்கை தர முடியும் என்று கூறியது. மத்திய அரசின் இந்த நிலைப்பாடு சுற்றுச்சூழல் தாக்க அறிக்கையின் மீது மட்டுமா அல்லது மத்திய அரசின் ஒவ்வொரு செயல்பாட்டிலுமா அல்லது இதர கருத்துக் கேட்பு நடவடிக்கைகளிலுமா என்பது ஒரு முக்கியமான கேள்வி. மொழிவழி மாநிலங்களைக்கொண்ட இந்திய ஒன்றியத்தில் மிகுந்த அர்த்தம் பொதிந்த கேள்வி.

"மத்திய அரசின் இந்த வாதம் மத்திய மாநில அரசுகளுக்கு இடையிலான அலுவல் மொழியாக இருக்கலாம். ஆனால், இத்தகைய கருத்துக் கேட்புகள் நடக்கும்போது அது அந்தந்த மாநில மொழிகளில் தரப்பட வேண்டும். கர்நாடக மாநிலத்தில் மட்டும் கன்னடம் மட்டுமே தெரிந்த மக்கள் ஐந்தரை கோடி பேர். இவர்களுக்குப் புரியாத மொழியிலா கருத்துக் கேட்பு நடத்த வேண்டும்" என்று கூறினார். இந்த வாதம் அல்லது கருத்து நமக்கு மிகச் சரி என்று படுகிறது. ஆனால், மத்திய அரசுக்கு அப்படித் தோன்றவில்லை. இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் நிலை எடுத்தால் அது மிக ஆபத்தானதாகவும் சென்று முடியும் என்றே ஊகிக்க முடிகிறது.

பொது கருத்துக் கேட்பை அந்த மாநில மொழிகளில்தான் நடத்த வேண்டும் என்று அதே 2020 சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை கூறுகிறது. ஆனால், இந்த அறிக்கையை அந்தந்த மாநில மொழிகளில் தர முடியாது. அதற்கு அரசியல் சாசனத்தில் இடமில்லை என்று நீதிமன்றத்தில் வாதிடுகிறது மத்திய அரசு. அதோடு டெல்லி மற்றும் கர்நாடக உயர் நீதிமன்றங்களின் தீர்ப்புகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவும் திட்டமிட்டு வருகிறது மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம். இந்த முரண்பாட்டை எப்படிப் புரிந்து கொள்வதென்றே தெரியவில்லை.

சுற்றுச்சூழல் அறிக்கை 2019-2020

கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் முன்வைத்த இன்னுமொரு வாதமும் மிகவும் அதிர்ச்சி தரக்கூடியதாக இருக்கிறது. 2020 சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை இப்போது வெளிப்பட்டது அல்ல. 2019ஆம் ஆண்டு இதற்கு முந்தைய பாஜக ஆட்சியில், அப்போதைய சுற்றுச்சூழல் அமைச்சர் ஹர்ஷவர்த்தன் இருக்கும்போதே வெளியிடப்பட்டது என்று கூறி இருக்கிறது. இப்படியான ஒரு வரைவு அறிக்கையை அப்போதைய அமைச்சகம் வெளியிட்டது உண்மைதான். அது மாநில அரசுகளின் சுற்றுச்சூழல் அமைச்சகம் தவிர யாருக்கும் தெரியாது என்பது மட்டுமல்ல; அந்த அறிக்கைக்கும் தற்போதைய 2020 அறிக்கைக்கும் பெருத்த வேறுபாடுகள் உள்ளன என்பதே மிகப் பெரும் அதிர்ச்சி தரத்தக்க விஷயம். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வழி தகவல் அறிந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் 2019 சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை 13 பத்திகளைக் கொண்டது. தற்போதைய அறிக்கை 27 பத்திகளைக் கொண்டிருக்கிறது என்கிறார்கள். நடப்பு சுற்றுச்சூழல் தாக்க அறிக்கையில்தான் 1986ஆம் ஆண்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் பல அம்சங்களில் மீறப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக் குழுவின் முன்வைத்து மதிப்பீடு செய்து அனுமதி பெற்றுத் தொடங்க வேண்டிய பல தொழில்கள் அப்படி முன் அனுமதி பெறத் தேவையில்லை என்று முடிவு செய்யப்பட்டதும் இந்தப் புதிய அறிக்கையில்தான் என்கிறார்கள். அத்தோடு ஏற்கனவே முன் அனுமதி இன்றி தொடங்கப்பட்டுள்ள பல தொழில் நிறுவனங்களுக்குப் பின்னேற்பு வழங்கிட அனுமதி தருவது தொடர்பான ஷரத்துகள் உருவாக்கப்பட்டதும் இந்தப் புதிய அறிக்கையில்தான் என்கிறார்கள்.

கருத்துக் கேட்பே வேண்டாம்!

இதுகுறித்து அடுத்த கட்டுரையில் தனியாகப் பேசுவோம். அதற்கு முன்னர் பொதுக் கருத்துக் கேட்பே நடத்திடத் தேவையில்லை என்று சில தொழில்களுக்கு இந்த அறிக்கையில் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஏன் பொது கருத்துக் கேட்போ, பொது மக்கள் கலந்தாய்வு தேவையில்லை என்று ஒரு கேள்வியைப் பொதுவாக நம்மிடம் எழுப்பினால், இயல்பான விடை என்னவாக இருக்கும்?

ஒருவேளை அதற்கான தேவை ஏற்படாமல் இருக்கலாம். இப்படிதான் நம்மில் எண்ணத் தோன்றுகிறது. 14 வகையான தொழில்கள், அவை வகையில் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் நாள் ஒன்றுக்கு எவ்வளவு உற்பத்தி செய்தாலும் அதற்கு கருத்துக் கேட்பை நடத்த வேண்டியதில்லை என்று இந்த அறிக்கை கூறுகிறது. அதேபோல் அனைத்து பி2 வகை திட்டங்கள் (ஏ ,பி1 ஆகிய திட்டங்களோடு ஒப்பிடும்போது சிறிய திட்டங்கள்) மற்றும் தொழில்களுக்குக் கருத்துக் கேட்பை நடத்திடத் தேவையில்லை என்கிறது இந்தப் புதிய வரைவு அறிக்கை. அதேபோல் நடுத்தர ரக பாசனத் திட்டங்களுக்கும்கூட பொதுக் கருத்துக் கேட்பை நடத்த வேண்டியதில்லை என்று இந்த அறிக்கை அறிவிக்கிறது.

கருத்துக் கேட்பு நடத்த தேவையில்லை என்ற தொழில்களில் வேதி உரத் தொழிற்சாலைகள், ஆசிட்கள் உற்பத்தி செய்யும் தொழில்கள், பூச்சிக்கொல்லி மற்றும் களைக்கொல்லி தயாரிக்கும் தொழிற்சாலைகள், விஸ்கோஸ், நைலான் மற்றும் ரேயான் போன்ற செயற்கை இழைகள் தயாரித்தல், பெட்ரோலியப் பொருட்கள், பெட்ரோ கெமிக்கல்ஸ், எலெக்ட்ரானிக் கிராபைடு உற்பத்தி, செயற்கை கனிம வேதி உரங்கள், சாயத் தொழில்கள், சாயம் தயாரிக்கப் பயன்படும் இடு பொருள் தொழில்கள், பெயின்ட் உற்பத்தி, வார்னீஷ் தயாரிப்பு, மருத்துவக் கழிவுகளைச் சுத்திகரித்தல், தோல் பதனிடும் தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து வகை கழிவுகளைச் சுத்திகரிக்கும் பணிகள், நேருக்கு நேர் தடங்கள் இன்றி பிரமாண்டமாக உருவெடுத்துச் செல்லவிருக்கும் எட்டு வழிச் சாலைகள், மேம்பாலங்கள், பாலங்கள் என இவை யாவுக்கும் பொதுக் கருத்துக் கேட்பை நடத்திடத் தேவையில்லை என்று அறிக்கை கூறுகிறது.

தமிழ்நாட்டில் மேற்கு மண்டலத்தில் வாழ்வோர் மட்டுமல்ல, அனைவரும் இரண்டு விஷயங்களை நன்கு அறிவர். ஒன்று கோவை மேட்டுப்பாளையம் அருகே இயங்கி வந்த தென்னிந்திய விஸ்கோஸ் ஆலை, அதன் கழிவுகள், அதனால் பவானி நதி பாழ்பட்டு நின்றது. அதற்கு எதிரான மக்களின் போராட்டம். இது விஸ்கோஸ் மற்றும் ரேயான் செயற்கை இழை நூல் தயாரிப்பு என்ற தொழிற்சாலையில் ஏற்பட்ட விளைவு. இந்த ஆலை மூடப்பட்ட பிறகே அந்தப் பகுதி மக்களும் பவானி நதி நீரைக் குடித்து வாழ்வோரும் ஒப்பீட்டளவில் ஓரளவு நன்றாக உள்ளனர். அதேபோல் உலகிலேயே சாயக் கழிவுகளை தாங்கி நிற்கும் ஒரே ஓர் அணை. ஒரு முறைகூட பாசனத்துக்காகத் திறந்து விடப்படாத அவலத்தில் உள்ள உலகில் உள்ள ஒரேயொரு நீர் தேக்கம் என்று பெயர் பெற்ற திருப்பூர் அருகில் உள்ள ஒரத்துப்பாளையம் அணைக்கட்டு. இவையும் சாயத் தொழில்கள் அதன் சுற்றுச்சூழல் மாசுபாடு பற்றி மட்டுமே பேசுகிறது. இந்த இரண்டே இரண்டு வகை தொழிற்சாலை கழிவுகள் இவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அப்படியென்றால், மேலே கூறப்பட்ட அனைத்துத் தொழில்களையும் அதைச் சுற்றியுள்ள மக்கள் பொதுக் கருத்துக் கேட்கக் கூட அனுமதிக்கப்படவில்லை எனில், பின் நாட்களில் பாதிப்புகள் என்று போராடும் உரிமையையேனும் பெற்று இருப்பார்களா? இன்னும் என்னென்ன விஷயங்கள் இந்த அறிக்கையில் தெரிந்துகொள்ள வேண்டி உள்ளது?

நாளையும் ஆய்வு செய்வோம்.

கட்டுரையாளர் குறிப்பு

நா. மணி, ஈரோடு கலை அறிவியல் கல்லூரியில் பொருளாதாரத் துறைத் தலைவர். Environment climate change and disaster management என்ற நூலின் ஆசிரியர்.

பகுதி 1

பகுதி 2

ஞாயிறு, 2 ஆக 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon