மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 28 அக் 2020

வேலை தேட வேண்டாம், வேலை கொடுப்பீர்கள்! புதிய கல்விக் கொள்கை பற்றி மோடி

வேலை தேட வேண்டாம், வேலை  கொடுப்பீர்கள்! புதிய கல்விக் கொள்கை பற்றி மோடி

பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஆகஸ்டு 1) மாலை ஹேக்கத்தானின் இறுதிப் போட்டியாளர்களான மாணவர்களுடன் உரையாடினார். கல்வி அமைச்சகத்தின் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ), பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ் உள்ளிட்டவை இணைந்து ஸ்மார் இண்டியா ஹேக்கத்தான் என்ற போட்டிகளை நடத்தின. ஹேக்கத்தான் என்பது அன்றாட வாழ்க்கையில் மக்கள் எதிர்கொள்ளும் சில சிக்கல்களைத் தீர்க்க ஒரு தளத்தை மாணவர்களுக்கு வழங்குவதாகும். இதன் இறுதிப் போட்டியாளர்களோடு பிரதமர் இன்று உரையாடினார்.

தமிழகத்தின் கோவை ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, ஹைதராபாத், எம்.எல்.ஆர் தொழில்நுட்ப நிறுவனம், ஜெய்ப்பூர் கிராஃபிக் சகாப்த பல்கலைக்கழகம், டெஹ்ராடூன் மற்றும் சண்டிகர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் பிரதமருடன் உரையாடி அவர்களின் புதுமையான யோசனைகளைப் பற்றி விவாதித்தனர்.

இந்த உரையாடலில் பிரதமர் மோடி புதிய கல்விக் கொள்கை பற்றியும், இந்திய மாணவர்கள், இளைஞர்களின் ஆற்றல் பற்றியும் பேசினார்.

“புதிய கல்விக் கொள்கையைத் திட்டமிட்டு வரைவு செய்ய 5 ஆண்டுகள் ஆனது. கொள்கையை உருவாக்குவதற்கு முன்பு பல்வேறு துறைகளில் உள்ளவர்களிடமிருந்து கருத்துகளும் பரிந்துரைகளும் பெறப்பட்டன. புதிய கல்விக் கொள்கை மக்களை மையமாகக் கொண்டது மற்றும் எதிர்காலத்தை மையமாகக் கொண்டது.

முன்பெல்லாம் மாணவர்களின் ஆர்வத்திற்கு ஏற்ப பாடங்களைத் தேர்வு செய்ய அனுமதிக்கப்படவில்லை. ஆனால் விரும்பிய பாடங்களைக் கற்க புதிய கல்விக் கொள்கை வழி செய்கிறது. வளர்ந்த நாடுகளில் பெரும்பாலானவை தங்கள் மாணவர்களுக்கு தங்கள் சொந்த மொழியில் கற்பிக்கின்றன. பள்ளிகளில் பிராந்திய மொழிகளைச் சேர்ப்பதன் மூலம், மாணவர்கள் தங்கள் சொந்த பிராந்திய அல்லது உள்ளூர் மொழிகளில் நன்கு புரிந்துகொள்வார்கள்.

புதிய கல்வி கொள்கை வேலை தேடுபவர்களை விட வேலை கொடுப்பவர்களை உருவாக்கும். இது நமது மனநிலையை மாற்றுவதற்கும், நமது அணுகுமுறையை சீர்திருத்துவதற்கும் உதவும். நமது இளைஞர்களால் தீர்க்க முடியாத எந்த சவாலும் இல்லை. இந்தியாவின் இளைஞர்களை நான்நம்புகிறேன். முகக் கவசங்களுக்கான தேவை திடீரென அதிவேகமாக வளர்ந்தபோது, இளைஞர்கள் 3 டி பிரிண்டர்களைப் பயன்படுத்தினர். அதன் மூலம் தேவையை பூர்த்தி செய்தனர். இளைஞர்கள்தான் சுயசார்பு இந்தியாவின் ஆற்றல். 21 ஆம் நூற்றாண்டு அறிவின் சகாப்தம். கற்றல், புதுமை மற்றும் அறிவில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. இதைதான் புதிய கல்விக் கொள்கை செய்கிறது” என்று பேசினார் பிரதமர் மோடி.

- வேந்தன்

சனி, 1 ஆக 2020

அடுத்ததுchevronRight icon