மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 25 அக் 2020

அதிரடி அமர்சிங் காலமானார்!

அதிரடி அமர்சிங் காலமானார்!

வட இந்தியாவின் புகழ்பெற்ற அரசியல்வாதியான அமர்சிங் உடல் நலக் குறைவால் இன்று (ஆகஸ்டு 1) சிங்கப்பூரில் காலமானார். சமாஜ்வாதி கட்சியின் தலைவராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் பல ஆண்டுகள் பணியாற்றிய அமர்சிங் சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்தார்.

அமர் சிங் 1996 ல் உத்தரப்பிரதேசத்தில் இருந்து முதன்முறையாக மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2003 இல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1990 களின் பிற்பகுதியில் இந்திய அரசியல் வட்டாரங்களில் அவர் முக்கியத்துவம் பெற்றார். அமர் சிங் ஏற்கனவே உயர்மட்ட தொடர்புகளைக் கொண்ட பெருவணிகர்களின் கிளப்பில் உறுப்பினராக இருந்தார். உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, கேரளா, அருணாச்சல பிரதேசம், மற்றும் பிற மாநிலங்களில் தனது வர்த்தகத் தொடர்புகளைக் கொண்டிருந்தார் அமர்சிங்.

2010 ஆம் ஆண்டு முலாயம் சிங் யாதவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னரும், முலாயம் சிங் யாதவின் தனிப்பட்ட விசுவாசியாகவே அமர் சிங் இருந்தார். அமர் சிங் கட்சிக்கும் யாதவ் குடும்பத்தினருக்கும்ள் ஒரு பிளவு ஏற்பட முயற்சிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பின் ராஜ்யசபா உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யச் சொல்லி கட்சி வலியுறுத்தியபோது, “சமாஜ்வாதி கட்சிக்காக உழைத்து உழைத்து பழுதாய் போன எனது சிறுநீரகங்களைத் திருப்பித் தாருங்கள். பின்னர் நான் ராஜ்யசபாவில் இருந்து ராஜினாமா செய்கிறேன். மேலும் நான் ராஜ்யசபா உறுப்பினர் பதவியை எனது உழைப்பால் சம்பாதித்தேன். பிச்சையாக யாரிடம் இருந்தும் பெறவில்லை” என்ரு தெரிவித்தார்.

தேசிய அரசியலைப் பொறுத்தவரை, 2004 மற்றும் 2014 க்கு இடையில் மன்மோகன் சிங்கின் 10 ஆண்டு அரசாங்கத்தின் போது அமர் சிங் ஒரு முக்கிய நபராக உருவெடுத்தார். காங்கிரஸையும் சமாஜ்வாடி கட்சியையும் ஒன்றிணைப்பதில் அவர் முக்கிய பங்கு வகித்தார். இருப்பினும், 2011 ஆம் ஆண்டில் ஊழல் குற்றச்சாட்டை எதிர்கொண்டு அமர் சிங் டெல்லியில் உள்ள திஹார் சிறைக்கு அனுப்பப்பட்டார். இந்தோ-அமெரிக்க சிவில் அணுசக்தி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இடதுசாரிக் கட்சிகள் ஆதரவை வாபஸ் பெற்றதையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்பின் போது மன்மோகன் சிங் தலைமையிலான அரசாங்கத்திற்கு வாக்களிக்க மூன்று எம்.பி.க்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக அமர் சிங் மீது குற்றம் சாட்டப்பட்டது.

சிறுநீரகப் பிரச்சினையால் கடந்த பல மாதங்களாக சிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த அமர்சிங் இன்று காலமானார். பிரதமர் மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பலர் அமர்சிங்குக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். உத்திரப்பிரதேச மாநில அரசியலில் மட்டுமல்ல தேசிய அரசியலிலும் அமர்சிங் நடத்திய அதிரடியான அரசியல் காட்சிகள் வரலாற்றில் சுடச்சுடப் பதிவாகியிருக்கின்றன.

-வேந்தன்

சனி, 1 ஆக 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon