மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 25 அக் 2020

அதிமுகவில் மளமள மாற்றங்கள்: தேர்தல் ஜுரமா? சசிகலா ஜுரமா?

அதிமுகவில் மளமள மாற்றங்கள்: தேர்தல் ஜுரமா? சசிகலா ஜுரமா?

இதுவரைக்கும் நிர்வாகிகளை மாற்றுவதற்கும், புதிய நிர்வாகிகளை நியமிப்பதற்கும் எவ்வளவுக்கு எவ்வளவு யோசித்தார்களோ... அதற்கு நேர் எதிராக இப்போது மாற்றங்களை மளமளவென செய்து வருகிறார்கள் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளரான முதல்வர் எடப்பாடி பழனிசாமியும்.

ஜூலை 25 ஆம் தேதி அதிமுகவின் புதிய அமைப்புச் செயலாளர்கள், 31 மாவட்டங்களாகப் பிரித்து புதிய மாவட்டச் செயலாளர்கள், துணை அமைப்புகளுக்கான நிர்வாகிகள் என்று நீண்ட பட்டியலை வெளியிட்டது அதிமுக தலைமை. மாவட்டம் பிரித்ததோடு நின்றுவிடாமல் உடனடியாக புதிய மாவட்டங்களின் ஒன்றிய அமைப்புகளும் வரையறை செய்யப்பட்டு கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான நமது அம்மாவில் அறிவிக்கப்பட்டு வருகிறது.

உதாரணமாக கள்ளக்குறிச்சி புதிய மாவட்ட ஒன்றியங்கள் வரையறை செய்யப்பட்டுள்ளன. இம்மாவட்டத்துக்குட்பட்ட ரிஷிவந்தியம், திருக்கோவிலூர், முகையூர் ஆகிய ஒன்றியங்கள் மட்டும் தலா மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளன. மற்ற ஒன்றியங்கள் இரண்டாக பிரிக்கப்பட்டிருக்கின்றன. இதுமட்டுமல்ல கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் அனைத்து துணை அமைப்புகள், அவற்றுக்கான நிர்வாகிள் யார் யார் என்ற பட்டியலும் வெளியிடப்பட்டிருக்கின்றன. கள்ளக்குறிச்சி மட்டுமல்ல பிரிக்கப்பட்ட ஒவ்வொரு மாவட்டங்களுக்கான ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட துணை அமைப்பு நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் என்று முழுமையான அளவு நிர்வாகிகள் போர்க்கால அடிப்படையில் நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.

இதுமட்டுமல்ல, அதிமுகவின் உறுப்பினர் சேர்க்கை படிவங்கள் வழங்கப்பட்டு ஆண்டுக் கணக்கில் ஆகியபோதும் இதுவரை அதுபற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாத தலைமை இப்போது அவசர அவசரமாக ஆகஸ்டு 10 ஆம் தேதிக்குள் உறுப்பினர் சேர்க்கை படிவங்களை கட்டணத்தோடு தலைமைக் கழகத்தில் சேர்ப்பிக்க வேண்டும் என்று நேற்று (ஜூலை 31) ஆம் தேதி அறிவிக்கப்பட்டு அந்த அறிவிப்பு இன்றைய நமது அம்மாவில் முதல் பக்கத்தில் வெளியாகியிருக்கிறது.

“மாவட்டக் கழகச் செயலாளர்களும் மற்ற நிர்வாகிகளும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த உறுப்பினர் சேர்க்கைப் பணியில் முழுமையாக ஈடுபட்டு உரிய காலத்துக்குள் உரிய காலத்துக்குள் இப்பணியை செய்து முடிக்க வேண்டும். உறுப்பினர் உரிமை சீட்டுகள் பெற்றுள்ளவர்கள் மட்டுமே நடைபெற உள்ள கழக அமைப்புத் தேர்தலில் போட்டியிடுவதற்கும் வாக்களிப்பதற்கும் தகுதியுடையவர்கள் ஆவார்கள்” என்று கூறியிருக்கிறார்கள் ஓ.பன்னீரும், எடப்பாடியும்.

அதிமுக சீனியர்கள் சிலரிடம் இதுபற்றி பேசியபோது, “கடந்த நான்கு ஆண்டுகளில் கட்சிப் பணிகளில் எவ்வளவுக்கு எவ்வளவு மெத்தனம் காட்டினார்களோ, அதற்கு எதிராக இப்போது அவசரம் அவசரமாக கட்சிப் பணிகளை கவனிக்கிறார்கள். தேர்தல் வருகிறது என்று இதற்குக் காரணம் சொல்கிறார்கள். தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதத்தில் வருகிறது. அதிமுகவில் இதுபோல முழு மூச்சில் மாவட்டங்களுக்கான முழுமையான நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு அண்மைக் காலத்தில் யாரும் பார்த்ததில்லை. மேலும் கழக அமைப்புத் தேர்தல் வருகிறது என்று வேறு சொல்லியிருக்கிறார்கள். அமைப்புத் தேர்தல் என்றால் பொதுச் செயலாளர் வரை தேர்ந்தெடுப்பார்களா? எனவே இது தேர்தலுக்காக என்பது போல தெரியவில்லை. சசிகலா விரைவில் வருவதை இதுபோன்ற அவசர கட்சிப் பணிகளால் அதிமுக தலைமை உறுதிப்படுத்திக் கொண்டே இருக்கிறது. சசிகலா வெளியே வந்தால் கூட இப்போது பதவிகள் பெற்றிருக்கும் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் அவரோடு போக மாட்டார்கள் என்பதே ஓபிஎஸ் இபிஎஸ் சின் கணக்கு. அதனால்தான் மளமள மாற்றங்கள் கட்சிக்குள் நடந்துகொண்டே இருக்கின்றன” என்கிறார்கள்.

-வேந்தன்

சனி, 1 ஆக 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon