மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 28 அக் 2020

முதல்வருக்கு எதிராக அவதூறு: சீமான் மனு தள்ளுபடி!

முதல்வருக்கு எதிராக அவதூறு: சீமான் மனு தள்ளுபடி!

அவதூறு வழக்கை ரத்துசெய்யக் கோரிய சீமான் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 14-ஆம் தேதி பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில், “தமிழக அரசின் அதிகாரம் மத்திய அரசிடம் தான் உள்ளது. மாநில அரசுக்கும், முதலமைச்சருக்கும் அதிகாரம் எதுவும் இல்லை” என்று கருத்து தெரிவித்தார். முதலமைச்சர் குறித்தும் விமர்சனங்களை முன்வைத்தார்.

இந்த பேட்டி பல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது.இதையடுத்து சீமான் மீது முதலமைச்சர் சார்பில் சென்னை மாநகர குற்றவியல் அரசு வக்கீல் அவதூறு வழக்கை தாக்கல் செய்தார். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சீமான் வழக்குத் தொடர்ந்தார்.

வழக்கு விசாரணையில் சீமான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “இந்த வழக்கு உள்நோக்கத்துடன் தொடரப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள பேச்சு சுதந்திரத்தின் அடிப்படையில்தான் நான் பேசினேன். முதல்வர் குறித்து தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்யவில்லை. பொது வாழ்க்கையில் அவரது பணி தொடர்பான நடவடிக்கைகளையே விமர்சித்தேன். ஆகவே, என் மீதான வழக்கை ரத்து செய்யவேண்டும்” என்று வாதிட்டார்.

ஆனால் அரசுத் தரப்பில், “முதல்வர் குறித்து சீமான் கடுமையான வார்த்தைகள் கொண்டு அவதூறாகப் பேசியுள்ளதால், வழக்கை ரத்து செய்யக்கூடாது” என வாதம் எடுத்துவைக்கப்பட்டது. இந்த வழக்கில் நேற்று (ஜூலை 31) தீர்ப்பளித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், அரசு தரப்பு வாதத்தை ஏற்று அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரும் சீமானின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

எழில்

வெள்ளி, 31 ஜூலை 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon