மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 25 அக் 2020

நெஞ்சில் நிறைந்த நாஞ்சிலார்: இருபதாம் நினைவு தினம்!

நெஞ்சில் நிறைந்த நாஞ்சிலார்: இருபதாம் நினைவு தினம்!

முன்னாள் அமைச்சரும், சிறந்த நாடாளுமன்ற வாதியும், திராவிட இயக்க முன்னோடிகளில் ஒருவருமான நாஞ்சிலார் எனப்படும் நாஞ்சில் மனோகரனின் இருபதாவது நினைவு தினம் இன்று (ஆகஸ்டு 1) அனுசரிக்கப்படுகிறது.

திமுக பேச்சாளராக தனது இளம் வயதிலேயே அரசியல் பணியைத் தொடங்கிய நாஞ்சிலார் திமுகவில் குறுகிய காலத்தில் அண்ணாவின் அன்பைப் பெற்றார். இளம் வயதிலேயே அண்ணாவால் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட வைக்கப்பட்டார். ஆனால், அதில் தோல்வியைத் தழுவினாலும், நாஞ்சிலாரின் மதிப்பை உணர்ந்த அண்ணா... 1962இல் தென் சென்னை மக்களவைத் தொகுதி உறுப்பினராக அனுப்பி வைத்தார். 1967, 1971இல் வடசென்னை மக்களவைத் தொகுதி உறுப்பினராகவும் டெல்லி சென்றார் நாஞ்சிலார். நான்குமுறை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த நாஞ்சிலார்... எம்.ஜி.ஆரின் அமைச்சரவையில் நிதியமைச்சராகவும் திமுக அமைச்சரவையில் வருவாய்த்துறை அமைச்சராகவும் பணிசெய்து திமுக-வின் துணை பொதுச்செயலாளர் அளவுக்கு உயர்ந்து 2000இல் மறைந்தார்.

நாஞ்சிலாரின் 20 ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிற நிலையில், சென்னையிலுள்ள அவரது வீட்டில் அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் நாஞ்சிலாரை நெஞ்சில் சுமந்த தம்பிகள். ‘கொரோனா நேரத்துல...’ என்று குடும்பத்தினர் கேட்டபோதும் நாஞ்சிலாருக்கு உரிய மரியாதையை அளித்தே தீருவோம் என்று நாஞ்சிலாரின் உதவியாளர் சின்னி ஏற்பாடு செய்த நிகழ்வில் நாஞ்சிலாரை நேசிக்கும் பலரும் வந்து மரியாதை செலுத்திச் சென்றனர்.

‘இவரைச் சுற்றி வந்தால் என்ன பதவி கிடைக்கும்?’ என்றே எதிர்பார்த்துப் பழகும் இன்றைய அரசியல் உலகில்... இருபது வருடங்களுக்கு முன் மறைந்துவிட்ட நாஞ்சிலாருக்கு செலுத்தப்படும் அஞ்சலி என்பது அவரின் அரசியல் நேர்மைக்கான அத்தாட்சி.

-வேந்தன்

சனி, 1 ஆக 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon