மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 25 அக் 2020

கள்ளச் சந்தையில் கொரோனா மருந்துகள்: விசாரணை தொடங்கியது!

கள்ளச் சந்தையில் கொரோனா மருந்துகள்: விசாரணை தொடங்கியது!

கொரோனா நோயாளிகளுக்கு வழங்கும் உயிர்காக்கும் மருந்துகள் கள்ளச் சந்தையில் விற்கப்படுவது பற்றி புகார்கள் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று (ஜூலை 31) கடுமையாக எச்சரித்திருந்தார். இந்த நிலையில், மாநில மருந்துகள் கட்டுப்பாட்டுத் துறை, கள்ளச் சந்தையில் மருந்துகள் விற்பனை நடைபெறுவது தொடர்பாக விசாரணையைத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாகவும், இதற்கு கள்ளச் சந்தை விற்பனையே காரணம் என்றும் மதிமிக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து இன்று (ஆகஸ்டு 1) அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

“கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் ரெம்டிசிவிர் (Remdesivir), டோசிலிசம்ப் (Tocilizumab) ஆகிய மருந்துகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. கொரோனா பீடிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இந்த மருந்துகளை அளிப்பதன் மூலம் நோயாளிகள் உயிர் பிழைப்பார்கள் என்பதற்கு நூறு விழுக்காடு உத்தரவாதம் இல்லை. ஆனால் இவற்றை நோயாளிகளுக்கு தருவதன் மூலம் ஓரளவு நம்பிக்கை ஏற்படுவதாக மருத்துவர்கள் கருதுகின்றனர்.

கொரோனா பாதிப்புக்குள்ளாகி அதிக காய்ச்சல், மூச்சுத் திணறல் ஏற்பட்டு, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு ரெம்டிசிவிர், டோசிலிசம்ப் மருந்துகள் கொடுக்கலாம் என்று ஐ.சி.எம்.ஆர். பரிந்துரைத்துள்ளது.

அரசு மருத்துவமனைகளில் இவை இருப்பு வைக்கப்பட்டுள்ளன. ஆனால் தனியார் மருத்துவமனைகளில் ரெம்டிசிவிர், டோசிலிசம்ப் மருந்துகள் போதிய அளவு கிடைக்காமல் தட்டுப்பாடு நிலவுகிறது.

தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு இந்த மருந்துகளை வழங்க, வெளியில் உள்ள முகவர்களிடம் வாங்கி வருமாறு கூறுகின்றனர். முகவரிடம் தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினரே தொடர்பில் உள்ளனர். இம்மருந்துகள் கிடைக்காமல் தட்டுப்பாடுகள் நிலவுவதால், மருந்து முகவர்கள் கள்ளச் சந்தையில் மூன்று மடங்கு அதிக விலை வைத்து விற்பனை செய்து, கொள்ளை அடிப்பதாக செய்திகள் வருகின்றன.

ரெம்டிசிவிர் ஒரு குப்பிக்கு ரூ.3100 என்ற அளவில் (12 % ஜி.எஸ்.டி. நீங்கலாக) அரசு கொள்முதல் செய்கிறது. இதன் எம்.ஆர்.பி. விலை ரூபாய் 5 ஆயிரம். (ஜி.எஸ்.டி.சேர்க்காமல்) என விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் மருந்து முகவர்கள் கள்ளச் சந்தையில் ரெம்டிசிவிர் மருந்தை ரூ.12500 முதல் ரூ.15000 என மூன்று மடங்கு விலைக்கு விற்று லாபம் ஈட்டுகின்றனர். இதைப் போலவே டோசிலிசம்ப் மருந்து ஒரு குப்பிக்கு ஜி.எஸ்.டி. நீங்கலாக ரூ.28500 ஆக அரசு விலை நிர்ணயம் செய்கிறது. ஆனால் கள்ளச் சந்தையில் இதன் விலை ரூ.75 ஆயிரம் முதல் 90 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது” என்று பட்டியலிட்டுள்ளார் வைகோ.

மேலும் அவர், “திருச்சியில் தனியார் மருத்துவமனையில் ஒரு நோயாளிக்கு ரெம்டிசிவிர் மருந்தை 6 குப்பிக்கு ரூ.75 ஆயிரம் முகவரிடம் கொடுத்து கள்ளச் சந்தையில் வாங்கி பயன்படுத்தியதை அறிந்த இந்திய மருந்து சங்கத்தின் தமிழ்நாடு தலைவர் சி.என்.ராஜா அந்த முகவரிடமே நேரடியாகப் பேசி உண்மையை அறிந்துள்ளார். பின்னர் அதுபற்றி சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு மருந்துகள் கட்டுப்பாட்டுத் துறையிடம் புகார் அளித்துள்ளார்.

இதே போன்று திருச்சியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனா நோயாளி ஒருவருக்கு மருந்து இருப்பு இல்லை என்று மருத்துவமனை நிர்வாகம் முகவரிடம் வாங்கிக் கொடுத்து மூன்று நாள் சிகிச்சை செலவு ரூ. 1.40 இலட்சம் ஆனதாக தகவல் வந்துள்ளது.

ரெம்டிசிவிர், டோசிலிசம்ப் மருந்துகள் தட்டுப்பாடு குறித்தும், கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பது குறித்தும் தமிழக சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் எச்சரித்திருப்பது ஆறுதல் தருகிறது. கொரோனா நோயாளிகளுக்கு தட்டுப்பாடுகள் இன்றி ரெம்டிசிவிர், டோசிலிசம்ப் மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று கூறியுள்ளார்.

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “மருந்து தட்டுப்பாடு இருந்தாலும் அதை முன் கூட்டியே மருத்துவ சேவைக் கழகம் வாங்கிவிட்டது. தற்போது போதிய அளவு மருந்து கைவசம் உள்ளது. நோயாளிகளுக்கு ஏற்ப தனியார் மருத்துவமனைகள் எங்களிடமே அதை வாங்கிக்கொள்ளலாம்’ என்று கூறினார். மேலும் கள்ளச்சந்தையில் மருந்து விற்கப்படுவதாக புகார் வந்தால் அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்” என்று எச்சரித்தார். ஆனால் தனியார் மருத்துவமனைகள் இம்மருந்தை அரசிடம் வாங்காமல் முகவர்களிடம் நாடுவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில், மாநில மருந்துகள் கட்டுப்பாட்டுத் துறையின் இயக்குநர் கே.சிவபாலன், கள்ளச் சந்தையில் ரெம்டிசிவிர் விற்பனை நடைபெறுவது தொடர்பாக நேற்று விசாரணை தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக சில நடவடிக்கையும் எடுத்துள்ளோம். விசாரணை தொடர்ந்து நடந்துகொண்டிருப்பதால் இதுகுறித்த விவரங்கள் விரைவில் தெரியவரும்” என்று தெரிவித்துள்ளார்.

-வேந்தன்

சனி, 1 ஆக 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon