மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 31 ஜூலை 2020

இந்தி எதிர்ப்பு வரலாறு திரும்பும்: பொன்முடி

இந்தி எதிர்ப்பு வரலாறு திரும்பும்: பொன்முடி

பல்கலைக் கழகங்களை நிர்வகிக்க பிரதமர் தலைமையில் ஏன் குழு அமைக்க வேண்டுமென பொன்முடி கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, புதிய தேசிய கல்விக் கொள்கை 2020க்கு நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது. மும்மொழிக் கொள்கை, ஒரே நுழைவுத் தேர்வு, 3ஆம் வகுப்பிலேயே தேர்வு என்பது உள்ளிட்ட இதிலுள்ள பல்வேறு அம்சங்கள் சனாதன கல்வி முறையை புகுத்த முயல்வது போல இருப்பதாகவும், இதனை மாநில அரசுகள் நிராகரிக்க வேண்டுமெனவும் தமிழக கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தக் கூடாது என தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை, ஊரடங்கு காலத்தில் மாநில அரசு மேற்கொண்டு வரும் ஆன்-லைன் வகுப்புகள் குறித்த முன்னாள் உயர்கல்வித் துறை அமைச்சரும், திமுக மூத்த தலைவருமான பொன்முடி விழுப்புரத்தில் இன்று (ஜூலை 31) செய்தியாளர்களை சந்தித்தார்.

பல்வேறு மொழிகள், மதம், இனம் போன்ற வேறுபாடுகளைக் கொண்ட இந்திய நாட்டை ஒற்றை மொழி, ஒற்றை மதம் போன்று ஒற்றைத் தன்மையாக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டு இந்த கல்விக் கொள்கையை வெளியிட்டுள்ளது என்று குற்றம்சாட்டிய பொன்முடி, “கடந்த ஆண்டு மத்திய அரசு கல்விக் கொள்கை வரைவை வெளியிட்டபோது கல்வியாளர்கள் மற்றும் நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைத்த திமுக, அதனை ஆராய்ந்து ஒரு பரிந்துரையை மத்திய அரசுக்கு வழங்கியது. ஆனால் அந்தப் பரிந்துரைகளை மத்திய அரசு சரியாக கையாளவில்லை” என்றும் விமர்சித்தார்.

இந்த கல்விக் கொள்கை மூலமாக மாநில அரசின் அதிகாரங்களை பறிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், அனைத்து பல்கலைக்கழகங்களை நிர்வகிக்க பிரதமர் தலைமையிலான குழு எதற்கு என்றும் கேள்வி எழுப்பிய அவர், இந்தப் பிரச்சினையை கருத்தில் கொண்டுதான் திமுக கல்வியை ஒப்புதல் பட்டியலில் இருந்து மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்துவதாகவும் குறிப்பிட்டார்.

அண்ணா காலத்திலிருந்து தமிழகத்தில் இரு மொழிக் கல்வி திட்டம் சிறப்பாக செயல்பட்டு வரும் போது இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை திணிக்க மத்திய அரசு தீவிரமாக முயன்று வருவதாக தெரிவித்தார். இந்தியை மட்டும் படித்தவர்கள் தற்போது தமிழகத்தில் கூலி வேலை செய்துவரும் நிலையில் தமிழக மாணவர்களையும் இந்தி படிக்க வைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது என்று சாடினார்.

ஆன்லைன் வகுப்புகள் குறித்து பேசிய அவர், “தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் பள்ளிகள் திறக்க இயலாத நிலையில் ஆன்லைன் வகுப்புகளை நடத்த மாநில அரசு திட்டமிட்டு வருகிறது. ஆனால் பாதிக்கும் மேற்பட்ட மாணவர்கள் கிராமப்புறத்தில் இருந்து படித்து வருவதால் இந்த ஆன்லைன் வகுப்புகள் அவர்களுக்கு சிரமமாக இருக்கும்” என்று விளக்கினார்.

செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பொன்முடி, “இந்த புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு அமல்படுத்த முயன்றால் 1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தை போன்ற பெரிய போராட்டத்தை திமுக நடத்தும்” என்று எச்சரிக்கை விடுத்தார்.

விஜய் எங்கே?

4 நிமிட வாசிப்பு

விஜய் எங்கே?

அமைச்சர்களை கைது செய்த சிபிஐ அதிகாரிகளை கைது செய்ய மம்தா உத்தரவு! ...

8 நிமிட வாசிப்பு

அமைச்சர்களை கைது செய்த சிபிஐ அதிகாரிகளை கைது செய்ய மம்தா உத்தரவு!

முதல்வர் தலைமையிலான குழுவில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ...

3 நிமிட வாசிப்பு

முதல்வர் தலைமையிலான குழுவில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

வெள்ளி 31 ஜூலை 2020