மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 28 ஜன 2021

இன்றைய நிலைக்குக் காரணம் என்ன? காங்கிரஸுக்குள் கலகக் குரல்!

இன்றைய நிலைக்குக் காரணம் என்ன? காங்கிரஸுக்குள் கலகக் குரல்!வெற்றிநடை போடும் தமிழகம்

காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா உறுப்பினர்கள் உடனான முக்கியமான காணொளிக்காட்சி கூட்டத்தை நேற்று ஜூலை 30 கட்சித் தலைவர் சோனியா காந்தி நடத்தினார். இந்தக் கூட்டத்தில் காங்கிரஸில் தற்போது நிலவும் முக்கியமான பிரச்சினைகள் அதற்கான தீர்வுகள் உள்ளிட்டவை வெளிப்படையாக விவாதிக்கப்பட்டன என்கிறார்கள் டெல்லி பத்திரிகையாளர்கள்.

தமிழகக் காங்கிரஸ் கட்சியில் ஆய்வுக் கூட்டங்கள் சத்தியமூர்த்தி பவனில் நடக்கும்போது கட்சியின் நன்மை கருதி சிலர் கசப்பான உண்மைகளை எடுத்து வைப்பதுண்டு. அப்போது அது சர்ச்சையாகி சலசலப்பாகி பிறகு அந்தக் கருத்தைச் சொன்னவர் கட்சியில் இருந்தே வெளியேற்றப் படுவதும் உண்டு. ஆனால் அந்தக் கருத்துக்களை காங்கிரஸ் ஏற்றுக்கொண்டு செயல்படுத்தி இருந்தால் கட்சி நன்றாக வளர்ந்திருக்கும் என்று இன்னமும் காங்கிரஸ் கட்சியில் இருக்கும் சில தலைவர்கள் கூறி வருகிறார்கள்.

இந்த நிலையில்தான் காங்கிரஸின் தேசிய அளவில் நடந்த இந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட மூத்த உறுப்பினர்களும் இளம் உறுப்பினர்களும் தங்கள் உள்ளத்தை உடைத்து வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்கள்.

கூட்டத்தில் பேசிய முன்னாள் சட்ட அமைச்சர் கபில் சிபல், “தற்போது காங்கிரஸ் கட்சி செயல்படும் முறை பல்வேறு கேள்விகளை எழுப்புவதாக இருக்கிறது. முக்கியமான தலைவர்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பும்.... தலைமைக்கும் முக்கியத் தலைவர்களுக்கும் இடையேயான ஒருங்கிணைப்பும் குறைவாக இருக்கிறது"என்று குறிப்பிட்ட கபில்சிபல் சமீபத்திய ராஜஸ்தான் மாநில நெருக்கடியில் காங்கிரஸ் தலைமை மிகத் தாமதமாக மிக மெத்தனமாக செயல்பட்டதை சுட்டிக்காட்டியிருக்கிறார்.

தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் இந்த கூட்டத்தில் பேசும்போது," மோடி அரசு ஒவ்வொரு விஷயத்திலும் தோல்வியை சந்தித்து வருகிறது. மோடி அரசின் தோல்விகளை மக்கள் மத்தியில் கொண்டு சென்று அந்த தோல்விக்கு எதிராக மக்களது ஆதரவை காங்கிரஸ் பக்கம் திருப்புவதற்கான காங்கிரசின் முயற்சி மிக பலவீனமாக இருக்கிறது" என்று கூறினார்.

2009-14 ஆட்சிதான் காரணம்

புதிதாக மாநிலங்களவை உறுப்பினரான குஜராத்தைச் சேர்ந்த ராஜீவ் சாதவ்தான் இந்த கூட்டத்தின் கவன ஈர்ப்பு மையமாக விளங்கினார் என்கிறார்கள் டெல்லி பத்திரிகையாளர்கள். அவர் பேசுகையில், “காங்கிரசின் மூத்த தலைவர்கள் இளைய தலைமுறைக்கு வழிகாட்டுபவர்களாக அவர்களுக்கு இடமளிக்கும் தாராள மனப்பான்மை உடையவர்களாக இருக்க வேண்டும். ஆனால் மத்தியபிரதேசம் முதல் ராஜஸ்தான் வரை இதில் எதுவும் நடக்கவில்லை. 2009-இல் ஆளுங்கட்சியாக இருந்த நாம் வெறும் 44 சீட்டுகளுக்கு எப்படி வந்தோம். அங்கிருந்து ஆராயவேண்டும். அங்கிருந்து ஆராய்ந்தால் தான் நாம் மீண்டும் எழுவதற்கான காரணிகளை நம்மால் கண்டுபிடிக்க முடியும். 2009ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 200க்கும் மேற்பட்ட இடங்களை வென்ற நாம், அந்த ஆட்சியின் அமைச்சர்களின் செயல்பாடுகளால் தான் இந்த நிலைமைக்கு வந்திருக்கிறோம்.

மூத்த தலைவர்கள் இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும். காங்கிரஸ் கட்சி பழைய தலைமுறையிலேயே தங்கி இருக்க வேண்டும் என்பது சிலருடைய கனவாக இருக்கிறது. காங்கிரஸ் கட்சி புதியவர்கள் கையில் வர வேண்டும் இளைய தலைமுறையினர் காங்கிரஸ் கட்சியை துடிப்பான எதிர்காலத்தை உருவாக்கித் தருவார்கள். எனவே காங்கிரஸ் இளைஞர்களிடம் ஒப்படையுங்கள்" என்று பேசியிருக்கிறார் முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவரும் தற்போதைய குஜராத் பொறுப்பாளருமான ராஜீவ் சாதவ்.

இவரது பேச்சு கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை கடும் மன வருத்தத்தில் ஆழ்த்திவிட்டதாகச் சொல்கிறார்கள். ஏனெனில் காங்கிரசின் இன்றைய நிலைக்குக் காரணம் 2009-14 காங்கிரஸ் ஆட்சிதான் என்று கூறியதில் மன்மோகன் சிங் அதிருப்தி அடைந்திருக்கிறார்.

அதேநேரம் பஞ்சாப்பைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ஷம்ஷர் துல்லோ, “காங்கிரஸில் மூத்தவர்களை புறக்கணிக்கிறீர்கள். காங்கிரஸ் கட்டமைப்பை வளர்க்க ரத்தமும், வியர்வையும் சிந்தி உழைத்தவர்கள் மூத்தவர்கள்தான். இப்போது இருக்கும் இளைஞர்கள் அல்ல. பதவிகளையும் பொறுப்புகளையும் தனிநபர் விருப்ப அடிப்படையில் கொடுக்கிறீர்கள். தகுதியும் சீனியாரிட்டியும் பதவிக்கான காரணிகளாக இருக்கவில்லை” என்று சாதவ்வுக்கு பதில் அளித்தார்.

ஃபேஸ்புக் அல்ல ஃபேஸ் டு ஃபேஸ்

பஞ்சாப்பை சேர்ந்த இன்னொரு எம்பி பிரதாப் சிங் பாஜ்வா, “பாஜக அரசாங்கத்தின் தோல்விகளை நாம் ஃபேஸ்புக்கிலும், ட்விட்டரிலும், இன்ஸ்டாகிராமிலும் போஸ்ட் செய்துவிட்டு நின்றுவிடக் கூடாது. காங்கிரஸ் தொண்டர்கள் நாட்டின் ஒவ்வொரு தெருவுக்கும் செல்ல வேண்டும். மக்களைச் சந்திக்க வேண்டும். பாஜக அரசின் மக்கள் விரோத போக்குகளின் விளைவை எடுத்துக் கூற வேண்டும். இந்தியாவின் இண்டு இடுக்குகளில் எல்லாம் காங்கிரஸ் தொண்டர்கள் மக்களை சந்தித்துக் கொண்டே இருக்க வேண்டும்” என்று பேசியிருக்கிறார்.

மீண்டும் ராகுல்

இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சரான திக்விஜய் சிங், “காங்கிரஸ் தலைவராக மீண்டும் ராகுல் காந்தி பதவியேற்க வேண்டும். அதுதான் இப்போது காங்கிரசை பலப்படுத்த சிறந்த நடவடிக்கையாக இருக்கும்” என்றார். அவருக்கு ராஜீவ் சாத்வ், அஸ்ஸாம் காங்கிரஸ் தலைவர் ரிபுன் போரா உள்ளிட்ட பலரும் ஆதரவளித்தனர். காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவியை ராகுல் காந்தியிடம் கொடுக்கவண்டும் என்றும் ஒவ்வொரு மாநிலத்திலும் இளைய தலைமுறையினரை பொறுப்பாளர்களாக நியமிக்க வேண்டும் என்பதும்தான் அவர்களுடைய கோரிக்கை.

காங்கிரஸ் கட்சிக்குள் நடக்கும் சீனியர்-ஜூனியர் கருத்து வேறுபாடுகள் இப்போது கட்சிக்குள்ளேயே விவாதமாகியிருக்கிறது. இந்தக் கலகக் குரல்கள் ஒரு தீர்வைத் தருமா என்று எதிர்பார்க்கிறார்கள் காங்கிரஸ் நிர்வாகிகள்.

-வேந்தன்

வெள்ளி, 31 ஜூலை 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon