மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 9 ஆக 2020

குஷ்புவுக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்!

குஷ்புவுக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்!

குஷ்புவின் செயல் அரசியல் முதிர்ச்சியற்றது என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை புதிய தேசிய கல்விக் கொள்கை 2020க்கு நேற்று முன் தினம் ஒப்புதல் அளித்தது. இது வரவேற்க வேண்டிய நகர்வு என காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு கருத்து தெரிவித்தார். புதிய கல்விக் கொள்கையின் பல அம்சங்களை விமர்சித்து, அதனை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்திய நிலையில், குஷ்புவின் மாற்றுக் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.

குஷ்பு பாஜகவில் இணையப்போவதாக தகவல்கள் பரவ, தான் பாஜகவுக்கு செல்லவில்லை என மறுப்பு தெரிவித்தார். எனது நிலைப்பாடு காங்கிரஸிலிருந்து வேறுபடுவதற்காக ராகுல் காந்தியிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் தலையை ஆட்டும் ரோபோ அல்லது கைப்பாவையாக இருப்பதை விட உண்மையை பேசுகிறேன் என்றும் கூறினார். புதிய கல்விக்கொள்கையில் சில இடங்களில் குறைகள் இருப்பினும், மாற்றத்தை நேர்மறையுடன் பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, “காங்கிரஸ் உலகின் மிகப்பெரிய ஜனநாயக அரசியல் கட்சி. கட்சிக்குள் எந்தவொரு சர்ச்சைக்குரிய விஷயத்தையும் நாங்கள் பேச முடியும். கட்சியின் அமைப்புக்குள் பேசினால் அதற்கு வரவேற்பு உண்டு. பொது வெளியில் பேசினால் அது அரசியல் முதிர்ச்சியற்றது, ஒழுக்கமற்றது என அழைக்கப்படுகிறது. அது விரக்தியிலிருந்து வருகிறது. அதனை குணப்படுத்த யோகா சிறந்த மருந்து” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அழகிரி, “ஏதோ லாபம் எதிர்பார்த்து அவர் அவ்வாறு பேசியிருக்கிறார் என்பதுதான் எனது கருத்து, கட்சியின் கருத்தும் அதுதான். புதிய கல்வி கொள்கை அபத்தமானது என்பதோடு, மீண்டும் சனாதன கல்வியை புகுத்த முயல்வது போல உள்ளது. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் புதிய கல்விக்கொள்கையை எதிர்க்கின்றனர்” என்றும் கூறினார்.

எழில்

வெள்ளி, 31 ஜூலை 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon