மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 31 ஜூலை 2020

மழலையர் கல்வியைக்கூட முடிவு செய்வதா? திமுக எதிர்ப்பு!

மழலையர் கல்வியைக்கூட முடிவு செய்வதா? திமுக எதிர்ப்பு!

புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி மூலமாக திமுக மாவட்டச் செயலாளர்கள் - நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் - உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்கள் கூட்டம் நேற்று (ஜூலை 30) நடைபெற்றது. அதில் கொரோனா நிலவரங்கள், திமுகவின் ஆக்கபூர்வ பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டன.

கூட்டத்தில் கலைஞரின் இரண்டாவது நினைவு நாள் ஆகஸ்ட் 7ஆம் தேதி அனுசரிக்கப்படுவதை அடுத்து, அன்றைய தினம் கொரோனா முன்களப் பணியாளர்களுக்கும் சிறப்பு செய்வதென்றும்; வாழ்வாதாரத்தைத் தொலைத்துவிட்டு ஆங்காங்கே வறுமையின் கோரப்பிடியில் சிக்கிச் சுழலும் ஏழை எளியவர்களுக்கு, நலத்திட்ட உதவிகளை வழங்குவதென்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து ஓபிசி இட ஒதுக்கீடு தொடர்பாக வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றதற்காக மு.க.ஸ்டாலினுக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அத்துடன் இட ஒதுக்கீடு தொடர்பாக தனது கூட்டணிக் கட்சியாக இருக்கும் பாஜகவின் பிரதமருக்கு உடனடியாக முதலமைச்சர் அழுத்தம் கொடுத்து இந்தக் கல்வியாண்டிலேயே இட ஒதுக்கீடு கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை 2020ஐத் திரும்பப் பெற வேண்டும் எனவும், ஏற்கனவே உள்ள சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை 2006ஐ மேலும் வலுப்படுத்தும் வகையில் மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மழலையர் கல்வியைக்கூட மத்திய அரசு முடிவு செய்வதா என்று வெளியிடப்பட்ட தீர்மானத்தில், “நாடாளுமன்ற அமர்வு இல்லாத கொரோனா பேரிடர் அனைத்து மாநிலங்களிலும் ஊடுருவி மக்களை வதைத்துவரும் இந்த நேரத்தில் மக்கள் பிரதிநிதிகளின் விவாதத்துக்கே இடம் அளிக்காமல் - இக்கொள்கை குறித்து மத்திய அமைச்சரவை முடிவு எடுத்திருப்பது நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு எதிரானது.

ஒட்டுமொத்தத் தமிழக மக்கள் கொண்டுள்ள எண்ணத்தின் எதிரொலியாக திராவிட முன்னேற்றக் கழகம் காட்டிய வலிமையான எதிர்ப்பினை அடுத்து, இந்தி கட்டாயம் அல்ல என்று புதிய கல்விக் கொள்கை - 2020க்கு ஒப்புதல் அளித்துள்ளது. மும்மொழித் திட்டம் செயல்படுத்தப்படும் என்ற மத்திய அரசின் கல்விக் கொள்கை, தமிழகத்தில் இருந்துவரும் இருமொழிக் கொள்கைக்கு முற்றிலும் விரோதமானது என்று தெரிவித்து, அந்த மும்மொழித் திட்டத்தை ஆணித்தரமாகவும், கடுமையாகவும் எதிர்த்து, நிராகரிக்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலைஞர் நிறைவேற்றிய, 1 முதல் 10ஆம் வகுப்பு வரை தமிழ்மொழி கட்டாயப் பாடம் என்பதன் அடிப்படையில் தற்போது 1 முதல் 5ஆம் வகுப்பு வரை அகில இந்திய அளவில் தாய் மொழிக் கல்வி ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது கல்விக் கொள்கையில் திமுகவின் தொலைநோக்கு பார்வைக்குக் கிடைத்த வெற்றி எனவும், அதேநேரத்தில் சம்ஸ்கிருத மொழிக்கு மட்டும் கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவம், ஏனைய இந்திய மொழிகள் மீது கொண்டுள்ள மாற்றாந்தாய் மனப்பான்மையை உணர்த்துகிறது என்றும் சாடியுள்ளது.

ஊட்டச்சத்தையும், ஆரோக்கியத்தையும் இணைத்து வழங்கப்பட வேண்டிய மழலையர் பருவத்தில் முறைசார்ந்த கல்வி, 3,5,8ஆம் வகுப்புகளுக்குத் தேர்வு, தமிழகத்தில் வெற்றிகரமாக இயங்கும் ‘ப்ளஸ் டூ’ கல்விமுறையில் மாற்றம், தமிழகத்தில் மக்களால் புறக்கணிக்கப்பட்ட ‘குலக்கல்வி’த் திட்டத்தின் மறு வடிவமான தொழிற்கல்வி, இருக்கின்ற பள்ளிகளை மூட வழி வகுக்கும் பள்ளி வளாகங்கள், ஆசிரியர் தேர்வு, ஆசிரியர் பணி குறித்த தர நிர்ணயம் உள்ளிட்டவை, மாநிலங்களிடம் எஞ்சியிருக்கும் கல்வி உரிமையிலும் தேவையே இல்லாமல் தலையிட்டு - மத்திய அரசைத் தவிர மாநிலங்களுக்கு கல்விச் சீர்திருத்தம் பற்றி எதுவுமே தெரியாது என்று நினைப்பது மேலாதிக்கப் போக்காகும்.

மாணவச் சமுதாயத்துக்கு இளம் வயதிலேயே தலையில் தூக்கமுடியாத சுமையையும், மனதில் தாங்கவியலாத அழுத்தத்தையும் ஒருசேர ஏற்படுத்துவது - குழந்தைகளின் உரிமையை அப்பட்டமாக மீறும் அநியாயச் செயலாகும்.

மழலைக் கல்வியைக்கூட மத்திய அரசு முடிவு செய்யும் என்கிற இந்த தேசியக் கல்விக் கொள்கை திமுக அளித்த பரிந்துரைகளுக்கு எதிராக இருக்கிறது. ஆகவே, பொதுப்பட்டியலில் உள்ள கல்வி, மீண்டும் மாநிலப் பட்டியலுக்கே கொண்டு வரப்பட வேண்டும் என்றும் திமுக கோரிக்கை வைத்துள்ளது.

ஆகவே நாடாளுமன்றம் கூடி கூட்டாட்சித் தத்துவம், சமூகநீதி, சமத்துவம் ஆகியவை குறித்து அனைத்து மாநிலக் கட்சிகளும் விவாதிக்கும் வரை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள புதிய தேசியக் கொள்கை 2020-ஐ நடைமுறைப்படுத்தக் கூடாது என்றும், தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கைக்கு இடமில்லை என்றும் சமூகநீதி, மாநில உரிமைகள் ஆகியவற்றைப் புறக்கணித்து, ஒருதலைபட்சமானதாக அமைந்துள்ள இந்தக் கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்றும் அதிமுக அரசு தீர்மானமாக உடனே அறிவித்திட வேண்டும் என்றும் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

விஜய் எங்கே?

4 நிமிட வாசிப்பு

விஜய் எங்கே?

அமைச்சர்களை கைது செய்த சிபிஐ அதிகாரிகளை கைது செய்ய மம்தா உத்தரவு! ...

8 நிமிட வாசிப்பு

அமைச்சர்களை கைது செய்த சிபிஐ அதிகாரிகளை கைது செய்ய மம்தா உத்தரவு!

முதல்வர் தலைமையிலான குழுவில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ...

3 நிமிட வாசிப்பு

முதல்வர் தலைமையிலான குழுவில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

வெள்ளி 31 ஜூலை 2020