lரஜினி வருவாரா? ஸ்டாலின் வீட்டில் ஆலோசனை!

politics

திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் ஊரடங்கு காரணமாக தற்போது அதிகமாக வெளிநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்துவிட்டு வீட்டிலேயே இருந்து கட்சிப் பணிகளையும் ஆலோசனைகளையும் மேற்கொள்கிறார். ஒவ்வொரு நாளும் திமுகவின் பல்வேறு நிர்வாகிகளிடம் கலந்துரையாடல், மருத்துவ நிபுணர்கள், பொருளாதார அறிஞர்களுடன் ஆலோசனை என காணொலியிலேயே தன் செயல்பாட்டை அமைத்துக் கொள்கிறார்.

இதோடு 2021 தேர்தல் பற்றிய முக்கிய ஆலோசனைகளையும் தனது முக்கிய நண்பர்களுடன் ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார். இந்த வகையில், ரஜினிகாந்த் கட்சி தொடங்குவாரா, இல்லையா என்ற விவாதமும் ஸ்டாலின் வட்டாரத்தில் நடந்திருக்கிறது. கலாநிதிமாறன், பிரசாந்த் கிஷோர் போன்றோர், ரஜினி அரசியலுக்கு வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு என்று ஸ்டாலினிடம் சொல்லியிருக்கிறார்கள். அதேநேரம் ரஜினிக்கு நெருக்கமான அரசியல் வட்டாரங்களில் இருந்தும் ஸ்டாலினுக்கு இதுகுறித்த தகவல்கள் சென்றுகொண்டிருக்கின்றன.

இதற்கிடையே ஜூலை 15ஆம் தேதி காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்த ரஜினிக்கு நெருக்கமான சென்னை முன்னாள் பொறுப்பு மேயர் கராத்தே தியாகராஜன், “ஆகஸ்ட் மாதமே ரஜினி கட்சி ஆரம்பிப்பதாக திட்டமிட்டிருந்தார். ஆனால் கொரோனா காரணமாக அது தள்ளிப்போனது. நவம்பர் மாதத்தில் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பார்” என்று தெரிவித்தார். இப்போது வரை தேர்தலில் திமுக அதிகபட்ச வெற்றி அடைவதற்கான வாய்ப்பு இருப்பதாக பி.கே.வின் கணிப்புகள் தெரிவித்துள்ள நிலையில், ரஜினி அரசியலுக்கு வந்தால் தேர்தலை சந்தித்தால் 2021 தேர்தலின் மைய நோக்கு மாறுமா என்ற விவாதமும் ஸ்டாலின் வீட்டில் நடந்திருக்கிறது.

இதற்கிடையில் ஒவ்வொரு நாளும் திமுகவின் அனைத்து நிர்வாகிகளிடமும் கலந்துரையாட திட்டமிட்டு அதை செயல்படுத்தி வரும் ஸ்டாலின்… அடுத்து இன்னொரு திட்டத்தையும் வகுத்துள்ளார்.

ஒரு தொகுதிக்கு 200 நபர்கள் என்று தேர்ந்தெடுத்து அவர்களிடம் காணொலி முறையில் உரையாடுவது தான் அந்தத் திட்டம். அந்த 200 பேரும் திமுகவின் நிர்வாகிகளாக இருக்க மாட்டார்கள். திமுகவின் கொள்கைப் பிடிப்புள்ள பழைய முன்னாள் நிர்வாகிகளாகவும் திமுக அனுதாபிகளாகவும், பொது சமூகத்தின் பிரதிநிதிகளாகவும் இருப்பார்கள். அந்த 200 பேரை தேர்ந்தெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் ஸ்டாலின் காணொலி வழியாக அவர்களின் வீட்டுக்கே சென்று உரையாட இருக்கிறார் என்கிறார்கள் திமுக தலைமைக் கழக வட்டாரத்தில். ரஜினி அரசியலுக்கு வந்தாலும் வராவிட்டாலும் பொதுமக்கள் உடனான இந்த சந்திப்பு தொடர்ந்துகொண்டே இருக்கும் என்கிறார்கள் திமுகவின் தலைமை நிர்வாகிகள்.

**-வேந்தன்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *