மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 22 அக் 2020

20 லட்சம் பேருக்கு கொரோனா: எச்சரிக்கும் ராகுல்

20 லட்சம் பேருக்கு கொரோனா: எச்சரிக்கும் ராகுல்

இந்தியாவில் கொரோனா 20 லட்சத்தை நெருங்கிவிடும் என ராகுல் காந்தி எச்சரித்துள்ளார்.

இந்தியா முழுவதும் நேற்று ஒரே நாளில் 34,956 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்துள்ளது. 10,03,832 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இவர்களில் 6,35,757 பேர் சிகிச்சை முடிந்து நலம்பெற்று வீடு திரும்பியுள்ளனர். 3,42,473 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 687 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 25 ஆயிரத்து 602 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டரில், “கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டிவிட்டது. இதே வேகத்தில் அதிகரித்தால், ஆகஸ்ட் 10ஆம் தேதி 20 லட்சத்தை எட்டிவிடும். மத்திய அரசு உறுதியான, திட்டமிட்ட நடவடிக்கையை எடுத்து கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

சீனா-இந்தியா எல்லை விவகாரம் தொடர்பாக வெளியிட்டுள்ள மற்றொரு ட்விட்டில், “2014ஆம் ஆண்டிலிருந்து பிரதமர் மோடியின் தொடர்ச்சியான தவறுகளும் அர்த்தமற்ற செயல்களும் இந்தியாவின் அடிப்படையையே ஆட்டம் காண வைத்து, நாட்டை பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கி இருக்கிறது. தற்போதைய புவிசார் அரசியல் உலகில் வெற்று வார்த்தைகள் மட்டுமே போதுமானதல்ல” என்று சாடியுள்ளார் ராகுல் காந்தி.

எழில்

வெள்ளி, 17 ஜூலை 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon