மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 22 அக் 2020

கொரோனாவை விட மோசமானவர்கள்: வலுக்கும் கண்டனம்!

கொரோனாவை விட மோசமானவர்கள்: வலுக்கும் கண்டனம்!

தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கோயம்புத்தூர் மாநகரம் சுந்தராபுரத்தில் அமைந்துள்ள பெரியார் சிலை மீது நேற்றிரவு மர்ம நபர்கள் காவி சாயம் ஊற்றி அவமதித்தனர். தவலறிந்த அங்கு குவிந்த பெரியாரிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதுகுறித்து அருகிலுள்ள கடைகளில் பதிவாகியிருக்கும் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கந்த சஷ்டி கவசம் தொடர்பான பெரியாரிய உணர்வாளர்களுக்கும், இந்து அமைப்பினரிக்கும் கருத்து மோதல் வலுத்து வருகிறது. இந்த நிலையில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மத்தியில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.

திமுக தலைவர் ஸ்டாலின் இதுகுறித்து, “என் மீது செருப்பு வீசப்பட்ட இடத்தில்தான் சிலை வைக்கப்பட்டு இருக்கிறது என்றவர் தந்தை பெரியார். தன் படத்தை எரிக்க நினைத்தவருக்கு அச்சிட்டுக் கொடுத்தார்; எதிர்க் கேள்விகளை எழுதியவருக்கு தன் பேனாவைக் கொடுத்தார். அதனால் அவர் பெரியார். சிறியார்க்கும் சேர்த்தே உழைத்தார் பெரியார்” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்ட கண்டன அறிக்கையில், “அண்மைக் காலமாக அதிமுக ஆட்சியில் தந்தை பெரியார் அவர்களின் உருவச் சிலைகள் தகர்க்கப்படுவதும், தாக்கப்படுவதும், சிதைக்கப்படுவதும், இழிவு செய்யப்படுவதும் தொடர் நிகழ்வாகவே நடந்து வருகிறது.தமிழக அரசு இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கேவலமான இந்தச் செயலில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்துக் கைது செய்து, நீதிமன்றத்தின் முன்நிறுத்தி, கடுமையான தண்டனையைப் பெற்றுத்தரவேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ், இதற்கு காரணமான விஷமிகள் யாராக இருந்தாலும் அவர்களை கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், “கொள்கை அடிப்படையில் எதிர்க்க துணிவில்லாத கொரோனாவை விட மோசமான இந்த நச்சுக்கிருமிகள் மிகவும் ஆபத்தானவர்கள்; சமுதாயத்தில் நஞ்சை பரப்புபவர்கள். அவர்களிடமிருந்து நமது பிள்ளைகளைக் காப்பதும், விழிப்புணர்வூட்டுவதும் தான் நமது முதல் கடமையாக இருக்க வேண்டும்” என ராமதாஸ் கூறியுள்ளார்.

“மறைந்த தலைவர்களை அவமதிப்பதன்மூலம் சமூக அமைதி சீர்குலைய யார் காரணமாக இருந்தாலும் அவர்கள் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.அண்மைக்காலமாக அதிகரித்துவரும் இத்தகைய நிகழ்வுகளுக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்” என்று அமமுக பொதுச் செயலாளர் தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி தனது ட்விட்டரில், “தமிழக மக்களின் ஆதரவை எக்காலத்திலும் பெறமுடியாத ஒரு கும்பல் தொடர்ந்து பெரியார் சிலைகளை அவமதித்து வருகிறது. அவர்கள் மீது இந்த அரசு உறுதியான நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன் ?” எனக் கேள்வி எழுப்பினார்.

மான உணர்வும், சுய மரியாதையும் இல்லாத இந்த அதிமுக அரசு, தந்தை பெரியாரை அவமதிப்பதை பற்றி கண்டு கொள்ளாததில் வியப்பு ஏதுமில்லை. சமூக அமைதியை கெடுக்கும் நோக்கில் செயல்படும் இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், “பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசுவது போன்ற ஈனச் செயல்களை ஏற்றுக் கொள்ள முடியாது.எந்த தலைவரின் சிலை அவமதிக்கப்பட்டாலும் அது தண்டனைக்குரிய குற்றமே ஆகும்” என விமர்சித்துள்ளார்.

எழில்

வெள்ளி, 17 ஜூலை 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon