மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 22 அக் 2020

வாரம் இருவர்: அதிமுக அரசை அசராமல் அடிக்க ஸ்டாலின் ஆணை!

வாரம் இருவர்: அதிமுக அரசை அசராமல் அடிக்க ஸ்டாலின் ஆணை!

திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் எம் எல் ஏ.க்கள் எம் பி, கள் கூட்டம் நேற்று ( ஜூலை 16) அவசரமாக கூடியது. ஏற்கனவே இந்தக் கூட்டத்தின் அஜெண்டா மின் கட்டண உயர்வு குறித்து என்று அறிவிக்கப்பட்டிருந்ததால், தலைவர் மு.க.ஸ்டாலின், ‘இந்த கூட்டத்தில் வேறு எதுவும் பேசவேண்டாம், மின் கட்டணம் சம்பந்தமாக என்ன செய்யலாம் என்று உங்கள் கருத்துக்களை சொல்லுங்க’ என்றார்.

தலைமைக் கழக முதன்மை செயலாளர் கே.என்.நேரு, “அநியாயமா மின் கட்டணம் வசூல் செய்வது பற்றியும், மின் பயன்பாட்டு அளவீடு எடுக்கும் முறையைப் பற்றியும் மக்கள் என்னை பலர் சந்தித்து கஷ்டங்களை சொல்கிறார்கள். இந்த அரசுக்கு நமது எதிர்ப்புகளைக் காட்டவேண்டும்” என கருத்தை பதிவு செய்தார்.

விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளரும் எம்.எல்.ஏ,வுமான பொன்முடி பேசும்போது, “தமிழகம் முழுவதும் மக்களை திரட்டி போராட்டம் செய்யலாம்” என்ற கருத்தை சொன்னபோது, ஸ்டாலின் குறுக்கிட்டு, “கொரோனா வைரஸ் தொற்று பரவிவரும் நேரத்தில், நாம் மக்களுக்கு இடைஞ்சலாக இருக்கக்கூடாது” என்று கூறியுள்ளார்.

விழுப்புரம் கிழக்கு மாவட்ட செயலாளரும் எம். எல். ஏ.வுமான செஞ்சி மஸ்தான் கொரோனா தொற்றால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், மருத்துவமனையிலிருந்தே இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவரிடம் உடல் நலம் விசாரித்த ஸ்டாலின், ‘உடம்பை கவனமா பார்த்துக்குங்க’ என்றார் இந்த மாசெக்கள் கூட்டத்தில் மின் கட்டண உயர்வு பற்றி வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்று போராட்டம் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது.

கூட்டத்தில் கலந்துகொண்ட சில மாசெக்கள் நம்மிடம், “வாரத்தில் இரண்டு முக்கிய நிர்வாகிகளிடம் பத்திரிகையாளர்கள் சந்திப்புகளை நடத்தச் சொல்லி யார் யார் என்ன பேசவேண்டும் என்றும் அசைன்மென்ட் கொடுத்து வருகிறார் திமுக தலைவர் மு க.ஸ்டாலின். அதன்படி இந்த வாரம் முதன்மை செயலாளர் கே.என்.நேருக்கு, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்ற தலைப்பிலும், துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு அதிகரித்துவரும் வன்கொடுமை சம்பந்தமாகவும் பேசச் சொல்லியிருக்கிறார். இதேபோல ஒவ்வொரு வாரமும் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் இருவர் அதிமுக அரசின் அவலங்களை ஆதாரங்களோடு தொடர்ந்து அடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது ஸ்டாலினின் ஆணை. அந்தந்த சப்ஜெக்ட் பற்றி தலைமையும் சில புள்ளி விவரங்களை நிர்வாகிகளுக்கு அனுப்பி வைக்கும். நிர்வாகிகளும் இதுபற்றிய விவரங்களைத் தேடியெடுக்க வேண்டும். அதன்படி நேருவும் சுப்புலட்சுமியும் தாக்குதலைத் தொடங்குகிறார்கள். இனி எடப்பாடி அரசின் மீதான தாக்குதல் தொடரும்” என்கிறார்கள்.

-வணங்காமுடி

வெள்ளி, 17 ஜூலை 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon