மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 22 அக் 2020

அமைச்சர் நிலோபர் கபீலுக்கு கொரோனா!

அமைச்சர் நிலோபர் கபீலுக்கு கொரோனா!

அமைச்சர் நிலோபர் கபீலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மாவட்ட ஆட்சியர்கள், அமைச்சர்கள் ஆகியோரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், தமிழக அமைச்சர்கள் மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், நான்காவதாக தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோபர் கபீலுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே அவரது மகன், மருமகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அமைச்சருக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதில் அவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதால், நிலோபர் கபீல் தனது கிரீன்வேஸ் இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவருக்கு எப்படி கொரோனா பரவியது என்ற சோர்ஸை சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆராயத் தொடங்கியுள்ள நிலையில், அவர் சமீபத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தில் ஓர் விழாவில் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. சமீப நாட்களாக அவருடன் தொடர்பிலிருந்தவர்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்தச் சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது.

கடந்த ஜூலை 9ஆம் தேதி வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் நிலோபர் கபீல் ஆலோசனை நடத்தினார். இதில் திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை பகுதிகளைச் சேர்ந்த உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, தமிழக அமைச்சர்களான உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதில் அமைச்சர் கே.பி.அன்பழகன் நேற்று முன்தினம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு மீண்டும் துறை ரீதியான பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

-கவிபிரியா

வெள்ளி, 17 ஜூலை 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon