மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 23 செப் 2020

அன்புமணியுடன் ஸ்டாலின் விவாதத்துக்குத் தயாரா?- ராமதாஸ்

அன்புமணியுடன் ஸ்டாலின் விவாதத்துக்குத் தயாரா?- ராமதாஸ்

பாமகவின் 32வது ஆண்டு விழாவையொட்டி சிறப்புச் செயற்குழு கூட்டம் இன்று ஜூலை 16ஆம் தேதி, இணையவழியில் நடைபெற்றது.

கூட்டத்தை இன்று (ஜூலை 16) காலை 11.30 மணிக்கு ராமதாஸ் துவக்கிவைத்துப் பேசினார். இக்கூட்டத்தில் பாமக தலைவர் ஜி.கே மணி, இளைஞரணித் தலைவர் அன்புமணி மற்றும் பு த அருள்மொழி, பேராசிரியர் தீரன், முன்னாள் எம்.பி தனராஜ், முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன், பொருளாளர் திலகபாமா போன்றவர்கள் கலந்துகொண்டு பேசினார்கள்.

ஜி கே மணி பேசும்போது, “32வது ஆண்டு விழாவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஐயாவைத் தொடர்புகொண்டு வாழ்த்துகள் தெரிவித்தார், இன்று துணை முதல்வர் ஒ பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார், ஐயா இந்த சமூகத்திற்காக 40 ஆண்டுகாலமாக போராடிவருகிறார். தொடர்ந்து போராடுவார். நம் போராட்டத்தின் பலன் விரைவில் கிட்டும்” என்று கூறினார்.

கூட்டத்தில், அகில இந்திய அளவில் ஒபிசிக்கு 27 சதவீதம் ஒதுக்கீடு செய்யவேண்டும், தமிழகத்தில் புதிய மதுபான கடைகள் திறக்கக்கூடாது, ஏற்கனவே உள்ள மதுபான கடைகளை படிப்படியாகக் குறைக்கவேண்டும், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள இடத்தில் தொழிற்சாலைகள் தொடங்க அனுமதி கொடுத்துள்ளதை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட என 9 தீர்மானங்கள் நிறைவேற்றினார்கள்.

இளைஞர் அணி தலைவரும் ராஜயசபா எம் பி,யுமான அன்புமனி பேசும்போது, “கொரோனா வைரஸ் தொற்று அதிகமாகப் பரவிவருகிறது. நீங்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும். தம்பிகள் படை, தங்கைகள் படை, இளைஞர்கள் படையில் உறுப்பினர்களைச் சேர்க்கவேண்டும். வாட்ஸ் அப் குரூப் அதிகமாக உருவாகிச் செயல்படுத்தவேண்டும். கொரோனா காலத்தில் நாட்களை வீணாக்காமல், வாக்காளர்கள் பட்டியலை வாங்கிக்கொண்டு, வீடு வீடாகச் சென்று யார் யாருக்கு ஓட்டு இருக்கிறது, இல்லை என்று கண்காணியுங்கள். அவர்களிடம் தொடர்ந்து பேசுங்கள், இனி இந்த வேலைகளைத் தீவிரமாகச் செய்யுங்கள்.

கொரோனா தொற்றுகளைப் பற்றி ஏராளமான அறிவுரைகளை முதல்வருக்கு கொடுத்து வருவதாகப் பேசிவருகிறார் திமுக தலைவர் ஸ்டாலின். ஆனால் அவருக்கும் அவர் கட்சிக்கும் அறிவுரை சொல்லவும் ஆலோசனைகள் சொல்லவும் வடமாநிலத்தைச் சேர்ந்த பிரசாந்த் கிஷோருக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்துவருகிறார்” என்று கிண்டலடித்தார்.

இறுதியில் ராமதாஸ் பேசும்போது, “கொரோனாவைப் பற்றி அதிகமான ஆலோசனைகள் கொடுத்தார் அன்புமணி. கொரோனாவால் உங்களைச் சந்திக்கமுடியவில்லை, இந்த நேரத்தில் கட்சிப்பணியை தீவிரமாகப் பாருங்கள். அன்புமணி சொல்வதுபோல் ஊருக்கு ஊர் ஒவ்வொரு அணியினரும் வாட்ஸ் அப் குரூப் உருவாகி தொடர்பில் இருங்கள் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளுங்கள். அன்புமணியிடம் விவாதிக்க ஒருவரை ரொம்ப நாட்களாகக் கூப்பிடுகிறேன், அவர் என்னவோ கோட்டைக்கு போகப்போகிறேன் கோட்டைக்கு போகப்போகிறேன் என்று சொல்லிவருகிறார், அவர் அங்க போகப்போவதில்லை.

மீண்டும் சொல்கிறேன், ஸ்டாலின் அன்புமணியுடன் பொது மேடையில் விவாதிக்கத் தயாரா? பொது மேடையைப் பத்திரிகையாளர்கள் ஏற்பாடுகள் செய்யவேண்டும்” என திமுக,வை சீண்டியவர், “தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் பேசுவதற்கு நேரமில்லை. அடுத்தக்கூட்டத்தில் மாவட்டத்தில் ஒருவருக்குப் பேச அனுமதி கொடுப்போம்” என்று செயற்குழு கூட்டத்தை மதியம் 1.45 மணிக்கு முடித்தார்.

-வணங்காமுடி

வியாழன், 16 ஜூலை 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon