மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 23 செப் 2020

திருக்குறள் அதிஅற்புத நூல்: பிரதமர் பாராட்டு!

திருக்குறள் அதிஅற்புத நூல்: பிரதமர் பாராட்டு!

திருக்குறள் அதிஅற்புதமான ஊக்குவிப்பு நூல் என்று பிரதமர் நரேந்திர மோடி புகழ்ந்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தான் உரையாற்றும் பல்வேறு தருணங்களில் திருக்குறளை மறக்காமல் மேற்கோள்காட்டத் தவறுவதில்லை. சமீபத்தில் லடாக் எல்லையில் ராணுவ வீரர்களுடன் உரையாற்றும்போது கூட, “மறமாணம் மாண்ட வழிச்செலவு தேற்றம் எனநான்கே ஏமம் படைக்கு “ என்ற திருக்குறளை சுட்டிக்காட்டி உற்சாகப்படுத்தி பேசினார்.

இதனிடையே பத்திரிகையாளர் மாலன், வார இதழ் ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடி, திருக்குறள் உள்ளிட்ட தமிழ் நூல்களை மேற்கொள்காட்டி பேசுவது குறித்து கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று (ஜூலை 16) பகிர்ந்துள்ள பிரதமர், “திருக்குறள் அதி அற்புதமான ஊக்குவிப்பு நூலாகும். உயரிய சிந்தனைகள், உன்னதக் குறிக்கோள்கள், ஊக்கம் தரும் கருத்துக்களை உள்ளடக்கிய பொக்கிஷமாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “தெய்வப்புலவர் திருவள்ளுவரின் எழுத்துக்கள், நம்பிக்கையும் ஒளியும் பரப்பிடும் வல்லமை வாய்ந்தவை. இந்தியா முழுதிலுமுள்ள இளைஞர்கள் பலரும் திருக்குறளைப் படித்துப் பயனுருவர் என நம்புகிறேன்” என்றும் ட்விட் செய்துள்ளார்.

மத்திய கல்வி வாரியமான சிபிஎஸ்இ 9,10 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் இருந்து பெரியார் சிந்தனைகள், திருக்குறள், சிலப்பதிகாரம் குறித்த பாடங்கள் நீக்கப்பட்டது சர்ச்சையான நிலையில், அதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டரில், “இராணுவ உடையில் திருக்குறளை சுட்டும் பிரதமர் ‘ராணுவத்தில் தமிழர் பங்கு’ என்ற சிபிஎஸ்இ பாடத்தை நீக்குகிறார்.

தமிழர் நேசிக்கும் சிலப்பதிகாரம், பெரியார் சிந்தனைகள், ம.பொ.சி-ன் எல்லைப் போராட்டம் ஆகியவற்றை மீண்டும் இணைக்க மறுத்தால் இம்மண்ணில் #NOTA வை தாண்டுவதைக் கூட பாஜக மறந்துவிடலாம்" என்று சாடியிருந்தார். இந்த நிலையில் திருக்குறளை புகழ்ந்து ட்விட் செய்துள்ளார் பிரதமர் மோடி.

எழில்

வியாழன், 16 ஜூலை 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon