மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 20 செப் 2020

தூத்துக்குடி: அனிதா நீக்கியவர்களை மீண்டும் நியமித்த திமுக தலைமை!

 தூத்துக்குடி: அனிதா நீக்கியவர்களை மீண்டும் நியமித்த திமுக தலைமை!

தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக ஒன்றியச் செயலாளர்கள் தலைமைக்கு அளித்த புகாரின் பேரில், திமுக தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் கே.என்.நேருவை விசாரணை செய்ய அனுப்பியது. கடந்த ஜூலை 3ஆம் தேதி கே.என்.நேரு கொரோனா ஊரடங்குக்கு இடையிலும் தூத்துக்குடிக்கு நேரில் வந்து அனிதாவால் நீக்கப்பட்ட ஒன்றிய செயலாளர்களிடமும் அனிதாவிடமும் ஒரே நேரத்தில் விசாரணை நடத்தினார்.

இதுகுறித்து மின்னம்பலத்தில் அனிதாவிடம் நடந்த விசாரணை: தூத்துக்குடி திமுகவில் என்ன நடக்கிறது? என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். அந்த விசாரணையில் கே.என்.நேரு மூலமாகத் தலைமை கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதுகுறித்த அறிவிப்பு ஜூலை 15 முரசொலியில் வெளியானது.

“அனிதாவால் பாதிக்கப்பட்ட அனைவரும் நேருவிடம் மாவட்டத்தின் நிலைமையை எடுத்துச் சொன்னோம். அனிதா திமுகவை தனது பாத்திரக்கடை போல நடத்துகிறார். நினைத்தால் வைத்திருக்கிறார். இல்லையென்றால் வேலையை விட்டு தூக்குவது போல பதவியை விட்டு தூக்கிவிடுகிறார். இதனால் நீண்ட நெடிய வருட திமுகவினர் வாட்டத்தில் இருப்பதாக பட்டியல் கொடுத்தோம். இதையெல்லாம் கேட்ட நேரு கொதித்துப் போய், ‘நீங்க செஞ்சது தவறுங்க... இப்படியெல்லாம் செஞ்சா கட்சிக்காரனுக்கு என்னங்க மரியாதை?' என்று அனிதாவைக் கடிந்துகொண்டார். அந்தக் கூட்டத்திலேயே அனிதாவால் நீக்கப்பட்ட ரமேஷ், மாடசாமி ஆகிய ஒன்றியச் செயலாளர்களை மீண்டும் நியமித்துவிட்டார் நேரு” என்று திமுகவினர் கூறியதை அந்த செய்தியில் குறிப்பிட்டிருந்தோம்.

இந்த நிலையில் ஜூலை 15ஆம் தேதி முரசொலியில், தூத்துக்குடி தெற்கு மாவட்டம் திருச்செந்தூர் ஒன்றியப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பி.மணிகண்டனை அப்பொறுப்பில் இருந்து விடுவித்து, ஒன்றியப் பணிகள் செவ்வனே நடைபெற ஏற்கனவே ஒன்றியச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட, ரமேஷ் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படுகிறார்” என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது,

இதேபோல தூத்துக்குடி ஒன்றியச் செயலாளராக இருந்த மாடசாமியை நீக்கியிருந்தார் அனிதா. அவருக்குப் பதிலாக இரு ஒன்றியப் பொறுப்பாளர்களை நியமித்தார். ஆனால், தலைமை மீண்டும் மாடசாமியை நியமிக்க வேண்டும் என்று உத்தரவிட்டதால், தனக்கு இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி ஏற்கனவே நியமிக்கப்பட்ட இருவரையும் தொடர்ந்து நீடிக்க வைத்து அதே நேரம் மாடசாமியையும் மீண்டும் நியமிக்கும் வகையில் ஒன்றியத்தை மூன்றாகப் பிரித்திருக்கிறார் அனிதா.

இதன் மூலம் ஜூலை 3 விசாரணையில் தூத்துக்குடி திமுகவினருக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியிருக்கிறது திமுக தலைமை. மாவட்டப் பொறுப்பாளர் அனிதா நீக்கிய நிர்வாகிகளைத் தலைமை மீண்டும் நியமித்திருப்பதன் மூலம், இது தூத்துக்குடி மாவட்டத்தில் அனிதாவுக்கு ஏற்பட்ட பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

-வேந்தன்

வியாழன், 16 ஜூலை 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon