மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 20 செப் 2020

சாத்தான்குளம்: எடப்பாடிக்கு எதிரான மனு தள்ளுபடி!

சாத்தான்குளம்:  எடப்பாடிக்கு எதிரான மனு தள்ளுபடி!

முதல்வரை விசாரிக்கக் கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சாத்தான்குளம் காவல் துறையினரால் தாக்கப்பட்டு ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரும் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மரணமடைந்தார்கள் என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக வழக்கறிஞர் ராஜராஜன் உச்ச நீதிமன்றத்தில் ஜூலை 3ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். அதில், “சாத்தான்குளம் சம்பவம் தொடர்பான விசாரணை நடக்கும் முன்பே இருவரும் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்கள் என பொய்யான தகவலை முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். குற்றவாளிகளை பாதுகாக்கும் செயலாகவே இதனை கருத வேண்டும். இது முதல்வர் வகித்து வரும் பதவிக்கும் அழகல்ல. இந்த வழக்கு முடியும் வரை உள் துறை பொறுப்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் இருக்கக் கூடாது என்றும், படுகொலைக்கும் முதல்வருக்கு தொடர்பு உள்ளதா என விசாரிக்க வேண்டும்” எனவும் ராஜராஜன் வலியுறுத்தி இருந்தார்.

இதுதொடர்பாக மின்னம்பலத்தில் ஜூலை 5 ஆம் தேதி வெளியிட்ட டிஜிட்டல் திண்ணையில், முதல்வர் பதவி - எடப்பாடிக்கு பன்னீர் வைக்கும் ‘உச்ச’ செக்! என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதில், “ஒரு வேளை இந்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டால் பிரச்சினை இல்லை. உச்ச நீதிமன்றம் மனுவை விசாரிக்க ஒப்புக்கொண்டாலே எடப்பாடி பழனிசாமி தனது முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தாக வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாவார். ஒருவேளை முதல்வர் பதவியிலிருந்து எடப்பாடி பழனிசாமி விலகிவிட்டால், அடுத்து தற்போது துணை முதல்வராக இருக்கிற ஓ.பன்னீர்தான் முதல்வர் பொறுப்பை ஏற்க வேண்டிய சூழல் ஏற்படும்.

இந்த நிலையில்தான் எடப்பாடிக்குக் கிடைத்த ஒரு தகவல் அவரை அதிர வைத்திருக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கைத் தொடுத்திருப்பதற்குப் பின்னால் ஓ.பன்னீர் தரப்பு இருக்கிறது என்பதுதான் அந்தத் தகவல். இந்த வழக்கை எப்படியாவது உச்ச நீதிமன்றத்தில் உடனடியாக விசாரணைக்கு வரவைத்து அதன் மூலம் தனது நெடுநாளைய போட்டியாளரான எடப்பாடி பழனிசாமியை முதல்வர் பதவியிலிருந்து அகற்றுவதற்கு ஓபிஎஸ் தரப்பு மாஸ்டர் பிளான் போட்டு வருகிறது. முதல்வர் பதவியை எடப்பாடி இழந்தால் அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான அதிமுகவின் வியூகமும் ஓ.பிஎஸ்ஸின் விருப்பப்படி மொத்தமாக மாறும் வாய்ப்புள்ளது.

தன்னைச் சுற்றி இவ்வளவு நடந்துகொண்டிருப்பதை அறிந்த எடப்பாடி அந்த மனு என்னாகும், விசாரணைக்கு ஏற்கப்படுமா, தொடக்கத்திலேயே விசாரணைக்கு ஏற்கப்படாமல் தள்ளுபடி செய்யப்பட சட்ட ரீதியான வழி என்ன என்பதைப் பதற்றத்தோடு ஆராய்ந்துகொண்டிருக்கிறார். இது தொடர்பாக தமிழக அட்வகேட் ஜெனரல் உள்ளிட்ட மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனையும் நடந்து கொண்டிருக்கிறது இபிஎஸ் தரப்பில்” என்று தெரிவித்திருந்தோம்.

இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டாலே தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்கள் நிகழலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன்பு இன்று (ஜூலை 16) விசாரணைக்கு வந்தது. மாநில அரசின் சார்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன், வழக்கறிஞர் வினோத் கண்ணா ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

இந்த வழக்கு என்னவென்று கேட்ட சில நிமிடங்களிலேயே இதுபற்றி மேற்கொண்டு விவரங்கள் எதுவும் கேட்காமலேயே உடனடியாக மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டது உச்ச நீதிமன்றம்.

தள்ளுபடி செய்த தகவலறிந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

எழில்

வியாழன், 16 ஜூலை 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon