மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 23 செப் 2020

தகுதி நீக்கமா? நீதிமன்றம் சென்ற பைலட்

தகுதி நீக்கமா? நீதிமன்றம் சென்ற பைலட்

ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவராகவும் துணை முதல்வராகவும் இருந்த சச்சின் பைலட் ஜூலை 14 ஆம் தேதி காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் இருமுறை நடந்தபோதும் பைலட்டும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் புறக்கணித்ததால் சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ஏன் தகுதி நீக்கம் செய்யக் கூடாது என்று ராஜஸ்தான் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அதில் கட்சி விரோத நடவடிக்கைகள், கொறடா உத்தரவு மீறல் குறித்து வெள்ளிக்கிழமைக்குள் பதிலளிக்க அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சச்சின் பைலட்டும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் தங்களுக்கு சபாநாயகர் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கிறார்கள்.

ஏற்கனவே சச்சின் பைலட்டுக்குப் பின்னால் பாஜக இருக்கிறது என்று காங்கிரஸார் கூறி வரும் நிலையில் இந்த வழக்கில் பைலட்டுக்காக முகுல் ரோஹத்கி ஆஜராகிறார். 2014 ஆம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் அட்டர்னி ஜெனரலாக நியமிக்கப்பட்டவர் முகுல் ரோஹத்கி என்பது குறிப்பிடத் தக்கது. இந்த வழக்கில் காங்கிரஸ் சார்பில் அதன் கூர்மையான சட்ட வல்லுநர்களில் ஒருவரான அபிஷேக் மனு சிங்வி ஆஜராவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சபாநாயகரின் நோட்டீஸை பெறவில்லை என்று எம்.எல்.ஏ.க்கள் சொல்லிவிடக் கூடாது என்பதற்காக எஸ்.எம்.எஸ், வாட்ஸ்அப், மின்னஞ்சல் மற்றும் தபால் வழி என அனைத்து வடிவங்களிலும் நோட்டீசை அனுப்பியிருக்கிறார்கள். பைலட் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டால், பெரும்பான்மைக்கான இலக்கு எண்ணிக்கை குறையும். இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் பட்சத்தில் அசோக் கெலாட் வெற்றி பெறுவதை எளிதாக்குகிறது. அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படாமல் காங்கிரஸ் உறுப்பினர்களாக வாக்களிக்க அனுமதிக்கப்பட்டால் கெலாட்டின் அரசு தோற்கடிக்கப்படும் வாய்ப்பும் உள்ளது.

இந்நிலையில்தான் பைலட் சார்பில் தகுதி நீக்கத்தை எதிர்த்து வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கு விரைவில் உயர் நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 16) பிற்பகல் 3.30க்கு விசாரணைக்கு வந்த நிலையில், ‘நாளை புதிய மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நாளை இந்த வழக்கை விசாரிக்க புதிய பெஞ்ச் அமைக்கப்படும் என்றும் வழக்கை நாளைக்கு ஒத்தி வைத்தது நீதிமன்றம்.

-வேந்தன்

வியாழன், 16 ஜூலை 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon