மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 20 செப் 2020

வீடுகளில் கறுப்புக் கொடி: திமுக போராட்டம்!

வீடுகளில் கறுப்புக் கொடி: திமுக போராட்டம்!

மின் கட்டண விவகாரம் தொடர்பாக திமுக ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது.

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அதன் தலைவர் ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி மூலம் இன்று (ஜூலை 16) நடைபெற்றது. அதில் மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். 2 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இக்கூட்டத்தில் மின் கட்டணம், சாத்தான்குளம் படுகொலை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில் 10 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

கொரோனா பரவலை தடுக்க உருப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும், ஒபிசி பிரிவினருக்கு மருத்துவ படிப்பில் 50% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், சாத்தான்குளம் சம்பவத்தில் விரைவில் நீதி கிடைக்க செய்ய வேண்டும்,விவசாயிகளுக்கான இலவச மின்சார திட்டத்தை ரத்து செய்யும் மின்சார திருத்த சட்டம் 2020ஐ திரும்ப பெற வேண்டும், கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியிடம் தாரை வார்த்துவிடக்கூடாது என வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதுபோலவே, பல்கலைக்கழகங்கள் வாயிலாக நடத்தப்படும் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை ரத்து செய்திட வேண்டும் என்றும், திமுக வென்ற உள்ளாட்சி அமைப்புகளை புறக்கணிக்கும் அரசுக்கு கண்டனம் தெரிவித்தும், திருப்போரூர் திமுக எம்.எல்.ஏ இதயவர்மன் மீதான பொய் வழக்கிற்கு கண்டனம் தெரிவித்து, வழக்கை சிபிசிஐடி க்கு மாற்ற வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும், “மின் கட்டண ரீடிங் எடுத்த குளறுபடிகளை கண்டித்தும், கட்டணத்தை எளிய மாத தவணைகளில் கட்ட அனுமதிக்கக்கோரியும் வரும் 21ஆம் தேதி வீடுகளில் கறுப்பு கொடி ஏற்றி முழக்கமிட்டு போராட்டம் நடத்தப்படும்” என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

எழில்

வியாழன், 16 ஜூலை 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon