மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 20 செப் 2020

ராமதாஸை வாழ்த்திய எடப்பாடி: காரணம் இதுதான்!

ராமதாஸை வாழ்த்திய எடப்பாடி: காரணம் இதுதான்!

பாமக ஆண்டு விழாவை முன்னிட்டு ராமதாஸுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை மெரினா கடற்கரையின் சீரணி அரங்கத்தில் 1989ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி தொடங்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி, இன்று 31 ஆண்டுகளை நிறைவு செய்து 32ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

பாமக ஆண்டு விழாவை முன்னிட்டு ராமதாஸை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ராமதாஸ் தனது ட்விட்டரில், “முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை என்னை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். பாட்டாளி மக்கள் கட்சியின் 32ஆவது ஆண்டு விழா நாளை கொண்டாடப்படுவதையொட்டி, அதிமுக சார்பில் தமது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். அதற்காக நான் நன்றி தெரிவித்துக் கொண்டேன்” என்று பதிவிட்டுள்ளார்.

2019 மக்களவைத் தேர்தலில் இருந்து அதிமுக கூட்டணியில் பாமக இருந்து வருகிறது. இடையில் 2021 சட்டமன்றத் தேர்தலில் பாமக ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று ராமதாஸ் உள்ளிட்டோர் பேசியது அதிமுக-பாமக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. மேலும், மதுக் கடைகள் திறப்பு உள்ளிட்ட விவகாரங்களில் அரசை விமர்சித்து ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருந்தார். எனினும், அதிமுக தரப்பிலிருந்து பெரிய அளவில் விமர்சனக் குரல்கள் எழவில்லை. இந்த நிலையில் ராமதாஸுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளது கூட்டணி வலுவாக இருப்பதையே குறிப்பதாக கூறுகிறார்கள் அதிமுக வட்டாரங்களில்.

இதனிடையே பாமக நிறுவனர் ராமதாஸ் தொண்டர்களுக்கு எழுதியுள்ள மடலில், “இது ஒரு மகிழ்ச்சியான தருணம்.தமிழக அரசியலில் நாம் படைத்த சாதனைகள் ஏராளம். வருங்காலத்தில் படைக்கப்போகும் சாதனைகள் ஏராளம். நாம் அடையப் போகும் இலக்குகள் இமயமலை அளவுக்கு உயரம் கொண்டது என்றாலும் அதற்கு அடித்தளம் பாட்டாளியான நீ தான். புதிய சாதனை படைப்பதற்கான பயணத்தை இன்று தொடங்குவோம்” என்று தெரிவித்துள்ளார்.

எழில்

வியாழன், 16 ஜூலை 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon