sதிமுகவில் துப்பாக்கி கலாச்சாரம்: அமைச்சர்

politics

திமுக சட்டமன்ற உறுப்பினர் இதயவர்மன் கைது செய்யப்பட்டது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் இதயவர்மன் குடும்பத்திற்கும், அதே ஊரை சேர்ந்த இமயம் குமாருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்த நிலையில் கோயில் நிலத்தை ஆக்கிரமித்து இமயம் குமார் தரப்பு சாலை அமைக்க முயற்சித்ததற்கு இதயவர்மன் தந்தை லட்சுமிபதி மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுகுறித்த பேச்சுவார்த்தையின்போது ஏற்பட்ட மோதலில் லட்சுமிபதியை, இமயம் குமார் தரப்பு அரிவாளால் வெட்ட, பதிலுக்கு அவர் துப்பாக்கியால் சுட்டிருக்கிறார். துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக எம்எல்ஏ இதயவர்மனை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னையில் இன்று (ஜூலை 12) மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் டெலி கவுன்சிலிங் மையத்தை ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், “திமுக என்றாலே வன்முறை கலாச்சாரமும், ஊழலும்தான் அடையாளம். நில அபகரிப்பு முதல் கட்டப்பஞ்சாயத்து வரை திமுக ஆட்சி காலத்தில்தான் நடைபெற்றது. அதிமுக ஆட்சியில் நில அபகரிப்புக்கென தனிப் பிரிவை உருவாக்கி திமுகவினர் அபகரித்த நிலங்களை மீட்டுக்கொடுத்தோம்” என்று குறிப்பிட்டார்.

திமுகவில் துப்பாக்கிக் கலாச்சாரம் தலை தூக்கியுள்ளதாக குற்றம்சாட்டிய ஜெயக்குமார், “ஜனநாயக நாட்டில் ஒரு பிரச்சினை என்றால் சட்டப்படி மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளிக்கலாம். தீர்வு அளிப்பதற்காக நீதிமன்றங்கள் உள்ளன. ஆனால், சட்டமன்ற உறுப்பினர் என்பதால் லைசென்ஸ் இல்லாத துப்பாக்கியை வைத்து சுடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. சட்டம் தனது கடமையை செய்துள்ளது” என்றும் கூறினார்.

மேலும், “ மதுரையில் சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தி, ஒருவரின் வீட்டிற்குச் சென்று செருப்பைக் காட்டி அவதூறாக மிரட்டல் விடுத்தார். திமுக ஆட்சியில் இல்லாதபோதே இப்படி என்றால், தப்பித் தவறி ஆட்சிக்கு வந்தால் என்ன நிலைமை இருக்கும். எம்.எல்.ஏவின் தந்தை துப்பாக்கியால் சுட்டது திமுக துப்பாக்கிக் கலாச்சாரத்திற்கு சென்றுவிட்டதையே காட்டுகிறது” என்று விமர்சித்தார்.

**எழில்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *