மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 28 அக் 2020

அனிதா மீது விசாரணை: தூத்துக்குடி திமுகவில் என்ன நடக்கிறது?

அனிதா மீது விசாரணை: தூத்துக்குடி திமுகவில் என்ன நடக்கிறது?

கொரோனா ஊரடங்கு காரணமாக இந்தியாவில் அரசியல் கட்சிகள் எதுவும் கட்சி ரீதியான நேரடிக் கூட்டங்களை சமீபகாலமாக நடத்துவதில்லை. அப்படி நடத்தியே ஆக வேண்டுமென்றால் காணொலி ரீதியாகவே நடத்துகிறார்கள். ஆனால் இவ்வளவு கட்டுப்பாட்டிலும் திமுகவின் தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் கே.என். நேரு, ஜூலை 3 ஆம் தேதி தூத்துக்குடி வந்து, தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான புகார்கள் பற்றி மாவட்ட அலுவலகத்தில் சுமார் 5 மணி நேரம் விசாரணை நடத்தியிருக்கிறார். இதனால் தென் மாவட்ட திமுக வட்டாரங்கள் பரபரப்பாகியிருக்கின்றன.

தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் இருக்கும் ஒன்றிய செயலாளர்கள் பலரும் அலுவலகத்தில் ஆஜராக மாவட்டப் பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணனும் அமர்ந்திருக்க தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் கே.என். நேரு பிற்பகல் 1.45 மணிக்கு விசாரணையைத் தொடங்கினார். இது மாலை ஏழு மணி வரை நீடித்தது.

எதற்காக, இந்த விசாரணை? தூத்துக்குடி திமுக வட்டாரத்தில் விசாரித்தோம்.

ஒன்றியங்களின் ஓலம்!

“அனிதா தனக்கு பிடிக்காத ஒன்றிய செயலாளர்களை பதவியை விட்டு தூக்குகிறார். அல்லது ஒன்றியங்களைப் பிரித்து டம்மியாக்குகிறார். தனது ஆதரவாளர்களை நியமிக்கிறார். கருங்குளம் ஒன்றியத்தை இரண்டாகப் பிரித்து சுரேஷ் காந்தி என்பவரை நியமித்தார். சுரேஷ் காந்தி மிக அண்மையில்தான் கட்சிக்கு வந்தார். உறுப்பினர் கார்டு வாங்கியிருக்கிறாரா என்றே தெரியவில்லை. ஆனால் அவர் ஒன்றிய செயலாளர். உள்ளாட்சித் தேர்தலில் அனிதாவுக்கு அவர் பொருளாதார ரீதியாக உதவினார் என்பதற்காக இந்த பதில் உதவியை அனிதா செய்திருக்கிறார். எசக்கி பாண்டியன் என்பவரும் புதிதாக கட்சிக்கு வந்தவர். அவருக்கு கருங்குளம் ஒன்றியம் தெற்கு பதவியைக் கொடுத்துள்ளார். 30 வருடங்களுக்கும் மேலாக திமுகவை ரத்தமும் சதையுமாக நேசிப்பவர்களை எல்லாம் நீக்கி வருகிறார். ஆனால் நேற்று வந்தவர்களுக்கும், கட்சிக்கு எதிராக செயல்பட்டவர்களுக்கும் பதவி தருகிறார்.

ஓட்டப்பிடாரத்தை மூன்று ஒன்றியமாக பிரித்திருக்கிறார். இதில் மூன்றையும் எஸ்.சி சமுதாயத்துக்கே கொடுத்திருக்கிறார் இதில் ஒரு ஒன்றியத்துக்கு இளையராஜா என்பவரை பொறுப்பாளராக நியமித்துள்ளார் அனிதா. இந்த இளையராஜா போன சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளருக்காக வேலை செய்தவர். இதிலும் பணம் விளையாடியிருக்கிறது என்கிறார்கள். ஒரேயடியாக தனது ஆதரவாளர்களை நிர்வாகிகளாக மாற்றி, அதன் பின் வேறு ஏதோ செய்வதற்குத்தான் இப்படி அனிதா நடக்கிறாரோ என்று சந்தேகமாக இருக்கிறது.

இதுகுறித்து அறிவாலயத்துக்குத் தொடர்ச்சியாக புகார் மனுக்களைக் கொடுத்தோம். எங்கள் எம்.பி. கனிமொழி அக்காவிடமும் மனு கொடுத்தோம். இந்நிலையில்தான் ஜூலை 3 ஆம் தேதி மாவட்ட கட்சி அலுவலகத்தில் விசாரணை நடந்தது. ஆனால் அந்தத் தகவலைக் கூட மாவட்டம் சார்பாக எங்களுக்கு சொல்லவில்லை. தகவல் கிடைத்து நாங்களாகவே போனோம்.

திமுக என்ன அனிதாவின் பாத்திரக் கடையா?

அனிதாவால் பாதிக்கப்பட்ட அனைவரும் நேருவிடம் மாவட்டத்தின் நிலைமையை எடுத்துச் சொன்னோம். அனிதா திமுகவை தனது பாத்திரக் கடை போல நடத்துகிறார். நினைத்தால் வைத்திருக்கிறார். இல்லையென்றால் வேலையை விட்டு தூக்குவது போல பதவியை விட்டு தூக்கிவிடுகிறார். இதனால் நீண்ட நெடிய வருட திமுகவினர் வாட்டத்தில் இருப்பதாக பட்டியல் கொடுத்தோம்.

இதையெல்லாம் கேட்ட நேரு கொதித்துப் போய், ‘நீங்க செஞ்சது தவறுங்க... இப்படியெல்லாம் செஞ்சா கட்சிக்காரனுக்கு என்னங்க மரியாதை?” என்று அனிதாவைக் கடிந்துகொண்டார், அந்தக் கூட்டத்திலேயே அனிதாவால் நீக்கப்பட்ட ரமேஷ், மாடசாமி ஆகிய நீக்கப்பட்ட ஒன்றிய செயலாளர்களை மீண்டும் நியமித்துவிட்டார் நேரு. தன் மீதான புகார்களுக்கு அனிதா கூட்டத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

ஒன்றிய செயலாளர்கள் விவகாரத்தில் மட்டுமல்ல, வரும் சட்டமன்றத் தேர்தலில் மாவட்டத்தில் எந்தெந்த தொகுதிகளில் திமுக போட்டியிடும், எந்தெந்த தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் என்பதைக் கூட தனது சுய விருப்பத்தின்படியே முடிவெடுகிறார் அனிதா. குறிப்பாக ஸ்ரீவைகுண்டம் தொகுதியை காங்கிரசின் ஊர்வசி செல்வராஜ் மகனுக்கு கொடுக்க இப்போதே அனிதா பேச்சுவார்த்தை நடத்திவருகிறார். ஊர்வசி செல்வராஜ் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர். அந்த அடிப்படையில் கடந்த மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியை அவரது மகன் அமிர்தராஜுக்காக கேட்டார்கள். ஆனால் தூத்துக்குடி தொகுதி கனிமொழிக்கு என தேர்தலுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டுவிட்டதால் வாய்ப்பில்லாமல் போனது. அதனால், வருகிற சட்டமன்றத் தேர்தலில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் நிற்க இப்போதே தீவிரமாகிவிட்டனர் காங்கிரசார். ஆனால் திமுகவினர் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் திமுகவே நிற்கவேண்டும் என்று விடாப் பிடியாக தலைமையிடம் வற்புறுத்தி வருகின்றனர். இதுபற்றியும் விசாரணை நடக்கும் என்று தெரிகிறது” என்று முடித்தனர்.

மண்டைதான் குழம்பிப் போகும்

மின்னம்பலம் சார்பில் தூத்துக்குடி தெற்கு மாவட்டப் பொறுப்பாளரான அனிதா ராதாகிருஷ்ணனிடமே இந்த புகார்கள் குறித்துக் கேட்டோம்.

“பத்திரிகைகள்ல வேற செய்தி இல்லைன்னா இதுபோல ஏதாவது செய்திகளை போட்டுக்கிட்டிருப்பீங்க. நேரு அண்ணன் தூத்துக்குடிக்கு வந்தாங்க. உண்மைதான். உட்கட்சி விவகாரங்கள்ல ஊடகங்களுக்கு விளக்கம் சொல்ல வேண்டியதில்லை. பரபரப்பு வேணும்குறதுக்காக ஏதாவது சொல்லிக்கிட்டே இருப்பாஙக. அதுக்கு பதில் சொல்லிக்கிட்டிருந்தோம்னா நம்ம மண்டைதான் குழம்பிப் போகும்” என்றவரிடம்,

“கொரோனா காலத்திலும் முதன்மைச் செயலாளர் நேரு தூத்துக்குடிக்கு வந்து உங்கள் அலுவலகத்தில் விசாரணை நடத்தியதால்தானே இந்தக் கேள்வியே எழுகிறது. ஒன்றியச் செயலாளர்கள் விஷயத்தில் உங்கள் மீது புகார்கள் சொல்கிறார்களே?” என்று மீண்டும் கேட்டோம்.

“உட்கட்சிக்குள்ள ஆயிரம் இருக்கும், வருவாங்க பேசுவாங்க. அதெல்லாம் பத்திரிகைகளுக்கு சொல்லிக்கிட்டிருக்க ஒண்ணுமில்ல. ஒன்றிய செயலாளர்கள் மாற்றம் எல்லாம் தலைமையின் ஒப்புதலோடுதான் செய்யுறோம்” என்று பதிலளித்தார் தூத்துக்குடி தெற்கு திமுக மாவட்டச் செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன்.

அனிதாவின் ஆதரவாளர்களோ, “மாநில சுயாட்சி பேசும் கட்சியில் மாவட்ட சுயாட்சி கூடாதா? கட்சி நன்மைக்காக மாவட்டப் பொறுப்பாளர் சில முடிவுகளை எடுத்தார். அதை பலர் பலவிதமாக மாற்றி சமுதாய பேதத்தோடு பேசி வருகிறார்கள். வேறு ஒன்றுமில்லை” என்கிறார்கள்.

-ஆரா

ஞாயிறு, 5 ஜூலை 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon