மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 28 அக் 2020

டிஜிட்டல் திண்ணை: முதல்வர் பதவி - எடப்பாடிக்கு பன்னீர் வைக்கும் ‘உச்ச’ செக்!

டிஜிட்டல் திண்ணை: முதல்வர் பதவி - எடப்பாடிக்கு பன்னீர் வைக்கும் ‘உச்ச’ செக்!

மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும், வாட்ஸ்அப் ஆன்லைனுக்கு வந்தது,

“சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவர் தாக்கப்பட்டு, பின் அவர்கள் மருத்துவமனையில் மரணம் அடைந்தது நம் ஊரடங்கு டீக்கடைகள் முதல் ஐநா வரை பேசுபொருளாகிவிட்டது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அரசியல் மற்றும் சட்ட ரீதியாகக் கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

முதல்வரின் கட்டுப்பாட்டில் காவல் துறையா, காவல் துறையின் கட்டுப்பாட்டில் முதல்வரா என்று எதிர்க்கட்சியான திமுக கேள்வி கேட்டது. இன்னும் சில எதிர்க்கட்சிகள் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் எழுப்பின. இதெல்லாம் அரசியல் ரீதியான எதிர்வினைகள். ஆனால், சட்ட ரீதியாகவே எடப்பாடியின் முதல்வர் நாற்காலியை ஆட்டம் காண வைப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளன.

சாத்தான்குளம் கொடூரம் தொடர்பாகக் கருத்து தெரிவித்த முதல்வர்... 'ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவருக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மரணமடைந்தார்கள்' என்று கூறியிருந்தார். தூத்துக்குடி எஸ்பியும் இதே காரணத்தையே கூறியிருந்த நிலையில், போலீஸைக் காப்பாற்ற முதல்வர் உதவுகிறார் என்று புகார்கள் எழுந்தன. இதன் நீட்சியாக வழக்கறிஞர் ராஜராஜன் உச்ச நீதிமன்றத்தில் ஜூலை 3ஆம் தேதி தாக்கல் செய்த மனுவில், ’சாத்தான்குளம் சம்பவம் தொடர்பான விசாரணை நடக்கும் முன்பே இருவரும் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்கள் எனப் பொய்யான தகவலை முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். குற்றவாளிகளைப் பாதுகாக்கும் செயலாகவே இதைக் கருத வேண்டும். இது முதல்வர் வகித்து வரும் பதவிக்கும் அழகல்ல. ஆகவே, படுகொலைக்கும் முதல்வருக்குத் தொடர்பு உள்ளதா என விசாரிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார்.

சாத்தான்குளம் வழக்கை விசாரிக்கும் சிபிசிஐடி முதல்வர் துறையின் கீழ் வருகிறது. எனவே அந்த இலாகாவை முதல்வர் பழனிசாமி வைத்திருந்தால் விசாரணை நேர்மையாக நடைபெறாது. அதனால், இந்த வழக்கு முடியும் வரை உள் துறை பொறுப்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் இருக்கக் கூடாது. ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கு விசாரணை திசை மாறாமல் இருக்க, உயர் நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் விசாரணை நடைபெற வேண்டும். இதுகுறித்த தகுந்த உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என்பதுதான் அந்த மனுவின் கோரிக்கை.

அரசியல் ரீதியாக தன் மீது வீசப்படும் விமர்சனங்களை எல்லாம் எடப்பாடி பழனிசாமி சமாளித்து வருகிறார். ஆனால் இது சட்ட ரீதியான முற்றுகை. இப்போது சட்ட ரீதியாக இரு வாய்ப்புகள் உள்ளன. ஒரு வேளை இந்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டால் பிரச்சினை இல்லை. ஆனால், மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுவிட்டால் தமிழக அரசிலும், அதிமுகவிலும் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. சாத்தான்குளம் கொடூர வழக்கில் முதல்வரை விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்று மனுவை விசாரிக்க ஒப்புக்கொண்டாலே எடப்பாடி பழனிசாமி தனது முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தாக வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாவார். வேறு ஏதேனும் அரசியல் வழக்குகள் என்றால்கூட பரவாயில்லை, இது கொலை வழக்கு... சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்கு உதவுகிறார் என்ற வழக்கு. எனவே எடப்பாடிக்கு எல்லா வகையிலும் நெருக்கடி அதிகமாகும். ஒருவேளை முதல்வர் பதவியிலிருந்து எடப்பாடி பழனிசாமி விலகிவிட்டால், அடுத்து தற்போது துணை முதல்வராக இருக்கிற ஓ.பன்னீர்தான் முதல்வர் பொறுப்பை ஏற்க வேண்டிய சூழல் ஏற்படும்.

இந்த நிலையில்தான் எடப்பாடிக்குக் கிடைத்த ஒரு தகவல் அவரை அதிர வைத்திருக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கைத் தொடுத்திருப்பதற்குப் பின்னால் ஓ.பன்னீர் தரப்பு இருக்கிறது என்பதுதான் அந்தத் தகவல். இந்த வழக்கை எப்படியாவது உச்ச நீதிமன்றத்தில் உடனடியாக விசாரணைக்கு வரவைத்து அதன் மூலம் தனது நெடுநாளைய போட்டியாளரான எடப்பாடி பழனிசாமியை முதல்வர் பதவியிலிருந்து அகற்றுவதற்கு ஓபிஎஸ் தரப்பு மாஸ்டர் பிளான் போட்டு வருகிறது. இதற்கான சட்ட ரீதியான ஏற்பாடுகளை தனது டெல்லி தொடர்புகள் மூலம் கச்சிதமாக நடத்தி வருகிறது ஓபிஎஸ் தரப்பு. சமீப மாதங்களில் ஓபிஎஸ்ஸுக்கு எந்த முக்கியத்துவமும் அளிக்கப்படாமல் முதல்வர் என்ற கெத்தில் கட்சியையும் கைப்பற்ற பல முயற்சிகள் எடுத்து வருகிறார் எடப்பாடி. இதில் அப்செட் ஆன ஓபிஎஸ் அமைதியாக இருந்து வருகிறார். அவரது அரசியல் அனுபவத்தின் மூலம் இந்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்தி எடப்பாடியை முதல்வர் பதவியிலிருந்து அகற்ற நினைக்கிறார் என்கிறார்கள். முதல்வர் பதவியை எடப்பாடி இழந்தால் அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான அதிமுகவின் வியூகமும் ஓ.பிஎஸ்ஸின் விருப்பப்படி மொத்தமாக மாறும் வாய்ப்புள்ளது.

தன்னைச் சுற்றி இவ்வளவு நடந்துகொண்டிருப்பதை அறிந்த எடப்பாடி அந்த மனு என்னாகும், விசாரணைக்கு ஏற்கப்படுமா, தொடக்கத்திலேயே விசாரணைக்கு ஏற்கப்படாமல் தள்ளுபடி செய்யப்பட சட்ட ரீதியான வழி என்ன என்பதைப் பதற்றத்தோடு ஆராய்ந்துகொண்டிருக்கிறார். இது தொடர்பாக தமிழக அட்வகேட் ஜெனரல் உள்ளிட்ட மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனையும் நடந்து கொண்டிருக்கிறது இபிஎஸ் தரப்பில்” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்துவிட்டு ஆஃப்லைன் போனது வாட்ஸ்அப்.

ஞாயிறு, 5 ஜூலை 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon