பிரண்ட்ஸ் ஆப் போலீஸுக்கு எதிராக எம்.எல்.ஏ போர்க்கொடி!

politics

பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பைக் கலைக்க வேண்டுமென தமிமுன் அன்சாரி வலியுறுத்தியுள்ளார்.

சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் என தந்தையும், மகன் இருவரும் காவல் துறையால் துன்புறுத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், தினமும் வெளிவரும் அதிர்ச்சிகர தகவல்கள் புதிய திருப்பங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.

இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட சிபிசிஐடி போலீஸ், ஆய்வாளர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாத்தான்குளம் படுகொலை சம்பவத்தில் ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் என்ற அமைப்பினரும் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

இதுதொடர்பாக மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி இன்று (ஜூலை 2) வெளியிட்ட அறிக்கையில், “ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸில் குறிப்பிட்ட சில அமைப்புகளை சேர்ந்தவர்கள் திட்டமிட்டு சேர்க்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. இச்சந்தேகங்களை போக்கும் கடமை தமிழக அரசுக்கு இருக்கிறது. ப்ரண்ட்ஸ் ஆஃப் போலிஸ் என்ற அமைப்பு எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது? யார், யாரை கொண்டு உருவாக்கப்படுகிறது? அதன் நோக்கம் என்ன? அதன் எல்லைகள் என்ன? என்பது பற்றிய விபரங்கள் நாட்டு மக்களுக்கு தெரியவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

சிலரின் தவறுகள் காரணமாக தற்போது தமிழக காவல் துறையின் மீது மக்களுக்கு கடும் அதிருப்தி உருவாகியிருக்கும் நிலையில், மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அக்கறை பரவலாக காணப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ள அவர்,

“காவல் துறையின் மாண்புகளை குலைக்கும் காவலர்கள் சட்டத்தின் வழியில் தண்டிக்கப்பட வேண்டும் என்ற குரல் வலிமைப்பட்டிருக்கிறது. இச்சூழலில் தற்போது பரபரப்பாக குற்றம் சாட்டப்படும் ப்ரண்ட்ஸ் ஆஃப் போலிஸ் என்பது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருப்பது மிகுந்த கவலையை தருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இதுகுறித்து தமிழக அரசு தெளிவான விளக்கத்தை அளிப்பதோடு, அந்த அமைப்பை உடனடியாக கலைக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இது குறித்து அனைத்து ஜனநாயக சக்திகளும் இணைந்து குரல் எழுப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

**எழில்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *