மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 25 அக் 2020

போலீஸைத் தாக்கியது நானா? வாகை சந்திரசேகர் புகார்!

போலீஸைத் தாக்கியது நானா? வாகை சந்திரசேகர் புகார்!

தனக்கு எதிராக அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கமிஷனர் அலுவலகத்தில் வாகை சந்திரசேகர் புகார் அளித்துள்ளார்.

சேலம் சுங்கச்சாவடி பகுதியில் இ-பாஸ் கேட்ட சப்-இன்ஸ்பெக்டரை முன்னாள் எம்.பி அர்ஜுனன் கடுமையான வார்த்தைகளால் திட்டி, காலால் எட்டி உதைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. எனினும், இந்த வீடியோவைப் பகிர்ந்த சிலர் திமுக வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் வாகை சந்திரசேகர்தான் சப்-இன்ஸ்பெக்டரைத் தாக்கியதாக விமர்சித்தனர்.

இதனால் அதிர்ச்சியைடைந்த வாகை சந்திரசேகர், திமுக மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியனுடன் சென்னை கமிஷனர் அலுவலகத்துக்குச் சென்று, தனக்கு எதிராக அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் அளித்துள்ளார்.

அதில், “போலீஸ்காரரை நான் தாக்கியதாக முகநூல், ட்விட்டர் உள்ளிட்ட வலைதளங்களில் பரவிய தகவல் எனக்கு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, இதனால் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளானேன். இந்தப் பதிவுகள் திமுகவுக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையிலும், பொதுமக்களிடையே பாதுகாப்பின்மை உணர்வை ஏற்படுத்துவதோடு, பொது அமைதிக்கு தீங்கு விளைவிக்கும் வகையிலும் உள்ளன” என்று குற்றம்சாட்டி அந்த பதிவுகளின் நகல்களையும் இணைத்துள்ளார்.

மேலும், “இவை தனிப்பட்ட ரீதியிலான பதிவுகள் இல்லை. இவர்களின் பெரும்பாலான பதிவுகள் திமுக தலைவர் மற்றும் திமுகவின் மற்ற தலைவர்கள் மீது அவதூறு பரப்பி பொதுமக்களைத் தவறாக வழிநடத்தக்கூடிய வகையில் சமூக வலைதளங்களில் பரப்பப்படுகின்றன” என்று தெரிவித்தவர்,

“அந்த வீடியோவைப் பார்த்தாலே அதில் இருக்கும் நபர் நான் அல்ல என்பது தெரியவரும். அடிப்படை உண்மைகளைச் சரிபார்க்காமலேயே சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியுள்ளனர். இது தகவல் தொழில்நுட்பச் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். மக்கள் பிரதிநிதி மீது அவதூறு பரப்பும் வகையில் செயல்பட்ட மூன்று பேர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

எழில்

செவ்வாய், 30 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon