மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 25 அக் 2020

அருணுக்குக் கட்டாயக் காத்திருப்பு: தூத்துக்குடிக்கு புதிய எஸ்பி

அருணுக்குக் கட்டாயக் காத்திருப்பு: தூத்துக்குடிக்கு புதிய எஸ்பி

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு துன்புறுத்துதலால் மரணம் அடைந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

இந்த விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் இன்று (ஜூன் 30) இச்சம்பவத்துக்குப் பொறுப்பான தூத்துக்குடி எஸ்பி. அருண் பாலகோபாலன் கட்டாயக் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருக்கிறார். தூத்துக்குடி எஸ்பியாக தற்போது விழுப்புரம் எஸ்.பி.யாக பணியாற்றும் ஜெயக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் சாராயக் கடத்தல், மணல் கடத்தல், கள்ளச்சாராயத்தை பெருமளவு ஒடுக்கியவர் ஜெயக்குமார். மனிதாபிமான நடவடிக்கைகளுக்காவும் மக்கள் சேவைக்காகவும் பெயர் பெற்றவர் ஜெயக்குமார் ஐ.பி.எஸ். இந்த காலகட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்துக்கு தேவையான வகையில் ஜெயக்குமார் எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டிருக்கிறார் என்கிறார்கள் தூத்துக்குடி பத்திரிகையாளர்களும், சமூக ஆர்வலர்களும்.

தற்போது பொருளாதார குற்றப் பிரிவு ஐஜியாக இருக்கும் முருகன், தெற்கு மண்டல மதுரை ஐஜியாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

மதுரை உயர் நீதிமன்றத்தில் சாத்தான்குளம் ஏ.எஸ்.பி, டி.எஸ்.பி. காவலர் ஆகியோர் நீதிமன்ற அவதிப்பு காரணமாக ஆஜராகியிருக்கிற சூழலில் தமிழக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

-வேந்தன்

செவ்வாய், 30 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon