மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 25 செப் 2020

கொரோனா பாதிப்பு: சீனாவை முந்திய தமிழகம்!

கொரோனா பாதிப்பு: சீனாவை முந்திய தமிழகம்!

சீனாவை விட தமிழகத்தில் அதிகம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் வெகு வேகமாக அதிகரித்து வரும் நிலையில், இன்றுடன் ஊரடங்கு முடிவுக்கு வருகிறது. இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா முழுவதும் 18,522 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 5.6 லட்சமாக அதிகரித்தது. நேற்று மட்டும் 418 பேர் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 16, 893 ஆக உயர்ந்தது.

எனினும், கொரோனாவிலிருந்து குணமடைந்து மீள்வோர் விகிதம் 58.67 சதவிகிதமாக இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2,15,125 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 13,099 பேர் உள்பட 3,34,821 பேர் கொரோனாவிலிருந்து குணமாகியுள்ளனர். இதுவரை 86,08,654 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

நாட்டிலேயே அதிகபட்சமாக மஹாராஷ்டிரா மாநிலத்தில் 5,257 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,69,883 மாறியுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,610 ஆக இருப்பது மேலும் அச்சத்தைக் கூட்டியுள்ளது. ஜூலை மாதத்தில் மஹாராஷ்டிராவில் கொரோனா உச்சமடையும் என்று எதிர்பார்க்கப்படுவதால், வரும் காலங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 3,949 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதால், மொத்த பாதிப்பு 86, 224 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 62 பேர் உட்பட மொத்தம் 1,141 பேர் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். சீனா முழுவதும் 83,531 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ள நிலையில், அதைவிட தமிழகத்தில் அதிகம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

எழில்

செவ்வாய், 30 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon