ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? மருத்துவக் குழு தகவல்!

politics

முழு ஊரடங்கு தொடர வேண்டிய அவசியமில்லை என மருத்துவ குழுவினர் பரிந்துரை செய்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு பல மடங்கு வேகமாகப் பரவி வரும் நிலையில், நாளையுடன் 5ஆம் கட்ட ஊரடங்கு முடிவுக்கு வருகிறது. இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவ வல்லுநர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜூன் 29) ஆலோசனையில் ஈடுபட்டார்.

அதில், ஐசிஎம்ஆர் துணைத் தலைவர் பிரதீப் கவூர், மருத்துவக் குழுவைச் சேர்ந்த குகானந்தம், ராம சுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். சுமார் 2 மணி நேரம் வரை நடந்த இக்கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், பரிசோதனை அதிகரிப்பு, ஊரடங்கு தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரதீப் கவூர், “கடந்த 2 வாரங்களில் சென்னையைத் தவிர திருச்சி, மதுரை, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களிலும் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளது. சென்னையைப் போல மற்ற மாவட்டங்களிலும் பரிசோதனையை அதிகரிக்க வேண்டுமென பரிந்துரைத்துள்ளோம்.

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பொதுமக்கள் அச்சம் கொள்கிறார்கள். சென்னையில் பாதிப்பு அதிகரித்தாலும் இரட்டிப்பாகும் விகிதம் குறைந்துள்ளது நன்மையாக உள்ளது. சில பகுதிகளில் கொரோனா தொற்று பரவல் குறைவாகிறது. உயிரிழப்புகளை தடுக்க வேண்டும், முன்கூட்டியே கொரோனா பாதிப்பை கண்டறிய வேண்டும் என்பதில்தான் எங்கள் கவனம் உள்ளது” என்று தெரிவித்தார்.

**

பொதுப் போக்குவரத்தால் கொரோனா பரவல்

**

ஊரடங்கு நீட்டிப்பை பரிந்துரைக்கவில்லை என்று தெரிவித்த பிரதீப் கவூர், “**ஊரடங்கு என்பது கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கான சிறந்த தீர்வு கிடையாது. எனினும், சில சமயங்களில் ஊரடங்கு தேவைப்படுகிறது. அனைத்து பகுதிகளிலும் ஊரடங்கை அமல்படுத்த வேண்டிய அவசியமில்லை.** கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்கினால் போதும். பொதுப் போக்குவரத்தின் காரணமாக பல மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் அதற்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் எனவும், பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டுமெனவும் பரிந்துரைத்துள்ளோம்” என்று தெரிவித்தார்.

பின்னர் பேசிய மருத்துவர் ராமசுப்பிரமணியம், “ஊரடங்கு என்பது பெரிய கோடாரியை எடுத்து கொசுவைச் கொல்வதற்கு சமமாகும். ஊரடங்கால் பலன்கள் கிடைத்துள்ளன என்பது உண்மைதான். ஆனால், இன்னும் 6 மாதங்களுக்கு ஊரடங்கை நீட்டித்துக்கொண்டே செல்வதால் எந்தப் பயனும் இல்லை” என்று தெரிவித்தார்.

மேலும், சமூக, பொருளாதார காரணங்களுக்காக ஊரடங்கை நீட்டிக்க முடியாது என்றும், கொரோனா குறித்து மக்கள் விழிப்புணர்வு கொள்ள வேண்டுமென மருத்துவர் குகானந்தம் தெரிவித்தார்.

**எழில்**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *