மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 5 ஜூலை 2020

போலீஸைத் தாக்கிய முன்னாள் எம்.பி!

போலீஸைத் தாக்கிய முன்னாள் எம்.பி!

போலீஸை முன்னாள் எம்.பி அர்ஜுனன் தாக்கிய சம்பவம் தொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில், மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்தை ரத்து செய்து இ-பாஸ் கட்டாயம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதனால் தமிழகம் முழுவதும் காவல் துறையினர் தீவிரக் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

சேலம் சுங்கச்சாவடி பகுதியில் ஓமலூரில் போலீசார் நேற்று இரவு இ-பாஸ் சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக சேலம் அழகாபுரம் பகுதியை சேர்ந்த தருமபுரி முன்னாள் மக்களவை உறுப்பினர் அர்ஜுனன் காரில் வந்தார். அவரது காரை காவல் துறையினர் தடுத்துநிறுத்தி விசாரணை நடத்தினர்.

அர்ஜுனன் தான் முன்னாள் எம்.பி என்று கூற அதற்கான ஆவணங்களை காவல் துறையினர் கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அர்ஜுனன், “நான் ஒரு முன்னாள் எம்.பி... என்னிடமே ஆவணம் கேட்கிறீர்களா” என்று கேட்டுள்ளார்.

அவரை சப் இன்ஸ்பெக்டர் காரிலிருந்து இறங்கச் சொல்ல, கீழே இறங்கியவர், “என்னை இறங்கச் சொல்லி என்னடா பன்னப் போற...அறஞ்சேன்னு வச்சுக்க..” என்று கடுமையான சொற்களால் திட்ட ஆரம்பித்தார். இதனை செல்போனில் வீடியோ எடுத்த காவல் துறையினரையும் மிரட்டினார்.

மரியாதையா பேசுங்க என்று சப்-இன்ஸ்பெக்டர் கூற, “ஏழு கழுதை வயசாகுது, பரதேசிப் பயலே...” என்று திட்டிவிட்டு காரில் ஏறி அமர்ந்து, “மறுபடியும் மறுபடியும் இறங்கினேன்...செருப்பு பிஞ்சிடும் பரதேசிப் பயலே...பிச்சைக்காரப் பயலே” என்று கடுமையான வார்த்தைகளால் அர்ச்சித்தார்.

நீதான் பிச்சைக்காரன் என சப் இன்ஸ்பெக்டர் திரும்பிக் கூற, மீண்டும் கீழே இறங்கி வந்த அவர், சப்-இன்ஸ்பெக்டரை தள்ளிவிட்டார். பதிலுக்கு அர்ஜுனனை சப்-இன்ஸ்பெக்டர் தள்ளிவிட இருதரப்புக்கும் மோதல் உண்டானது. பின்னர் சப்-இன்ஸ்பெக்டரை அர்ஜுனன் காலால் எட்டி உதைத்தார். அங்கு பணியில் இருந்த காவலர்கள் தலையிட்டு இருவரையும் சமாதானம் செய்தனர். பின்னர் அங்கிருந்து அர்ஜுனன் காரில் புறப்பட்டு செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

எழில்

திங்கள், 29 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon