மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 10 ஜூலை 2020

சிபிஐ விசாரணைக்கு முன்: திமுக நிபந்தனை!

சிபிஐ விசாரணைக்கு முன்: திமுக நிபந்தனை!

சாத்தான்குளம் சம்பவம் குறித்த சிபிஐ விசாரணை தொடர்பாக திமுக கோரிக்கை விடுத்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் விசாரணைக் கைதிகளாக அழைத்துச் செல்லப்பட்ட செல்போன் கடை வைத்திருக்கும் ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் உயிரிழந்தனர். தந்தை, மகன் இருவரும் காவல் துறை தாக்குதல் காரணமாகவே உயிரிழந்ததாக பலத்த கண்டனக் குரல்கள் எழுந்துள்ள இந்த நிலையில், சிபிஐ விசாரணைக்கு மாற்றவுள்ளதாகத் தெரிவித்துள்ளார் முதல்வர்.இதுகுறித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவித்து அதன் ஒப்புதலுடன் சிபிஐ வசம் இவ்வழக்கு ஒப்படைக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “பொதுமக்கள், அரசியல் கட்சிகள் மற்றும் ஊடகத்தினரின் கடும் அழுத்தத்தால் ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிபிஐ விசாரணைக்கு மாற்றியுள்ளார்.நீதி வழங்கும் அரசியல் துணிவும், முதுகெலும்பும் அரசுக்கு இருந்திருப்பின் உயிர்பறித்த காவல்துறையினர் இப்போதும் சுதந்திரமாக உலவ முடியுமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், இரு அப்பாவிகளின் உயிர் பறிக்கப்பட்டிருப்பதற்கும் அவர்களது குடும்பத்திற்கும் நீதி வழங்க வேண்டும் எனில், அவர்களின் கோரிக்கையை ஏற்று IPC 302-ன்கீழ் கொலை வழக்குப் பதிவு செய்து- சம்பந்தப்பட்ட காவல்துறை உதவி ஆய்வாளர்கள் & போலீசாரை உடனே கைது செய்ய வேண்டும்என்று கோரிக்கையும் விடுத்துள்ளார்.

திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், “நான் சிபிஐக்கு மாற்றிவிட்டேன். என் வேலை முடிந்தது’ என்று அரசு தன் பொறுப்பைத் தட்டிக்கழிக்க நினைக்கக்கூடாது. இது, இவ்வழக்கு குறித்துப் பரபரப்பாக விவாதித்து வரும் மக்களைத் திசைதிருப்பும் நடவடிக்கைதானே தவிர வேறொன்றுமில்லை” என்று கூறியுள்ளார்.

போலீசார் அடித்ததால்தான் ஜெயராஜ்-பென்னிக்ஸ் இருவரும் இறந்தனர் என்பதை அனைவரும் அறிவர். முதலில் கொலை வழக்குப் பதிவு செய்து, கொலைக்குக் காரணமானவர்களைக் கைது செய்யவேண்டும். அதன்பிறகே இவ்வழக்கை சிபிஐக்கு மாற்றவோ, சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்கவோ அரசு முடிவெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் உதயநிதி.

எழில்

திங்கள், 29 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon